ஐதராபாத்தில் வரும் மே 31ல்- 72வது உலக அழகி இறுதிப் போட்டி!
நடப்பு மே மாதம் 31ந் தேதி அன்று ஐதராபாத்தில் உள்ள ‘ஹைட்டெக்ஸ்’ கண்காட்சி மையத்தில் 72வது உலக அழகி இறுதிப் போட்டி நடைபெறுகிறது. 120க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியை இந்தியா தொடர்ந்து ௨வது ஆண்டாக நடத்துகிறது. இந்தப் போட்டியின் முடிவில், நடப்பு உலக அழகி ‘செக்’ குடியரசின் கிறிஸ்டினா பிஸ்கோவா, தனது வாரிசுக்கு முடிசூட்டுவார். இதன் பொருட்டு மே 10ந் தேதி முதல் 31ந் தேதி வரை ஐதராபாத்தில் 72வது உலக அழகி போட்டிகளை நடத்துவதற்கான விரிவான செயல் திட்டத்தை முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் மாநில அரசு தயாரித்துள்ளது.இந்த அழகிப் போட்டி மாநில வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைய உள்ளது. மேலும் தெலுங்கானாவிற்கு பெரிய அளவிலான முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஒரு பொன்னான வாய்ப்பாக இதைப் பயன்படுத்த அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.

‘மிஸ் வேர்ல்ட் லிமிடெட்’ தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜூலியா ஈவ்லின் மோர்லி, மிஸ் வேர்ல்ட் கெர்ரி மற்றும் பிற பிரதிநிதிகள் கடந்த 2ந் தேதி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்த ‘மெகா’ நிகழ்வில் சுமார் 120 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்பார்கள் என்றும், 8ந் தேதி வரை ஐதராபாத்தை வந்தடைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பாரம்பரிய நடைப்பயணம்
உலக அழகி போட்டிகளில் பங்கேற்கும் போட்டியாளர்கள் மே 12 ஆம் தேதி நாகார்ஜுன சாகரில் உள்ள புத்தவனம் திட்டம் மற்றும் புத்த தீம் பார்க்கிற்கு வருகை தருவார்கள். புத்த ஆன்மீக சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து, சார்மினார் மற்றும் லாட் பஜாரில் ஒரு பாரம்பரிய நடைப்பயணம் ஏற்பாடு செய்யப்படும்.
ஐதராபாத்தின் கலாச்சார பாரம்பரியத்தின் செழுமையை எடுத்துக்காட்டும் வகையில், போட்டியாளர்கள் 13ந் தேதி அன்று சௌமஹல்லா அரண்மனையைப் பார்வையிட அழைத்துச் செல்லப்படுவார்கள்.
14ந் தேதி, முதல் குழு ஆயிரம் தூண் கோயில் மற்றும் வாரங்கல் கோட்டை போன்ற வரலாற்று மற்றும் ஆன்மீக தளங்களைப் பார்வையிடும்; இரண்டாவது குழு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான ராமப்பா கோயிலைப் பார்வையிடும்.
15ந் தேதி, முதல் குழு யாதகிரிகுட்டா கோயிலுக்குச் செல்லும், இரண்டாவது குழு போச்சம்பள்ளியில் கைத்தறி நெசவு மற்றும் செயல்விளக்கங்களை ஆராய்வார்கள்.
16ந் தேதி ஏஐஜி மருத்துவமனையில் மருத்துவ சுற்றுலா நிகழ்வு நடைபெறும். பின்னர், போட்டியாளர்கள் மஹ்பூப்நகரில் உள்ள பழமையான பில்லாமரி மரத்தையும் எக்ஸ்பீரியம் சுற்றுச்சூழல் பூங்காவையும் பார்வையிடுவார்கள்.
விளையாட்டுப் போட்டி,ராமோஜி ஃபிலிம் சிட்டி
உலக அழகி விளையாட்டு இறுதிப் போட்டிகள் இம்மாதம் 17ந் தேதி கச்சிபவுலி உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும். இதைத் தொடர்ந்து, போட்டியாளர்கள் ராமோஜி திரைப்பட நகரத்தைப் பார்வையிடுவார்கள். 18ந் தேதி குடிமக்கள் பாதுகாப்பு குறித்த அரசாங்க முயற்சிகளைக் கண்காணிக்க போட்டியாளர்கள் தெலுங்கானா காவல்துறை ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தைப் பார்வையிடுவார்கள். தெலுங்கானாவின் வளர்ச்சிக் கதை மற்றும் வரலாறு குறித்து அதிகாரிகள் அவர்களுக்கு விளக்குவார்கள்.
கான்டினென்டல் ஃபினாலே ஃபாஸ்ட்-டிராக் பிராந்திய கிளஸ்டர் அடிப்படையிலான தேர்வுகள் 20 மற்றும் -21ந் தேதிகளில் நடைபெறும். முதல் குழு ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்ளும், இரண்டாவது குழு ஷில்பாராமத்தில் கைவினைஞர்களால் நடத்தப்படும் கலை மற்றும் கைவினைப் பட்டறையில் கலந்து கொள்ளும்.
மிஸ் வேர்ல்ட் டேலண்ட் இறுதிப் போட்டி 22ந் தேதியும், நேரடிப் போட்டி மே 23 ஆம் தேதி நடைபெறும். போட்டியாளர்கள் 24ந் தேதி நடைபெறும் சிறந்த மாடல், ஃபேஷன் இறுதிப் போட்டி மற்றும் நகை/முத்து விளக்கக்காட்சியில் பங்கேற்பார்கள். 26ந் தேதி அழகிகள் தங்கள் சமூக திட்டங்களை வெளியிடுவார்கள். இறுதிப் போட்டி 31ந் தேதி மாலை 5.30 மணிக்கு சிவப்பு கம்பள வரறே்புடன் துவங்கும். இரவு 10 மணி முதல் அதிகாலை 1 மணி வரை முடிசூட்டு விழா உள்ளிட்ட கிராண்ட் ஃபினாலே ஹைடெக்ஸில் நடைபெறும்.
கவர்னர், முதலமைச்சருடன் சந்திப்பு
ஜூன் 2ந் தேதி புதிதாக முடிசூட்டப்பட்ட உலக அழகி மற்றும் பிற பட்டங்களை வென்றவர்கள் தெலுங்கானா மாநில உருவாக்க தினத்தை முன்னிட்டு ராஜ்பவனில் தெலுங்கானா கவர்னர் மற்றும் முதலமைச்சருடன் முறையான சந்திப்பு மற்றும் தேநீர் விருந்துடன் தங்கள் பயணத்தை முடிப்பார்கள்.


