மஹாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை ஓட்டெடுப்பு; சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு

மஹாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை ஓட்டெடுப்பு; சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு

இந்தையாவின் பங்குச்சந்தை களமாக விளங்கும் மகாராஷ்டிரத்தில் முதல்வா் தேவேந்திர ஃபட்ன வீஸுக்கு ஆளுநா் பகத்சிங் கோஷியாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்ததற்கு எதிராக, சிவ சேனை-தேசியவாத காங்கிரஸ் (என்சிபி)-காங்கிரஸ் கூட்டணி தாக்கல் செய்த மனு மீது  நடந்த விசாரணையை அடுத்து பாஜக தலைமையிலான அரசில் முதல்வராக இருக்கும் தேவேந்திர பட்னாவிஸ், சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நாளை மாலை 5 மணிக்குள் நிரூபிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த தேர்தலுக்குப் பின் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லா ததையடுத்து பல்வேறு ஆலோசனைக்கு பின்னர் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் காங்கிரஸ், என்சிபி கட்சிகள் ஆதரவுடன் சிவசேனா கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் முனைப்பில் இறங்கின. இந்நிலையில் எவருமே எதிர்பாராத சூழலில் என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் துணையுடன், தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், துணை முதல்வராக அஜித் பவாரும் பதவியேற்றனர்.

இத்தனைக்கும் சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் மூன்றும் சேர்ந்து பெரும்பான்மைக்குத் தேவையான 145 எம்எல்ஏக்களுக்கு அதிகமாக வைத்திருந்தும் அவர்களை ஆளுநர் கோஷியாரி ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. ஆனால், 105 எம்எல்ஏக்கள் மட்டுமே வைத்திருந்த பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார். ஆளுநர் கோஷியாரின் இந்தச் செயலுக்கு எதிராகவும், உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த மனு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் என்.வி.ரமணா, அசோக் பூஷன், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் முன் நேற்று விசாரிக்கப்பட்டது. அப்போது ஜனாதிபதி ஆட்சியை ஆளுநர் நீக்கியது தொடர்பான கடிதங்கள், தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் அளித்த எம்எல்ஏ ஆதரவுக் கடிதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் மகாராஷ்டிரா அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சிவசேனா சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், காங்கிரஸ் என்சிபி சார்பில் அபிஷேக் சிங்வி ஆகியோர் ஆஜராகினர்.

கடந்த இரு நாட்களாக சுப்ரீம் கோர்ட்டில் இரு தரப்பிலும் வாதங்கள் நடந்தன. இதில் சிவசேனா தரப்பில் அதிகமான கால அவகாசம் கொடுத்தால் குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் என்று வாதம் வைக்கப்பட்டது. அதேசமயம், மத்திய அரசு தரப்பில் ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிடமுடியாது. 7 நாட்கள் வரை எடுக்கலாம் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் செவ்வாய்க்கிழமை (இன்று) உத்தரவு பிறப்பிப்பதாக அறிவித்தனர்

அதன்பின் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் என்.வி.ரமணா, அசோக் பூஷன், சஞ்சீவ் கண்ணா இன்று வழக்கில் உத்தரவு பிறப்பித்தனர். அதில், “மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷியாரி, நாளை மாலை 5 மணிக்குள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும். அதற்கு முன்பாக அனைத்து எம்எல்ஏக்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும். அந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் போது அதை நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்ய வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கூடாது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஏதுவாக இடைக்கால சபாநாயகர் ஒருவரை ஆளுநர் நியமிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.

இதற்கிடையே சிவசேனா தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர் கபில் சிபல், நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடிக்கும்வரை, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் எந்தவிதமான முக்கியமான கொள்கை முடிவுகளையும் எடுக்கத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!