சபரிமலை:இனி ஆன்லைன் பதிவு மூலமே பக்தர்கள் தரிசனம்!!

சபரிமலை:இனி ஆன்லைன் பதிவு மூலமே பக்தர்கள் தரிசனம்!!

கேரள ஸ்டேட் பத்தனம்திட்டா டிஸ்ட்ரிக்கில் அமைந்துள்ள சபரிமலையில் பிரசித்தி பெற்ற ஐயப்பனின் ஆலயத்துக்கு வருடாவருடம் கார்த்திகை, மார்கழி மற்றும் தை மாதங்களில் லட்சோப லட்ச பக்தர்கள் வந்து, ஐயப்பனை வழிபடுவது வழக்கம். அப்படியாக லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபடும் சபரிமலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை எந்தவித சிக்கல்களும் இல்லாமல் தரிசனம் செய்து வந்தனர்.இதனை தொடர்ந்து பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்து தரிசனம் செய்ய வரும் முறை அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏராளமானோர் இந்த முன்பதிவை பயன்படுத்தி வந்தனர்.இதற்கிடையில் சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவும் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.இந்த 2 முறைகளால் கடந்த மண்டல, மகர விளக்கு சீசனில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் சபரிமலையில் காணப்பட்டது.பக்தர்கள் பலரும் 15 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்ய நேர்ந்தது. கூட்ட நெரிசலில் பக்தர்கள் மயங்கி விழுந்த சம்பவமும் நிகழ்ந்தது. இதனால் பல பக்தர்கள் சாமி தரிசனம் செய்யாமலேயே திரும்பி சென்றனர். இந்த சம்பவங்கள் கேரள அரசுக்கும், திருவிதாங்கூர் தேவஸ்தானத்துக்கும் மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கேரள ஐகோர்ட்டும் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் உயர் மட்ட ஆலோசனை கூட்டம் தலைவர் பிரசாந்த் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடந்த ஆண்டு சபரிமலையில் ஏற்பட்ட கூட்டநெரிசல் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் பின்னர் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதுகுறித்து தேவஸ்தான தலைவர் பிரசாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அப்போது அவர், “சபரிமலையில் கடந்த மண்டல, மகர விளக்கு சீசனில் பக்தர்களுக்கு கூட்ட நெரிசல் காரணமாக நிகழ்ந்த சம்பவங்களை கருத்தில் கொண்டு, இனி வரும் சீசன் காலங்களில் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். உடனடி முன் பதிவு முறை முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது” என்று தெரிவித்தார்.

இதனால் நிலக்கல், பம்பை உள்ளிட்ட 10 இடங்களில் செயல்பட்டு வந்த உடனடி முன்பதிவு கவுண்டர்கள் விரை வில் மூடப்படுகிறது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்கு 3 மாதங்களுக்கு முன்னதாகவே ஆன்லைன் முன்பதிவு வசதி ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டதால் சீசன் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே முன்பதிவை உறுதி செய்து கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது..

error: Content is protected !!