கரையான்களால் அரிக்கப்பட்டு தள்ளாடும் நிலையில் ஊடகத்தினர்!

கரையான்களால் அரிக்கப்பட்டு தள்ளாடும் நிலையில் ஊடகத்தினர்!

னநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான ஊடகத்துறையினரின் இன்றைய போக்கு மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. ஒவ்வொரு ஊடகம், பத்திரிக்கை ஏதாவது ஒரு அரசியல் கட்சி பின்புலத்தை கொண்டுதான் செயல்பட்டு வருகிறது என்பது அனைவரும் நன்கு அறிவார்கள். நடுநிலை ஊடகங்கள் என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணிவிடலாம், ஒரு சில காலங்களில் ஊடகங்கள் சுதந்திரமாகவும், உண்மைகளை உரக்கச் சொல்லியும் எந்தவித அச்சுறுத்தலுக்கும் இடம் கொடுக்காமல் செயல்பட்டு வந்தது. அதனால் பல தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அதிகாரிகள் முதல் ஆட்சி மாற்றங்கள் வரை ஏற்பட்டது என்பதை இந்த நாடு அறியும்.

ஆனால் காலங்கள் செல்ல செல்ல ஊடகங்களும் பத்திரிகைகளும் பெரும் செல்வந்தர்கள் மட்டுமே பெருமைக்காக நடத்தக் கூடிய ஒரு கருவியாக பயன்பட்டு வருகிறது என்பதை மறுக்க முடியாது. அதன் பிறகு அரசியல் கட்சிகள் பெருகப்பெருக அமைப்புகள் பெருகப்பெருக அவர்களுடைய அருமை பெருமைகளை மக்களுக்கு சொல்வதற்காக ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் ஒவ்வொரு அமைப்புகளும் தங்களுக்கு என்று ஒரு ஊடகம்,பத்திரிக்கையை துவக்கி அதில் அவருடைய கருத்துக்களையும், அவர்களுக்கு வேண்டாதவர்களை பற்றி எதிர் கருத்துகளையும் பரப்பி வருவது இன்றளவும் நடந்து வருகிறது. இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இதில் முழுக்க முழுக்க பாதிக்கப்பட்டது பத்திரிகையாளர்கள் தான். ஒவ்வொரு பத்திரிகையாளர்களும் ஊடகம் மற்றும் கட்சி சார்ந்த பத்திரிகைகள், ஊடகங்களில் பணிபுரியும் போது அந்த பத்திரிக்கையாளர்களும் அந்த கட்சியை சார்ந்தவர்கள் ஆகவே மற்றவர்களால் பார்க்கப்படுகிறார்கள். தான் சார்ந்த கட்சியினர் செய்யும் தவறுகளையும், செயல்களையும் சுட்டிக்காட்டவும் செய்திகளாக வெளியிட முடியாத ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

இது ஒருபுறம் இருந்தாலும் கட்சி சார்ந்த கூட்டங்கள் விழாக்கள் நடைபெறும்போது எதிர் கட்சி சார்ந்த ஊடகங்களை உள்ளே விட மறுப்பது, அவமதிப்பது போன்ற செயல்களும் நடந்து வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் அந்தந்த அரசியல் கட்சி ஊடகங்களில் பணிபுரியும் ஒரு சில பத்திரிகையாளர்கள் அந்த அரசியல் கட்சி தொண்டர்களை விட ஒரு படி மேலே போய் மற்ற பத்திரிக்கையாளர்களை இழிவாக பார்ப்பதும், தனக்கு வேண்டிய பத்திரிகையாளர்களுக்கு மட்டும் அழைப்பு விடுப்பது இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது ஒரு வேதனைக்குரிய விஷயமாகும்.

அதுவும் தேர்தல் போன்ற நேரங்களில் சொல்ல வேண்டியதே இல்லை ஒவ்வொரு பத்திரிக்கையாளர்களும் தான் சார்ந்த அரசியல் கட்சிகளுக்கு பிரச்சார பீரங்கிகள் ஆகவே மாறிக்கொண்டு தங்களுடைய கட்சி செய்திகளை சமூக வலை தளங்களிலும், வாட்ஸ் ஆப் குழுக்களிலும் யார் முதலில் பதிவு செய்வது என்று ஒரு மிகப் பெரிய போராட்டத்தையே நடத்தி வருகின்றனர். இவர்களால் நடுநிலை பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் நிலை தான் தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கப்பட்டு உள்ளது.

அதே போன்று ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்கள் சார்ந்த பத்திரிகை ஊடகங்களுக்கு மட்டும் விளம்பரங்களை அளிப்பது, நடுநிலை சார்ந்த பத்திரிகைகளுக்கு எந்தவிதமான விளம்பரங்களும் தராமல் இருப்பதால் அந்தப் பத்திரிகைகள் பெரும் இழப்பை சந்திக்க கூடிய ஒரு சூழல் உருவாகி வருகின்றது. எனவே வரும் காலங்களில் ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகள் தாங்கள் நான்காம் தூண்களில் ஒரு அங்கம் என்பதை உணர்ந்து அனைவரும் சமம் என்பதை நினைத்து செயல்பட்டால் நான்காம் தூண் காக்கப்படும், இல்லை என்றால் கரையான்கள் அரிக்கப்பட்டு தள்ளாடகூடிய ஒரு நிலைக்கு சென்றுவிடும் என்பது மட்டும் உண்மை.-

நிலவளம் ரெங்கராஜன்

error: Content is protected !!