செய்தியைக் கேட்க / Listen to News
சுமார் 4,000 கோடி டாலர் (₹3.3 லட்சம் கோடி) மதிப்பிலான இந்திய மதுபானச் சந்தையில், முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு ஆணையம் (FSSAI) அதிரடித் தடை விதித்துள்ளது. டயாஜியோ (Diageo) நிறுவனத்தின் ‘யுனைடெட் ஸ்பிரிட்ஸ்’, ‘இன்ப்ரூ பீவரேஜஸ்’ மற்றும் மோகன் ராக்கி ஸ்பிரிங்வாட்டர் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கும் பிரபல விஸ்கி மற்றும் ரம் ரகங்களில் செயற்கை நறுமணப் பொருட்கள் (Artificial Flavours) விதிகளுக்குப் புறம்பாகப் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த பிரபல பிராண்டுகளுக்குத் தடை?
மத்தியப் பிரதேசத்தில் இயங்கும் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட டயாஜியோ நிறுவனத்தின் ‘ராய்ல் சேலஞ்ச்’ (Royal Challenge) மற்றும் ‘ஆண்டிக்விட்டி ப்ளூ’ (Antiquity Blue) ஆகிய பிரபல விஸ்கி ரகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இன்ப்ரூ நிறுவனத்தின் ‘பாக்பைப்பர் டீலக்ஸ்’ (Bagpiper Deluxe) விஸ்கி, ‘ஓல்ட் காஸ்க் டீலக்ஸ்’ (Old Cask Deluxe XXX) ரம் மற்றும் மகாராஷ்டிராவில் தயாரிக்கப்படும் புகழ்பெற்ற ‘ஓல்ட் மாங்க்’ (Old Monk) ரம்மின் 3 முக்கிய ரகங்களின் விற்பனையையும் எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ நிறுத்தியுள்ளது.
எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ ஆய்வில் அம்பலமான உண்மைகள்
வழக்கமாக விஸ்கி அல்லது ரம் தயாரிப்பில், கரும்புச் சர்க்கரைப்பாகு (Molasses), பார்லி அல்லது திராட்சை போன்ற இயற்கை மூலப்பொருட்களைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட காலம் வரை பீப்பாய்களில் வைத்துப் பக்வப்படுத்த (Maturation) வேண்டும். ஆனால், இந்த நிறுவனங்கள் பக்வப்படுத்தும் நேரத்தைக் குறைக்கவும், செலவைக் கட்டுப்படுத்தவும் விஸ்கி மற்றும் ரம் நறுமணங்களைச் செயற்கையாகச் சேர்த்துள்ளது ஆய்வில் தெரியவந்தது.
“விஸ்கிக்கு விஸ்கி சுவையையோ அல்லது ரம்மிற்கு ரம் சுவையையோ சேர்க்கும் சர்வதேசத் தயாரிப்பு நடைமுறை எங்குமே இல்லை” எனத் தெரிவித்துள்ள எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ, இத்தகைய முறைகேடுகள் பானத்தின் இயற்கைச் சுவையை மறைப்பதுடன் நுகர்வோரை ஏமாற்றும் செயல் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
தரம் குறைந்த தயாரிப்புகள் (Sub-Standard)
ஆய்வு செய்யப்பட்ட மாதிரிகளில் “இயற்கைக்கு நிகரான” அல்லது வெளிப்புற செயற்கைச் சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டிருந்ததால், அவை ‘தரம் குறைந்தவை’ (Sub-standard) என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
தயாரிப்புப் பாக்கெட்டுகளில் முறையான விபரங்களைக் குறிப்பிடாமல், “7 ஆண்டுகள் பழமையான பக்வப்படுத்தப்பட்ட ரம்” என விளம்பரப்படுத்தப்பட்ட சில தயாரிப்புகளில், 5 சதவீதத்திற்கும் குறைவான அளவே உண்மையான பழமையான ரம் கலக்கப்பட்டிருந்ததும் அம்பலமாகியுள்ளது.
மதுபானத் துறையில் தொடரும் கடுமையான கண்காணிப்பு
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்கள் இறக்குமதி செய்யப்படும் பானங்களை விடக் குறைந்த விலையில் கிடைப்பதால், சாமானிய மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இத்தகைய சூழலில், நுகர்வோர் நலனைக் கருத்தில் கொண்டு எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ தனது சோதனைகளைக் தீவிரப்படுத்தியுள்ளது.
சமீபத்தில் அதிகக் காஃபின் கொண்ட பானங்களை ‘எனர்ஜி டிரிங்க்ஸ்’ என்ற பெயரில் விற்கத் தடை விதித்ததைத் தொடர்ந்து, தற்போது முன்னணி மதுபான பிராண்டுகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை பாய்ந்துள்ளது குறிப்பிடத் தக்கது.
