மழலைகளைக் காப்போம்: சர்வதேச குழந்தைப்பருவ புற்றுநோய் தடுப்பு தினம்!
குழந்தைகளின் சிரிப்புதான் ஒரு வீட்டின் ஆகச்சிறந்த செல்வம். ஆனால், இன்று மாறிவரும் சூழலில் அந்தச் சிரிப்பைத் திருடும் ஒரு காரணியாகப் புற்றுநோய் உருவெடுத்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 15-ஆம் தேதி ‘சர்வதேச குழந்தைப்பருவ புற்றுநோய் தினமாக’ கடைப்பிடிக்கப்படுகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தரமான சிகிச்சை கிடைக்கவும், அந்தப் போராட்டத்திலிருந்து அவர்கள் மீண்டு வர சமூகம் துணையாக இருக்க வேண்டும் என்பதே இந்நாளின் முக்கிய நோக்கம்.
அன்று ஏன் குறைவாக இருந்தது?
நம் தாத்தா, பாட்டி காலத்தில் ரத்தப் புற்றுநோய் (Leukemia) போன்ற பாதிப்புகள் மிகக் குறைவாகவே இருந்தன. அதற்கு முக்கியக் காரணம் அவர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த முறைதான். ரசாயனங்கள் இல்லாத நேரடி விவசாய உணவுகள், உடலை வருத்தி விளையாடிய விளையாட்டுகள், மாசு இல்லாத காற்று என அனைத்தும் அவர்களைக் காத்தன.

இன்றைய அபாயம்: காரணங்கள் என்ன?
இன்றைய நவீன உலகில் நாம் இயற்கையைச் சிதைத்ததன் விளைவை நம் குழந்தைகள்தான் அனுபவிக்கிறார்கள்.
-
உணவு முறை: சத்துக்கள் குறைந்த, பதப்படுத்தப்பட்ட மற்றும் கலப்படம் நிறைந்த ‘ஜங்க் ஃபுட்’ கலாச்சாரம் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியைச் சிதைக்கிறது.
-
உடல் உழைப்பின்மை: செல்போன், டேப்லெட் என ஒரே இடத்தில் அமர்ந்து விளையாடுவதால் ஏற்படும் உடல் பருமன் (Obesity), புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது.
-
சுற்றுச்சூழல்: நாம் சுவாசிக்கும் காற்றில் கலந்திருக்கும் நச்சுக்கள் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடுகள் பிஞ்சு உடல்களைப் பாதிக்கின்றன.
அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்!
குழந்தைப் பருவப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் 80 சதவீதத்திற்கும் மேலான குழந்தைகளை முழுமையாகக் குணப்படுத்த முடியும். கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவர் ஆலோசனை பெறுவது அவசியம்:

-
காரணமில்லாமல் நீடிக்கும் காய்ச்சல்.
-
திடீர் உடல் எடை குறைவு.
-
எலும்புகள் மற்றும் மூட்டுகளில் வலி.
-
உடலில் தென்படும் அசாதாரண வீக்கங்கள் அல்லது கட்டிகள்.
-
அடிக்கடி ஏற்படும் தலைவலி மற்றும் வாந்தி.
உலக சுகாதார நிறுவனத்தின் முன்னெடுப்பு
புற்றுநோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் இறப்பு விகிதத்தைக் குறைப்பதையே உலக சுகாதார நிறுவனம் (WHO) தனது இலக்காகக் கொண்டுள்ளது. 2030-ஆம் ஆண்டிற்குள் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் குறைந்தது 60 சதவீதத்தினரையாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் ‘Global Initiative for Childhood Cancer’ என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
நமது கடமை என்ன?
புற்றுநோய் என்பது தீராத நோய் அல்ல; அது ஒரு சவால் மட்டுமே. இந்நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் நாம் ஆறுதலாக இருக்க வேண்டும். அரசாங்கம் வழங்கும் மருத்துவ வசதிகள் மற்றும் சத்தான உணவுகள் அவர்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.
“வரும் முன் காப்பதே சிறந்தது” என்பதற்கு ஏற்ப, குழந்தைகளுக்குச் சத்தான பாரம்பரிய உணவுகளையும், ஓடி ஆடி விளையாடும் சூழலையும் உருவாக்கித் தருவோம். மழலைகளின் எதிர்காலத்தை ஆரோக்கியமானதாக மாற்றுவோம்!
தனுஜா


