பாடாய் படுத்தும் பார்க்கிங் பிரச்னை!
இன்றைய நவீன உலகில் கார் என்பது ஆடம்பரப் பொருள் என்ற நிலையிலிருந்து மாறி, அத்தியாவசியத் தேவையாகிவிட்டது. முன்னரெல்லாம் உணவு, உடை, இருப்பிடம் ஆகிய மூன்றே அடிப்படைத் தேவைகளாகக் கருதப்பட்டன. ஆனால் இன்று, அந்தப் பட்டியலில் ‘வாகன நிறுத்துமிடம்’ (Parking Space) நான்காவதாக இணைந்துள்ளது. கார் வாங்கும் ஆர்வத்தில் பலரும் அதை எங்கே நிறுத்துவது என்பதை யோசிப்பதே இல்லை. இதன் விளைவாக, பொதுச் சாலைகள் இன்று கார் நிறுத்தங்களாக மாறிக்கொண்டிருப்பது கவலைக்குரிய விஷயமாகியுள்ளது.
சுருங்கும் சாலைகளும் பெருகும் வாகனங்களும்
நகரமயமாக்கலின் வேகத்தில் சாலைகள் சுருங்கி வரும் வேளையில், வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் ஆண்டுக்கு ஆண்டு பெருகிக்கொண்டே போகிறது. தமிழகத்தில் மட்டும் ஆண்டுதோறும் சுமார் இரண்டு லட்சம் புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. 30 அடி சாலைகளிலும், முட்டுச் சந்துகளிலும் இருபுறமும் கார்கள் அணிவகுத்து நிற்பதால், அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் அல்லது தீயணைப்பு வாகனங்கள் நுழைய முடியாத அவலநிலை ஏற்படுகிறது. நம்முடைய ஒரு நிமிட அலட்சியம், ஒருவரின் உயிரிழப்பிற்குக்கூட காரணமாகிவிடுகிறது.

பழைய குடியிருப்புகள்: மாறாத கட்டமைப்பு
20 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் கார் நிறுத்தத்திற்குப் போதிய வசதிகள் இல்லை. அப்போது கார் வைத்திருப்பவர்கள் குறைவாக இருந்ததே இதற்குக் காரணம். ஆனால் இன்று அங்கு வசிப்பவர்கள் வேறு வழியின்றி தெருக்களையே நாடுகிறார்கள். “வீட்டு வாசலில் நிறுத்த அனுமதி இல்லை” என்று உரிமையாளர்கள் போர்டு வைத்தாலும், அதை மதிக்காமல் மற்றவர் வாசலில் காரை நிறுத்திவிட்டுச் செல்பவர்களால் தினசரி சண்டைகளும், மன அழுத்தமும் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது.
மேலைநாடுகள் கற்றுத்தரும் பாடம்
லண்டன் போன்ற மேலைநாடுகளில் வாகன நிறுத்தம் குறித்த விதிகள் மிகக் கடுமையானவை. அங்கு ‘மஞ்சள் கோடு’ விதிகள் மிகத் தெளிவாகப் பின்பற்றப்படுகின்றன. ஒற்றை மஞ்சள் கோடு இருந்தால் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே நிறுத்தலாம்; இரட்டை மஞ்சள் கோடு இருந்தால் எந்நேரமும் நிறுத்த அனுமதி இல்லை. அங்கு ஒரு நிமிடம் தாமதமானாலும் அபராதம் மிகப்பெரிய தொகையாக இருக்கும். ஒரு கார் நிறுத்துமிடத்தைத் தேடுவதற்கே ஒரு வாகன ஓட்டி ஆண்டுக்குச் சராசரியாக 67 மணி நேரத்தைச் செலவிடும் அளவுக்கு அங்கு சட்டங்கள் இறுக்கமாக உள்ளன. நம் ஊரில் நிலவும் “யார் பார்க்கப்போகிறார்கள்?” என்ற அலட்சிய மனநிலைதான் விபத்துகளுக்கும் நெரிசலுக்கும் வித்திடுகிறது.
என்னதான் தீர்வு?
இந்த நெருக்கடிக்குத் தீர்வு காண அரசு மற்றும் பொதுமக்கள் என இருதரப்பிலும் மாற்றங்கள் தேவை:
-
கடுமையான சட்டங்கள்: சொந்தமாக வாகன நிறுத்துமிடம் இருந்தால் மட்டுமே புதிய கார் வாங்குவதற்கான உரிமம் வழங்கப்படும் என்ற சட்டத்தைக் கொண்டுவருவது பற்றி அரசு தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும்.
-
பல்லடுக்கு வாகன நிறுத்தங்கள்: வணிக வளாகங்கள், உணவகங்கள் உள்ள பகுதிகளில் பல்லடுக்கு வாகன நிறுத்தங்களை (Multilevel Parking) அரசு கட்டாயமாக்க வேண்டும். சுற்றுலாத் தலங்களிலும், பெரிய கோயில்களிலும் நான்கு வாயில்களிலும் இத்தகைய வசதிகளைச் செய்து, அங்கிருந்து பேட்டரி கார்கள் மூலம் மக்களை அழைத்துச் செல்லலாம்.
-
தொழில்நுட்ப உதவி: கைப்பேசி செயலிகள் வழியாக நகரில் எந்தெந்த இடங்களில் பார்க்கிங் காலியாக உள்ளது என்பதை மக்கள் முன்கூட்டியே அறியும் வசதியை ஏற்படுத்தலாம்.
-
அரசியல் வாக்குறுதிகள்: இலவசங்களைக் கொடுப்பதைவிட, ஐந்து தெருக்களுக்கு ஒரு பொது பல்லடுக்கு வாகன நிறுத்தம் அமைத்துத் தருவதை அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்க வேண்டும்.
நாகரிகத்தின் அடையாளம்
தெருக்கள் என்பது மக்கள் நடப்பதற்கும், போக்குவரத்துக்கும் மட்டுமே. அதைச் சொந்தச் சொத்தாகக் கருதி ஆக்கிரமிப்பது சட்டப்படி மட்டுமல்ல, தார்மீக ரீதியாகவும் தவறானது. நாம் வாங்கும் கார் நம் செல்வாக்கின் அடையாளம் என்றால், அதை அடுத்தவருக்கு இடையூறின்றிச் சரியான இடத்தில் நிறுத்துவதே நம் நாகரிகத்தின் அடையாளம்!
தமிழ்செல்வி


