சகலகலா வித்தகர் ராவ் சாகிப் ஆபிரகாம் பண்டிதர்: ஒரு பன்முக ஆளுமையின் வாழ்வு!

சகலகலா வித்தகர் ராவ் சாகிப் ஆபிரகாம் பண்டிதர்: ஒரு பன்முக ஆளுமையின் வாழ்வு!

ராவ் சாகிப் ஆபிரகாம் பண்டிதர் (1859-1919) என்பவர், தமிழ் இசை, மருத்துவம், இலக்கியம், விவசாயம் எனப் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய ஒரு பன்முக ஆளுமை. அவர் தமிழ் இசையின் தொன்மையை மீட்டெடுத்த முன்னோடி ஆய்வாளர். தனது வாழ்நாளில் தமிழ் கலைகளுக்கும் அறிவியலுக்கும் பெரும் பங்களிப்பைச் செய்தவர். பொதுவாகவே தமிழர் மனம் மறதி மிக்கது. அதிகமாகத் தமிழுக்கும் தமிழருக்கும் உழைத்தவர்கள்மீதான மரியாதையும் நன்றியும் இல்லாதது. அவர் மறைந்து நூறாண்டுகள் ஆகிவிட்டன. காற்றில் கரைந்த கீதம்போல அவரின் அளவிட முடியாத தமிழிசைக்கான கண்டுபிடிப்புகள் மறக்கப்பட்டன, மறைக்கப்பட்டன என்பது மிகக் கசப்பான வரலாற்று உண்மை.  முன்னரே குறிப்பிட்டிருந்த தமிழ் கற்பிக்கும் ஆசிரியர், வானியல் ஆய்வாளர், சோதிடர், மிகச்சிறந்த சித்த மருத்துவர், மருந்து உற்பத்தி நிபுணர், புத்தகப் பதிப்பாளர், அச்சக உரிமையாளர், புகைப்படக் கலைஞர், சிறந்த பாடலாசிரியர், பன்மொழிப் புலவர், இசைக்கருவி வடிவமைப்பாளர், விருது பெறும் அளவிற்கான வேளாண்மை விஞ்ஞானி என்ற பல்துறைகளிலும் புதிய கண்டுபிடிப்புகளுடன் தனக்கேயான ஆழமான முத்திரைகளைப் பதித்திருந்த இசைத் தமிழறிறிஞர் ஆபிரகாம் பண்டிதர் நினைவு நாளான இன்று அவரை பற்றி கொஞ்சமாவது அறிந்து கொள்வோம்.

தொடக்க வாழ்க்கை மற்றும் கல்வி

தென்காசிக்கு அருகிலுள்ள சாம்பவர் வடகரையில் பிறந்த ஆபிரகாம் பண்டிதர், ஆரம்பக் கல்வியை பங்களாச் சுரண்டையில் முடித்தார். பின் திண்டுக்கல்லில் உள்ள ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகத் தகுதி பெற்றார். அவரது பாட்டனார் ஒரு தமிழ் மருத்துவர் என்பதால், இயல்பாகவே அவருக்கு மருத்துவத்தில் ஆர்வம் இருந்தது. 1882-ல் ஞானவடிவு பொன்னம்மாளை மணந்து, தஞ்சாவூரில் குடியேறினார். அங்கு, சீமாட்டி நேப்பியர் பெண்கள் பாடசாலையில் தமிழ்ப் பண்டிதராகவும், அவரது மனைவி தலைமை ஆசிரியையாகவும் பணியாற்றி, அனைவரின் பாராட்டையும் பெற்றனர்.

மருத்துவப் பணி மற்றும் கண்டுபிடிப்புகள்

1879-ல் மூலிகைகள் நிறைந்த சுருளி மலைக்கு ஆய்வுப் பயணம் மேற்கொண்டபோது, கருணானந்த முனிவரைச் சந்தித்து, அவரை குருவாக ஏற்று சித்த மருத்துவ நுட்பங்களைக் கற்றறிந்தார். இந்த அனுபவம் அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

1890-க்குப் பிறகு முழுநேர சித்த மருத்துவரான அவர், “கருணானந்தர் சஞ்சீவி மருந்துகள்” என்ற பெயரில் மருந்துகளைத் தயாரித்து விநியோகித்தார். 1899-ல் தஞ்சாவூரில் “கருணானந்தபுரம்” என்ற தோட்டத்தை உருவாக்கி, அங்கே மூலிகைகளையும், விவசாய ஆய்வுகளையும் மேற்கொண்டார். பொதுமக்கள் அதை “பண்டிதர் தோட்டம்” என்று அழைத்தனர். அங்கு “கருணாநிதி மருத்துவக் கூடம்” என்ற கிளினிக்கையும் நடத்தி மக்களுக்குச் சிகிச்சை அளித்தார். அவரது கோரோசனை மாத்திரைகள் இந்தியா மட்டுமின்றி, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் புகழ் பெற்றிருந்தன.

ஜமீன்தாரர்களுக்கும் தங்கள் அடிவருடிகளுக்கும் மட்டுமே ஆங்கிலேயர்களால் கொடுக்கப்பட்ட ராவ்சாகேப் போன்ற பட்டம் ஒரு தமிழ்நாட்டு விவசாயிக்கு வேளாண்மைக் கண்டுபிடிப்பு களுக்காகக் கொடுக்கப்பட்டது என்பதை நம்ப முடிகிறதா? ஆம், அதிக சுவை கொண்ட ராஜகரும்பு எனும் புதிய கரும்பு வகையை உருவாக்கியதாலும், இயற்கை முறையில் விவசாயத்தில் அதிக உற்பத்தியைத் தரும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ததாலும் ஆங்கிலேய அரசு இந்தத் தஞ்சை விவசாயிக்கு ராவ்சாகிப் என்ற உயரிய பட்டத்தை வழங்கியது

தமிழ் இசைக்கான பங்களிப்பு

ஆபிரகாம் பண்டிதரின் மிகப்பெரிய பங்களிப்பு தமிழ் இசைக்குத்தான். அக்காலத்தில் கர்நாடக இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, தமிழ் இசை மரபுகள் மங்கிக் கொண்டிருந்தன. இந்த நிலையை மாற்ற விரும்பிய பண்டிதர், திண்டுக்கல் சடையாண்டி பட்டர், நாதஸ்வர வித்வான் போன்றவர்களிடம் இசை கற்றதுடன், ஐரோப்பிய இசையையும் கற்றுக்கொண்டார்.

தமிழ் இலக்கியங்களில் காணப்படும் இசைக் குறிப்புகளை ஆய்வு செய்து, அழிந்துபோன பழந்தமிழ் இராகங்கள், பண்கள் ஆகியவற்றை மீட்டெடுத்தார். சிலப்பதிகாரத்தில் உள்ள இசை இலக்கணங்கள் இன்றைய கர்நாடக இசையின் அடிப்படைகளாக இருப்பதை அவர் சுவர ஆய்வுகள் மூலம் நிரூபித்தார்.

1912-ல் “சங்கீத வித்யா மகாஜன சங்கம்” என்ற அமைப்பை நிறுவினார். பழந்தமிழ் இசை வடிவமே இந்தியாவின் பல பகுதிகளில் பல்வேறு வடிவங்களில் இசைக்கப்படுகிறது என்பதை நிரூபிப்பதற்காக, முதன்முதலாக அகில இந்திய இசை மாநாட்டை தஞ்சாவூரில் நடத்தினார். 1912-ம் ஆண்டு ‘சங்கீத வித்யா மகாஜன சங்கத்தை’ நிறுவினார். சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் இசை குறித்த செய்திகள் இன்றைய கர்னாடக இசையில் மூல இலக்கணங்களாக இருப்பதைப் பண்டிதர் சுட்டிக் காட்டினார். இதன்மூலம் தமிழிசையே இன்று தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் பல வடிவங்களில் வழங்கி வரும் இசை என்று நிரூபித்தார். ஐரோப்பிய இசைமேதை பேராசிரியர் தஞ்சை ஏ.ஜி.பிச்சைமுத்துவிடம் மேற்கத்திய இசை பயின்றார்.

கருணாமிர்த சாகரம்

ஆபிரகாம் பண்டிதரின் வாழ்நாள் உழைப்பின் உச்சம், “கருணாமிர்த சாகரம்” என்ற ஆய்வு நூல். 1395 பக்கங்கள் கொண்ட இந்த நூல், தமிழ் இசை வரலாறு, இலக்கணம், இராகங்கள், இசைக்கருவிகள், மற்றும் இசையமைப்பாளர்கள் பற்றிய ஒரு கலைக்களஞ்சியமாகும். இதில் அவர் எழுதிய, இசையமைத்த 95 பாடல்களும் இடம்பெற்றுள்ளன. இந்த நூல் இன்றும் தமிழிசை ஆய்வுகளுக்கு ஒரு மூல நூலாகக் கருதப்படுகிறது.

மூலிகை சித்தர்

தமிழ்நாட்டின் பாரம்பர்ய மருத்துவங்களில் ஒன்றான மூலிகை மருத்துவத்தில் பயிற்சி பெற்று, சிறந்த மருத்துவராக திகழ்ந்தார். 1879-ல் மூலிகை மலையான சுருளிமலைக்குச் சென்று, கருணானந்த முனிவர் என்பவரிடம் மூலிகைகளின் மருத்துவத் தன்மைகளைக் கற்றறிந்தார். திருமணத்துக்குப் பிறகு 1886-ல் தஞ்சாவூரில் குடியேறினார். தமிழ் மருத்துவத்தில் அளவு கடந்த ஆர்வம் கொண்டிருந்ததால், தஞ்சாவூரின் புறநகர்ப் பகுதியில் 100 ஏக்கர் நிலம் வாங்கி, அதில் பெரிய மூலிகைப் பண்ணையை உருவாக்கினார். இன்றளவு தஞ்சை மக்கள் மத்தியில் அது பண்டிதர் தோட்டம் என நினைவுகூரப்படுகிறது. மூலிகைகளைப் பயன்படுத்தி ‘கருணானந்தர் சஞ்சீவி மருந்துகள்’ என்ற பெயரில் பல்வேறு சித்த மருந்துகளைத் தயாரித்தார். இவர் தயாரித்த கோரசனை மாத்திரை, இந்தியாவில் மட்டுமல்லாமல், இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இலக்கியப் பணி மற்றும் இறப்பு

மருத்துவம், இசை மட்டுமன்றி, ஆபிரகாம் பண்டிதர் ஒரு கவிஞரும் ஆவார். அவர் “நன்முறை காட்டும் நன்னெறி” என்ற கிறித்தவ சமய நூலையும் எழுதினார். அவர் வறுமையில் வாடியபோது இறைவனை நோக்கிப் பாடிய பாடல்களும், விவிலிய நிகழ்வுகளை விவரித்து எழுதிய பாடல்களும் அவரது ஆழ்ந்த பக்தியையும், இலக்கியப் புலமையையும் காட்டுகின்றன. ஆபிரகாம் பண்டிதர் 1919 ஆகஸ்ட் 31 அன்று காலமானார். அவர் அடக்கம் செய்யப்பட்ட “பண்டிதர் தோட்டம்” இன்றும் அவரது பன்முக ஆளுமைக்கு சான்றாக நிற்கிறது.

மொத்தத்தில் ராவ் சாகிப் ஆபிரகாம் பண்டிதர், தமிழின் தொன்மைமிக்க இசை மரபைக் காத்த ஒரு பாதுகாவலர். அவரது கடும் உழைப்பும், ஆய்வும், தமிழிசைக்கு ஒரு புதிய பொலிவையும் மரியாதையையும் பெற்றுத் தந்தன. அவர் ஒரு சகலகலா வல்லவராக வாழ்ந்து, தமிழ் கலை மற்றும் அறிவியலுக்குத் தன் வாழ்வை அர்ப்பணித்த மகானிவர்.

நிலவளம் ரெங்கராஜன்

Related Posts