ஐரோப்பிய பொருளாதாரத்தை வீழ்த்தும் நேட்டோ ராணுவம்!

ஐரோப்பிய பொருளாதாரத்தை வீழ்த்தும் நேட்டோ ராணுவம்!

மெரிக்காவின் வழிகாட்டுதலில் நேட்டோ (NATO) ராணுவக் கூட்டணியின் சமீப நடவடிக்கைகள் அனைத்துமே ரஷ்யாவை வீழ்த்த வழி காண்பது மட்டுமே என்று தெரிகிறது. உக்ரைனில் அமைதியை நிலைநாட்டப் போகிறோம் என்றார்கள் அல்லவா? அதாவது உக்ரைனில் அமைதி திரும்ப நடவடிக்கைகள் என்ன எடுத்தார்கள்? அதைக் கேட்கும் அதிகாரம் ஐநா சபைக்கு நிச்சயம் இருக்கிறது. ஆனால் இதுவரை அமெரிக்காவின் கூட்டாளிகளான நேட்டோ நாடுகள் ரஷ்யாவை வீழ்த்த எடுத்து வரும் முயற்சிகள் உலக வரலாற்றை மாற்றியமைக்கும் நடப்புகளாக மாறி இருக்கிறது.

இப்படி நேரடியாக நேட்டோ நாடுகள் போரில் ஈடுபட ஆரம்பித்தால் ஒரு கட்டத்தில் ரஷ்யா திரும்பத் தாக்க வேண்டிய நிலை ஏற்படத்தானே செய்யும்!

ஜெர்மனியும் போலந்தும் நேட்டோ நாடுகள் கூட்டமைப்பின் ராணுவத் தளவாடங்களை அதிகரிக்கச் செய்து வருகிறது, அவை ரஷ்யா மீது தாக்குதலுக்கு உரிய பகுதிகளுக்குச் சென்றடைய செய்வதிலும் மும்முரமாகவே இருப்பதை வல்லுநர்கள் சுட்டிக்காட்டி வருகிறார்கள்.

இது ஐரோப்பிய பொருளாதாரத்தை புரட்டிப்போட்டு அப்பாவி மக்களை பாதிக்கும் நடப்புகளை நிதர்சனமாக்கி வருகிறது.

உக்ரைனில் போர் 17 வது மாதத்தையும் தாண்டி விட்டது. ரஷ்யாவை தண்டிக்க அமெரிக்காவின் உத்தரவின்படி ஐரோப்பிய யூனியன் ரஷ்யா மீது பொருளாதார தடையையும் அறிவித்தது.

ரஷ்யாவின் பொருட்களை வாங்குவதைப் புறக்கணிக்கத் துவங்கி 17 மாதங்கள் ஆகி விட்டது.

அதாவது ஐரோப்பாவின் பொருளாதார வல்லரசு நாடுகளாக இருக்கும் ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகள் ரஷ்யாவின் எரிவாயு முதல் மற்ற பொருள்கள் எதையும் வாங்க மாட்டோம் என்று முடிவு செய்தன.

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வளம் நிரம்ப உண்டு, வைரமும் அதிக அளவில் சுரங்கங்களில் இருந்து வெளி எடுக்கப்பட்டு ஐரோப்பிய பணக்காரர்களுக்கு விற்கப்படுகிறது.

ஆனால் கடந்த 17 மாதங்களாக ஜெர்மனி போன்ற நாடுகள் எரிசக்தி உபயோகத்திற்கு குறைந்த விலையில் வாங்கி வந்த ரஷ்யாவின் இறக்குமதிகளை நிறுத்தி விட்டு அமெரிக்காவின் சொற்படி விலை அதிகமாக இருந்தும் அவர்கள் நாட்டு சர்வதேச நிறுவனங்களிடம் வாங்கியாக வேண்டிய கட்டாயத்தில் பொருளாதாரம் சரிவைச் சந்தித்து வருகிறது.

கொரோனா சிக்கலில் இருந்து விடுபட ஆரம்பித்த நிலையில் உக்ரைனின் யுத்தக் காட்சிகளுக்கிடையே ஐரோப்பிய நாடுகள் பொருளாதார மீட்சிக்கு தயாராக வேண்டிய கட்டத்தில் இப்படிக் குறைந்த விலையில் வாங்கி வந்த எரிசக்தியை புறக்கணித்து விட்டு அமெரிக்க கெடுபடி அரசியலில் சிக்கி அதிக விலை கொடுத்து வாங்க கொண்டிருக்கிறது.

ஜெர்மனியின் பொருளாதாரம் உற்பத்தியை சார்ந்து இருப்பதால் ஐரோப்பிய பொருளாதாரத்தின் அடித்தளமாகவே இருப்பது தான் உண்மை.

2022 முடிவில் உற்பத்தி சரிவு ஏற்பட்டது. இவ்வருட முதல் 3 மாத பொருளாதார அறிவிப்புகளில் உற்பத்தி மேலும் சரிவைச் சந்தித்துள்ளது.

இந்த நிலையில் அதிக விலை கொடுத்து எரிசக்திக்குத் தேவையான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து கொள்ளும் பரிதாபம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலை நீடிப்பதால் பொருளாதார மந்த நிலையில் ஜெர்மனி மிகப்பெரிய பாதகத்தை சந்திக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்து வருகிறார்கள்.

சர்வதேச நிதியகம் ஐரோப்பிய யூனியனின் தவறான முடிவுகளால் பொருளாதாரச் சரிவில் சிக்கித் தவிக்கிறது. ஆனால் ஐரோப்பிய யூனியனை விட்டு வெளியேறிவிட்ட இங்கிலாந்து மெல்ல உக்ரைனிய தலைவலியிலிருந்து தள்ளி நின்று தனது பொருளாதாரச் சரிவை நிலை நிறுத்திக் கொண்டு பொருளாதார சிக்கலிலிருந்து தப்பித்துக் கொள்ள வழி உண்டு என்று கூறுகிறார்கள்.

மொத்தத்தில் நேட்டோ ராணுவம் முடிவால் ரஷ்யாவை வீழ்த்துகிறார்களோ இல்லையோ, ஐரோப்பிய யூனியனின் முன்னணி பொருளாதரங்கள் சீர்குலைந்து தவித்துக் கொண்டிருக்கிறது.

ஆர். முத்துக்குமார்

error: Content is protected !!