அயோத்தியின் பெயரில் போலி பிரசாதம் விற்பனை – அமேசான் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்!

அயோத்தியின் பெயரில் போலி பிரசாதம் விற்பனை – அமேசான் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்!

பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், அயோத்தி ராமர் கோவில் பிரசாதம் என்ற பெயரில் இனிப்பு பொருட்களை விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது, அமேசானின் இணையதளத்தில் ஸ்ரீராமர் கோவில் அயோத்யா பிரசாதம் – ரகுபதி ஜியோ லட்டு, ராமர் கோவில் கோபி லட்டு என்ற பெயரில் இனிப்பு வகைகளை விற்பனை லிஸ்ட்டில் வைத்திருந்த நிலையில் ‘ஸ்ரீ ராம் மந்திர் அயோத்தி பிரசாத்’ என்ற பெயரில் இனிப்புகள் விற்பனை செய்து ஏமாற்றும் வர்த்தக நடைமுறைகளில் ஈடுபட்டதாக ஆன்லைன் வர்த்தக தளமான அமேசானுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் இன்னும் திறக்கப்படாத ராமர் கோயிலில் இருந்து பிரசாதம் என்ற போர்வையில் இனிப்புகளை விற்பனை செய்வதன் மூலம் அமேசான் நுகர்வோரை தவறாக வழிநடத்துகிறது என அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சிஏஐடி) அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தவறான அடையாள உணவுப் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்ய அனுமதிப்பது உண்மையான உணவுப் பொருளை பெற இயலாதவாறு நுகர்வோரை தவறாக வழிநடத்தும். தயாரிப்பு குறித்த துல்லியமான தகவல்கள் குறிப்பிடப்பட்டிருந்தால், இதுபோன்ற செயல்கள் வாங்க விரும்பாத நுகர்வோரையும் வாங்க தூண்டுகிறது.அமேசான் தளத்தில் ‘ஸ்ரீ ராம் மந்திர் அயோத்தி பிரசாத் -ரகுபதி நெய் லட்டு, கோயா கோபி லட்டு, தேசி மாட்டு பால் பேடா ஆகியவை விற்பனைக்கு பட்டியலிடப்பட்டிருந்தன. சிசிபிஏ அனுப்பிய நோட்டீஸில் அமேசான், 7 நாள்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ன் கீழ் அந்நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில் மேற்குறிப்பிட்ட உணவுப் பொருள்களை அமேசான் தளத்திலிருந்து நீக்கிவிட்டதாக தெரிகிறது.

மேலும் இதுகுறித்து பேசிய அமேசான் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், “சில விற்பனையாளர்கள் மூலம் தவறான பெயரில் விற்கப்படும் பொருள்கள் தொடர்பாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திடம் (CCPA) இருந்து எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எங்கள் கொள்கைகளின்படி இதுபோன்ற புகார்களுக்க்கு எதிராக நாங்கள் உரிய நடவடிக்கையை எடுத்து வருகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

இரு தரப்பிலும் இதுபோன்ற ஏமாற்று வேலைகளை நம்பி, மக்கள் பணத்தைக் கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!