தமிழ்நாடு சீஃப் செகரட்டரி , டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் ஆகிய மூன்று முக்கிய பொறுப்புகளில் வடமாநில ஐபிஎஸ் அதிகாரிகளா?

தமிழ்நாடு சீஃப் செகரட்டரி , டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் ஆகிய மூன்று முக்கிய பொறுப்புகளில் வடமாநில ஐபிஎஸ் அதிகாரிகளா?

மிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குனர், பெருநகர சென்னை மாநகர காவல்துறையின் ஆணையர் ஆகிய மூன்று முக்கிய பொறுப்புகளில் வடமாநில ஐபிஎஸ் அதிகாரிகளை திராவிட மாடல் ஆட்சியின் முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமனம் செய்ததை பார்த்து, தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியானது.

குறிப்பாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு அரசின் தலைமைப் பொறுப்புகளில் வடமாநில உயர் அதிகாரிகள் நியமனத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து அறிக்கையே வெளியிட்டுள்ளார். தமிழ் மண்ணின் மாண்புகளை உள்வாங்கும் சக்தி வடமாநில அதிகாரிகளுக்கு இல்லை. அதனால், தமிழர்களின் உணர்வுக்கு ஏற்ப அவர்களால் செயல்பட முடியாது என்றும் குற்றம் சாட்டிய சீமான், ஆளுநர் ஆர்.என்.ரவியால் தமிழ்நாட்டிற்கும் தமிழக அரசுக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கடியையும் உதாரணமாக சுட்டிக் காட்டியிருந்தார்.

சீமானின் ஆதங்கம் நியாயமானதுதான் என்று ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இருந்த காவல்துறை உயர் அலுவலர்கள், புதிய டிஜிபி மற்றும் புதிய சிட்டி கமிஷனர் ஆகிய இருவரும் பதவியேற்றவுடனேயே உத்வேகத்துடன் மேற்கொண்டு வரும் மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளை பார்த்த பிறகு, டிஜிபி சங்கர் ஜிவால் நியமனத்திலோ அல்லது சென்னை காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஐபிஎஸ் நியமனத்திலோ சீமானின் குற்றச்சாட்டு அர்த்தம் இல்லாமல் போவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம் உள்ளதாக உறுதிபட கூறுகிறார்கள்.

டிஜிபி சங்கர் ஜிவால் ஐபிஎஸ்ஸோ, சிட்டி கமிஷனர் சந்தீப் ராய் நத்தோர் ஐபிஎஸ்ஸோ, அரசியல் அழுத்தங்களுக்கு முழுமையாக தங்களை ஆட்படுத்திக் கொள்ள மாட்டார்கள். தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியுள்ள அனுபவத்தின் மூலம் பொதுமக்களுக்கு தங்கள் சக்திக்கு மேல் நன்மை செய்யவே ஆர்வம் காட்டுவார்கள் என்கிறார்கள் ஓய்வுப் பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள்.
இதற்கு முன்பு டிஜிபி பதவியில் அமர்ந்திருந்தவர்கள், குறிப்பாக தமிழ் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இல்லாத அக்கறை, புதிய டிஜிபி சங்கர் ஜிவால் ஐபிஎஸ்ஸிடம் இருக்கிறது என்பதே வரவேற்கத்தக்க ஒன்றாகும். சென்னை மெரினா கடற்கரையில் கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டிருக்கும் வெள்ளை மாளிகையில் நுழைந்து, டிஜிபியிடம் புகார் மனு கொடுப்பது என்பது சாமான்யருக்கு எளிதான ஒன்றல்ல.
புதிதாக டிஜிபி பதவியில் அமரும் ஐபிஎஸ் அதிகாரிகள், சம்பிரதாயத்திற்காக பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்குகிறோம் என்று தொடக்கத்தில் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், ஒரு சில மாதங்களுக்குப் பிறகு அந்த ஆர்வம் குறைந்துவிடும். தனக்கு கீழ் பணியாற்றுகிற காவல்துறை அதிகாரிகளிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்துவிடுவார்கள். அப்படிபட்ட அதிகாரிகளுக்கு மாற்றாக புதிய டிஜிபி சங்கர் ஜிவால் ஐபிஎஸ் இருக்கிறார் என்பதற்கு அவரின் முதல் நடவடிக்கையே சிறந்த சான்று என்கிறார்கள் டிஜிபி அலுவலகத்தில் பணியாற்றி வரும் காவல்துறை உயரதிகாரிகள். பொதுமக்களிடம் இருந்து டிஜிபி கோரிக்கை மனுக்களை பெற்றால், அந்த கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு கிடைத்துவிடுமா என்று கேள்வியை எழுப்பிய நேரத்தில், பொதுமக்கள் மீது கொஞ்சம் கூடுதல் அக்கறை செலுத்தி, கோரிக்கை மனுக்கள் மீது கவனத்தை செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க உரிய முறையில் உத்தரவு பிறப்பித்தாலே போதும், தமிழ்நாட்டின் மூலை முடுக்கில் இருக்கும் சாமான்யர்களுக்கு கூட நம்பிக்கையும், உற்சாகமும் ஏற்பட்டுவிடும்.

திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை 5 நாட்கள் பொதுமக்கள் மற்றும் காவல்துறை பணியாளர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை வழங்கலாம் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்ட டிஜிபி சங்கர் ஜிவால் ஐபிஎஸ், முதல்நாளிலேயே 70 மனுக்களை பரிசீலித்து, நியாயமான கோரிக்கைகள் மீது உடனடியாக உத்தரவு பிறப்பித்திருக்கிறார். பாதிக்கும் மேற்பட்ட கோரிக்கைகள் ஒரே நாளில் தீர்வு காணப்பட்டு, பொதுமக்களும், காவல்துறை பணியாளர்களும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள் என்பதன் மூலம் டிஜிபி சங்கர் ஜிவால் ஐபிஎஸ்ஸின் மனிதநேயத்தை உணர்ந்து கொள்ள முடியும் என்கிறார்கள் முதல் சந்திப்பிலேயே கோரிக்கை நிறைவேறிய மகிழ்ச்சியில் திளைக்கும் காவல்துறை பணியாளர்கள்.

புதிய டிஜிபி சங்கர் ஜிவால் ஐபிஎஸ்ஸே நேரடியாக களத்தில் குதித்துவிட்டதையடுத்து, காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் அதற்கு அடுத்தடுத்த நிலைகளில் உள்ள உயர் அலுவலர்கள் இனிவரும் நாட்களில் மிகுந்த கவனத்துடன் செயல்படுவார்கள். வழக்கம் போல அலட்சியம் காட்டும் காவல்துறை அலுவலர்கள் உரிய முறையில் நடவடிக்கை எடுக்காத போது, டிஜிபியின் கவனத்திற்கு கொண்டு வரும் நேரத்தில், அந்த கோரிக்கைக்கு முக்கியத்துவம் கிடைத்துவிடும். அதன் மூலம் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை டிஜிபி தெரிந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பு உருவாகும். அதனை தற்போதைய டிஜிபி சங்கர் ஜிவால் ஐபிஎஸ் ஒருபோதும் அலட்சியப்படுத்தமாட்டார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்று உறுதிபட கூறுகிறார்கள் மூத்த ஊடகவியலாளர்கள். தமிழ்நாடு காவல்துறையின் தலைமை பதவியில் அமர்ந்தவர்கள், அன்றாட நிர்வாக நடவடிக்கைகளில் எவ்வளவு அலட்சியம் காட்டினார்கள் என்பதும், இதற்கு முன்பு டிஜிபி பதவியில் இருந்த தமிழர்களான ஐபிஎஸ் அதிகாரிகளின் நடவடிக்கைகளும் கூட பாராட்டும் வகையில் அமைந்திருக்கவில்லை. அந்தவகையில் ஒவ்வொருவராக பெயரை பதிவிட்டே, விமர்சனம் செய்யலாம். ஆனால், ஒருவரை தாழ்த்தி மற்றொருவரை உயர்த்துவதால் பொதுமக்களுக்கு எந்த நன்மையும் ஏற்பட்டுவிடப் போவதில்லை.

சங்கர் ஜிவால் ஐபிஎஸ்ஸை புதிய டிஜிபி ஆக நியமனம் செய்வதற்கு நிர்வாக ரீதியாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் கூட, எதிர்க்கட்சியாக இருந்த நேரங்களிலும் தனிப்பட்ட முறையில் அவரிடம் நட்பு பாராட்டி வந்தவர் தான் சங்கர் ஜிவால் ஐபிஎஸ். அந்த வகையில், ஆளும்கட்சியோடு எல்லா காலங்களிலும் நட்பு பாராட்டினால்தான், செல்வாக்கு மிகுந்த பதவிகளில் அடுத்தடுத்த உயர்வுகள் கிடைக்கும் என்ற சுயநலம் ஒருபோதும் சங்கர் ஜிவால் ஐபிஎஸ்ஸிடம் இருந்ததில்லை என்பதை புரிந்து கொள்ள முடியும் என்கிறார்கள்.

எல்லாவற்றையும் விட மிகவும் இளகிய மனதுக்காரர் சங்கர் ஜிவால் ஐபிஎஸ் என்பதற்கு சிறந்த உதாரணமாக பலவற்றை கூறலாம் என்றாலும் கூட, அவரிடம் காணப்படும் மித மிஞ்சிய மனிதாபிமானத்தை, நயவஞ்சக குணத்தோடு ஏமாற்றிய டிவி செய்தியாளர்களின் கயமைதனத்தை பொதுவெளியில் கூறினால்தான், சீமான் போன்றவர்களுக்கு உண்மை நிலவரம் தெரிய வரும்.

கடந்த 2021 காலகட்டத்தில் கொரோனா உச்சத்தில் இருந்த போது, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஐபிஎஸ், காவல்துறை தொடர்பான செய்திகளை சேகரிக்கும் செய்தியாளர்கள் கஷ்டப்படுவார்களே என்பதை உணர்ந்து, லட்ச ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்து உதவியிருக்கிறார். பணத்தாசை பிடித்த டிவி செய்தியாளர்கள் சிலர் (அதுவும் முன்னணி டிவிகளில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் பெற்றவர்கள்) குழுவாக சேர்ந்து கொண்டு, அடுத்தடுத்த செய்த செயல்கள்தான்,வரம் கொடுத்தவன் தலையிலேயே கை கொடுத்ததை போல கொடூரமான செயலாகும்.
மகன், மகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரி கட்டணம் செலுத்த காசு இல்லை. மனைவி, குழந்தைகளுக்கு மருத்துவச் செலவு செய்ய காசில்லை.. வீடு காலி செய்து மாற்று வீடு செல்வதற்கு காசில்லை என மனதில் தோன்றியதை எல்லாவ்ற்றையும் காரணமாக கூறி, சங்கர் ஜிவால் ஐபிஎஸ்ஸிடம் நீலிக் கண்ணீர் வடித்து மாதந்தோறும் கப்பம் போல லட்சக்கணக்கில் பணம் வசூலித்த கொடுமை எல்லாம் நடந்திருக்கிறது.

இப்படி வசூலிக்கப்பட்ட தொகை மட்டும் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் என்றும் 30 செய்தியாளர்களுக்கு பணம் தேவையிருக்கிறது என்று கூறி பல தவணைகளாக வாங்கிய பணத்தை, அனைவருக்கும் பிரித்து கொடுக்காமல் ஒன்றிரண்டு பேர் மட்டுமே அந்த பணத்தை பிரித்துக் கொண்டு, வட்டிக்கு விட்டு கூடுதலாக பணத்தை சம்பாதித்துகிறார்கள்.
ஊடகவியலாளர்களாக பணியாற்றுவதற்கே தகுதியற்றவர்களாக இன்றைக்கும் நடமாடிக் கொண்டிருப்பவர்கள் அனைவருமே தமிழர்கள்தான். இப்படி லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்த தமிழ் ஐபிஎஸ் – ஐஏஎஸ் அதிகாரி ஒருவரையாவது சீமானால் காட்ட முடியுமா.? என்பதுதான் எங்களுடையே கேள்வி என்கிறார்கள் நேர்மையான ஊடகவியலாளர்கள்.
சாந்தம், மிகுந்த பொறுப்புணர்வு, மனிதநேயம் போன்ற நற்குணங்கள் புதிய டிஜிபியான சங்கர் ஜிவால் ஐபிஎஸ்ஸிடம் அதிகமாகவே இருக்கிறது. அவரின் பணிக்காலத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் நம்பிக்கைக்கு எந்தவகையிலும் குந்தகம் ஏற்படாமல் சேவையாற்றும் சாதூர்யம் அவரிடம் நிறைந்திருக்கிறது என்பதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்கிறார்கள் டிஜிபி அலுவலகத்தில் பணியாற்றி வரும் அனுபவம் மிகுந்த காவல்துறை உயரதிகாரிகள் பலர்.

அதே டிஜிபி அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குனராக பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார் அருண் ஐபிஎஸ். முந்தைய அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளும் செல்வாக்கு மிகுந்த பதவிகளிலேயே பணியாற்றியவர். அந்த காலகட்டத்தில் ஜனநாயக முறையில் எதிர்க்கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்த போது அருண் ஐபிஎஸ் எப்படியெல்லாம் நடந்து கொண்டார் என்பதை கூறினாலே, தமிழ் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் வடமாநில ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் இடையே உள்ள சிந்தனைப் போக்கை எளிதாக அறிந்து கொள்ள முடியும். ஆளும்கட்சியான அதிமுகவின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து எதிர்க்கட்சியான திமுக சார்பில் திருச்சியில் கண்டன பொதுக்கூட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான அனுமதியை பெற திமுக நிர்வாகிகள் கடுமையாக போராடினார்கள். மு.க.ஸ்டாலின் தலைமையில்தான் கூட்டம் என்பதால் அவரும் திருச்சிக்கு சென்றுவிட்டார். ஆனால், அந்தக்கூட்டத்திற்கான அனுமதியை கடைசி நேரத்தில் ரத்து செய்தது மட்டுமின்றி, திருச்சியை நோக்கி பிற பகுதிகளில் இருந்து வந்த வாகனங்களையும் காவல்துறை தடுத்து நிறுத்தியது. இப்படி சட்டத்திற்கு புறம்பாக காவல்துறை நடந்து கொண்ட போது, அங்கு கமிஷனராக இருந்தவர் அருண் ஐபிஎஸ்.

பொதுக்கூட்டத்தை ரத்து செய்த பிறகு, மு.க.ஸ்டாலின் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றார் அருண் ஐபிஎஸ். அவரை சந்திக்காமலேயே திருப்பி அனுப்பி விட்டார் மு.க.ஸ்டாலின். கடந்த கால கசப்புகளை எல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல், டிஜிபிக்கு அடுத்த நிலையில் உள்ள சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி பணியிடத்தில் அருண் ஐபிஎஸ்ஸை நியமித்தவரும் முதல்வர் மு.க.ஸ்டாலின்தான்.

ஐபிஎஸ் அதிகாரியோ, ஐஏஎஸ் அதிகாரியோ, தங்கள் மனசாட்சிக்கு பயந்து கடமையை நிறைவேற்றினாலேயே விளிம்பு நிலை மக்களின் கண்ணீரை துடைத்துவிடலாம்.

பெருநகர சென்னை மாநகர காவல்துறை ஆணையராக பதவி ஏற்றிருக்கும் சந்தீப் ராய் ரத்தோர் ஐபிஎஸ்ஸின் செயல்பாடுகள் பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலினே நன்றாக அறிந்து வைத்திருப்பவர்தான். சென்னை மாநகரில் சட்டம் ஒழுங்கை முழுமையாக நிலைநாட்ட வேண்டும் என்பதற்காகவே துடிப்பான ஐபிஎஸ் அதிகாரியை தேர்வு செய்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். நிர்வாகத்தை செம்மைப்படுத்தி, ஒட்டுமொத்த காவல்துறையும் மிகுந்த பொறுப்புடன் மக்கள் கடமையாற்ற வைக்கும் வித்தையை முழுமையாக அறிந்து வைத்திருப்பவர்தான் சந்தீப் ராய் ரத்தோர் ஐபிஎஸ். தனது தலைமையின் கீழ் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் முதல் காவல் நிலைய அலுவலர்கள் வரை ஒவ்வொருவரின் தனித்த செயல்பாடுகளையும் ரகசியமாக சேகரிக்கும் ஆற்றல் கொண்டவர் ரத்தோர் ஐபிஎஸ் என்பதாலேயே, அவரது உத்தரவுகளுக்கு ஒட்டுமொத்த சென்னை மாநகர காவல்துறையும் தலையாட்டும்.

சென்னை சிட்டி கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் ஐபிஎஸ்ஸின் குணநலன்களை ஒருவரியில் சொல்ல வேண்டும் என்றால் அரவணைத்து வேலை வாங்குவதிலும் அதட்டி வேலை வாங்குவதிலும் கைதேர்ந்தவர் அவர் என்கிறார்கள் மூத்த ஊடகவியலாளர்கள்.

அரசு நிர்வாகத்தை விட, காவல்துறையின் செயல்பாடுகள் முக்கியமானது. பட்டா பெறுவதற்காக பல மாதங்கள் தாசில்தார் அலுவலகங்களுக்கு நடக்கலாம். ஆனால், குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் அடிதடி பிரச்னைகளுக்கு பல நாட்கள் நடந்த பிறகும் தீர்வு கிடைக்கவில்லை என்றால்தான், ஆட்சிக்கு தலைமை வகிப்பவர்களுக்கு கெட்ட பெயர் ஏற்படும். அதனால்தான், காவல்துறை பணி என்பது மகத்தானதாக இருக்கிறது. அதை உணர்ந்து, நாள் ஒன்றுக்கு ஒரு சில மணி நேரங்கள் செலவிட்டால் கூட போதும், பொதுமக்களுக்கும், ஆட்சிக்கு தலைமை ஏற்றிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நிம்மதி கிடைத்துவிடும்.

அந்தவகையில் டிஜிபி சங்கர் ஜிவால் ஐபிஎஸ், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஐபிஎஸ் ஆகிய இருவரும் சிறப்பாகவே செயல்படுவார்கள் என்று உறுதிபட கூறுகிறார்கள் மூத்த ஊடகவியலாளர்கள்.

இளமதி நல்லரசு இணைய இதழ்

error: Content is protected !!