தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகத்தில் முதல்வர் உள்பட முக்கியஸ்தர்கள் கலந்துக் கொள்ளாதது ஏன்?

தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகத்தில் முதல்வர் உள்பட முக்கியஸ்தர்கள் கலந்துக் கொள்ளாதது ஏன்?

நம்மூரில் முட்டு சந்தில் இருக்கும் முருகன் கோயிலில் ஒரு விழா என்றாலே ஆட்சி அதிகார வர்க்கத்தின் அலப்பரை அதிகமாக இருக்குமே? ஆனா ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அசராமல் கம்பீரமாக நிற்கும் தஞ்சாவூர் பெரிய கோயில் கும்பாபிஷேகத்தில் முதல்வர் உள்ளிட்ட எந்த அமைச்சரும், உயர் அதிகாரிகளையும் காணோமே.. ஏன்? என்று சிலர் கேள்வி இன்னமும் கூட எழுப்புகிறார்கள்.. உண்மைதான் கி.பி 1006ஆம் ஆண்டில் மாமன்னர் ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டு 1000 ஆண்டுகள் கடந்த பின்பும் கூட, இன்றைக்கும் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் கம்பீரமாக நிற்கிறது தஞ்சை பெருவுடையார் கோயில். உலகம் முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் தினமும் வந்த இந்த கோயிலை பார்த்து பிரமித்த வண்ணம் உள்ளனர். ஆனால் இந்திய அரசியல்வாதிகளுக்குத்தான் இந்த கோவிலுக்குள் நுழைய அச்சமாக இருக்கிறது. காரணம் கடந்த 50 ஆண்டுகாலமாக நிலவும் நம்பிக்கைதான்.

கொஞ்சம் விளக்கமாகச் சொல்வதானால் னெஸ்கோவால், உலக பாரம்பரிய சின்னம் என, அறிவிக்கப்பட்டு, உலக அளவில், பிரசித்த பெற்றது, தஞ்சை பெரிய கோவில். பிரம்மாண்டமான இந்த கோவிலுக்குள் கேரளந்தான் நுழைவு வாயில், ராஜராஜன் நுழைவு வாயில் வழியாக, மூலவர் பெருவுடையாருக்கு எதிரே உள்ள படி வழியாக வந்து தரிசிப்பவர், பிரபலமானவராக இருந்தால், அவர் பதவி அல்லது உயிர் பறிபோகும் என்பது சென்டிமென்ட். இங்கு வந்து சென்ற பின், அவர்கள் உயரிய பொறுப்பை, ருசித்ததில்லை. இப்படியொரு சென்டிமென்ட் காலம் காலமாக இருந்து வருகிறது . இந்த பட்டியலில், முன்னாள் ஜனாதிபதிகள் ஜெயில்சிங், எஸ்.டி.சர்மா, முன்னாள் பிரதமர் இந்திரா, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், கருணாநிதி என, பலரும் அடங்குவர்.

1976ம் ஆண்டு தஞ்சை பெரிய கோவிலில் ராஜ ராஜ சோழன் சிலை வைக்க வேண்டும் என்று மத்திய அரசுடன் மோதினார் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி. சிலையை உள்ளே வைக்க மத்திய அரசு அனுமதி மறுத்தது. நினைவுச் சின்னமாக தொல்பொருள் இலாகாவால் பாதுகாக்கப்படும் கோயில் அது. புதிய சிலை ஒன்று வைப்பதற்கு அதற்கான சட்டத்தில் வழி இல்லை” என்று காரணம் கூறியது. அதே நேரத்தில் கோயிலுக்குள் உள்ள வராஹி அம்மனுக்கு புது மண்டபம் எழுப்பி, முதலில் அதற்குக் குடமுழுக்குச் செய்ய நினைத்திருந்தார்கள். புதிதாக ராஜ ராஜன் சிலை கோயில் உள்ளே வைக்கக் கூடாது என்றால் வராஹி அம்மனுக்கு மட்டும் புதிதாக மண்டபம் கட்டலாமா? சட்டம் அதற்கு மட்டும் இடம் தருகிறதா?” என்று கருணாநிதி தரப்பிலிருந்து இதைச் சுட்டிக் காட்டிக் கேள்வி எழுப்பப் பட்டது. இதனால் வராஹி அம்மனின் புதிய மண்டபத்தை இடிக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்தப் பிரச்சினை கிளம்பிய சிறிது காலத்திற்குள் கருணாநிதி அரசு பல பிரச்சினைகளைச் சந்திக்க நேர்ந்தது. கடைசியில் அவரது ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அதில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், வராஹி அம்மனின் புதிய மண்டபம் இடித்து முடிக்கப்பட்ட அன்றுதான் அதாவது 1976 ஜனவரி 31ம் தேதிதான் தி.மு.க ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்ட சம்பவம் நடந்தது என்கின்றனர் வரலாறு அறிந்தவர்கள். எமர்ஜென்ஸியை அடுத்து வந்த தேர்தலில் வராஹி அம்மன் மண்டபத்தை இடிக்க உத்தரவிட்ட பிரதமர் இந்திராவும் தோற்றுப் போய், அவரது ஆட்சியும் போனது. பெரிய கோயில் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட இரு தலைவர்களும் இப்படி பாதிக்கப் பட்டது முதல் நிகழ்ச்சி என்கிறார்கள் ஊர் மக்கள்.

மேலும் ராஜ ராஜ சோழனின் ஆயிரமாவது முடிசூட்டு வைபவத்திற்கு வரும்போதுதான் தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் கோயிலேயே சற்று மயக்கம் அடைந்தார். அதன் பிறகு சில நாட்களில் முதல்வரின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. அப்போதைய இந்திரா காந்தியின் எதிர்பார்க்காத சோக மரணமும் நிகழ்ந்தது.

கோவிலுக்குள் போனால் ஒன்று பதவி பறிபோகும் இல்லாவிட்டால் உயிர் போகும் என்ற அச்சத்தையும் மோசமான சென்டிமென்ட்டையும் உடைக்கிறேன் என, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பெரிய கோவிலின், 1,000வது ஆண்டு விழா கொண்டாடினார், அப்போதைய முதல்வர் கருணாநிதி. அந்த விழாவில், ஆ.ராசா, கனிமொழி, கோ.சி.மணி, பழனிமாணிக்கம் உட்பட தி.மு.க.,வின் பலரும் கலந்து கொண்டனர். அடுத்தடுத்த ஆண்டுகளில் அத்தனைபேரின் பதவியும் பறிபோனது. திகார் சிறை வரைக்கு சென்று வந்தனர் கனிமொழியும் ஆ. ராசாவும்.

இதை எல்லாம் கவனத்தில் கொண்டுதான் முதல்வர் உள்பட எவரும் தஞ்சை கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளவில்லையாக்கும்..

அகஸ்தீஸ்வரன்

error: Content is protected !!