இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழக மாநில செயலாளர் இரா.முத்தரசன் நடிப்பில் இளையராஜா இசையில் உருவாகும் படம் “அரிசி”!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழக மாநில செயலாளர் இரா.முத்தரசன் நடிப்பில் இளையராஜா இசையில் உருவாகும் படம் “அரிசி”!

திருமணம் போன்ற அனைத்து சுப காரியங்களிலும் அரிசியில் மஞ்சள் கலந்து, அட்சதை தயாரித்து, அதை தூவி ஆசீர்வாதம் செய்வது வழக்கமாக உள்ளது. யாகங்கள், ஹோமங்கள் ஆகியவற்றிலும் அட்சதை முக்கியமான பொருளாக இடம்பெறுகிறது. ஆசீர்வாதம் செய்வது என்றால் வெறும் வாயால் வாழ்த்து கூறினால் போதாதா? பூ மட்டும் தூவி வாழ்த்தக் கூடாதா? எதற்காக அட்சதை போட்டு ஆசீர்வாதம் செய்ய வேண்டும்? உணவுப் பொருளான அரிசியை இப்படி வீணடிப்பது சரியா என பலரின் மனதிலும் கேள்வியும், சந்தேகமும் இன்று வரை இருக்கும் சூழலில் அதற்கெல்லாம் பதில் விதமாக ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன் விவசாயியாக நடிக்கிறார்.  அவரது மனைவியாக ரஷ்யா மாயன் நடிக்கிறார். இவர்களுடன் சிசர் மனோகர்,  கோவி இளங்கோ, ராஜா திருநாவுக்கரசு, அர்ஜுன்ராஜ், மகிமை ராஜ்,வையகன், அன்பு ராணி, சுபா, பழனி மணிசேகரன், கொண்டைமண்டை ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.  இப்படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார் . ஜான்சன் ஒளிப்பதிவு செய்கிறார். அசோக் சார்லஸ் எடிட்டிங் செய்கிறார். சேது ரமேஷ் அரங்கம் அமைக்கிறார். மகேந்திர பிரசாத் இணைத் தயாரிப்பு செய்கிறார்.

பிரபல இயக்குனர்களிடம் பணியாற்றிய S. A.விஜயகுமார் கதை, திரைக்கதை,வசனம்  எழுதி இயக்குகிறார்.

அரிசி படம் பற்றி  இயக்குனர் S. A விஜயகுமார் கூறியதாவது:

அரிசி படம் முழுக்க முழுக்க விவசாய பின்னணியில் உருவாகும் படம். அரிசி என்பது வெறும் உணவு தானியம் மட்டும் அல்ல! மனித வாழ்வியலின் உயிர் நாடி என்பதனை இத்தலைமுறைக்கு எடுத்து சொல்வதே இந்த “அரிசி” படத்தின் சிறப்பு! அதாவது புறநானூறு, தொல்காப்பியம் இவற்றில் எல்லாம் பாடிச் சிறப்புப் பெற்ற அரிசி, இன்று பலருக்கும் `ஆகாத’ உணவு. `அரிசியா? ஐ டோண்ட் டேக் இட்…பா’ என இளமைப் பட்டாளம் இளக்காரம் செய்யும் பொருளாகவும் ஆகிவிட்டது. அரிசி உடல் எடையைக் கூட்டிவிடும் என்றால், இந்த 10,000 ஆண்டுகளில் வரலாறு எத்தனை குண்டர்களைச் சந்தித்திருக்க வேண்டும்? சித்தன்ன வாசல் குகை ஓவியங்களிலோ, மற்ற கோயில்களில் இருக்கும் சிற்பங்களிலோ உழைக்கும் கூட்டம் செல்லத் தொப்பையுடன் இருப்பதைப் பார்த்திருக்கிறோமா? சர்க்கரைநோய் குறித்த செய்திகள் இலக்கியத்தில் ஏராளமாக இடம்பெற்றிருக்கிறதா? பின் எப்போது வந்தது தொப்பை?

`சில்க்கி பாலீஷ்’ போட்ட வெளுத்த அரிசியை அளவில்லாமல் சாப்பிட்டு, சதா டி.வி., கம்ப்யூட்டர் முன் அமர்ந்துகொண்டு, கனவில் மட்டுமே கடும் உடற்பயிற்சி செய்யும் கனவான்கள் தொப்பைக்குக் கண்டறிந்த காரணம் அரிசி. பிரச்னை நம் வாழ்வியலிலும் பரபரப்பிலும்தான் இருக்கிறது. அரிசியில் இல்லை. ஒரே பருவத்தில் விளைந்த நெல்லை தேவைக்கு ஏற்றபடி, தேவைப்படும் நபருக்கு ஏற்றபடி தயாரித்தது நம் பாரம்பரியம். அதாவது, மழலைப் பேத்திக்குக் கஞ்சி; வளரும் பிள்ளைக்குப் பச்சரிசி; வீட்டில் உள்ள பெரியோருக்குக் கைக்குத்தல் புழுங்கல்; பாட்டிக்கு அவல்; மாலைச் சிற்றுண்டிக்கு பொரி; இரவில் அரிசிக் கஞ்சி! பழம்பெரும் விஞ்ஞானிகள் ஏறத்தாழ நான்கு லட்சம் அரிசி ரகங்கள் இந்தியாவில் இருந்ததாகக் கூறுகிறார்கள்.

இடைக்காலத்தில் அதிக மகசூல், வீர்ய ஒட்டு ரகம் என்ற ஓட்டத்தில் பன்னாட்டு வணிகப் பிடியில் சிக்கிக்கொண்டோம். பாரம்பரியமான `காடைகழுத்தான்’, `குள்ளக்கார்’, `குழியடிச்சான்’, `மணிச்சம்பா’ போன்ற அருமையான அரிசி ரகங்களைத் தொலைத்துவிட்டோம். இதை எல்லாம் சுட்டிக் காட்டும் இப்படத்தில்  விவசாயியாக நடித்திருக்கும் தோழர் இரா. முத்தரசன் அவர் பேசும் ஒவ்வொரு வசனங்களும் அர்த்தம் நிறைந்ததாக இருக்கும்.   இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் பகுதியில் குடவாசல்  அருகே உள்ள சிறு  சிறு கிராமங்களில் 35 நாட்கள் நடந்து முடிந்திருக்கிறது.  அப்பகுதி விவசாயிகளும்  இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

error: Content is protected !!