தமிழக மக்கள் ஒவ்வொருவரின் தலையிலும் தலா ரூ.1 லட்சம் கோடி கடன்! – பட்ஜெட் பலன்

தமிழக மக்கள் ஒவ்வொருவரின் தலையிலும் தலா ரூ.1 லட்சம் கோடி கடன்! – பட்ஜெட்  பலன்

நேற்று துணை முதல்வரும், தமிழக நிதி அமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட் டில்  பள்ளி கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு, விவசாயிகளுக்கான செயலி அறிமுகம், பேரிடர் நிர்வாகத்திற்கு கணிசமான நிதி ஒதுக்கீடு, தமிழ்நாடு ஃபைபர் நெட் கார்ப்பரேஷன் மூலம் பாரத் நெட் திட்டம் தொடர்பான அறிவிப்புகள் முக்கிய அம்சமாக அமைந்துள்ளன. அதே சமயம் இந்த பட்ஜெட்டில் புதிய வரி எதுவும் விதிக்கப்படவில்லை என்றாலும் தமிழக அரசின் கடன் சுமை 3.55 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என பட்ஜெட்டில் மதிப்பிடப்பிட்டுள்ள நிலையில், இது அபாயகரமான அளவில் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அரசின் திட்டச் செயல்பாடுகளுக்கு நிதி ஒதுக்கவும் புதிய திட்டங்களுக்காகவும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும் ஆண்டுதோறும் மார்ச் மாதத்துக்குள் அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, சட்டப்பேரவையின் ஒப்புதலைப் பெற வேண்டும். அதன்படி, 2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். துணை முதல்வரான பின் அவர் தாக்கல் செய்யும் முதல் பட் ஜெட் இதுவாகும். அதேநேரம், முதல்வர் பழனிசாமி அரசின் 2-வது பட்ஜெட் இது.

தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் இதோ:

கல்வி:

பட்ஜெட்டில் பள்ளி கல்வித்துறைக்கு ரூ.27,205.88 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறைக்கு ரூ.4,620.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மாநிலக்கல்லூரி மற்றும் ராணி மேரி கல்லூரியை புதுப்பிக்க ரூ.26 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழ மானியம் ரூ.500.65 கோடியாக உள்ளது. அண்ணாமலை பலகலைக்கழகத்திற்கு ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இளைஞர் நலனுக்கு ரூ.191 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

உள்கட்டமைப்பு:

போக்குவரத்து துறைக்கு மொத்தமாக ரூ.2,717.34 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.11,073.34 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அத்திக்கடவு- அவினாசி திட்டம் ரூ.1789 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் நீர்பாசனத்திற்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மாநில அரசு சார்பில் இந்த ஆண்டு 3,000 புதிய பஸ்கள் வாங்கப்படும்.

வட சென்னை மற்றும் தென் சென்னையில் வெள்ள நிர்வாக திட்டத்திற்கான விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டு மத்திய அரசு உதவிக்கு அனுப்ப பட்டுள்ளது. பேரிட நிவாரண நிதியத்திற்கு ரூ.786 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பாரத் நெட் திட்டம், தமிழ்நாடு ஆப்டிக் நெட் கார்ப்பரேஷன் மூலம் செயல்படுத்தப்படும்.

பெண்கள் நலன்:

பணிக்கு செல்லும் இஸ்லாமிய பெண்களுக்கு பயன் அளிக்கும் வகையில் அரசு செலவில் மகளிரி விடுதி கட்டித்தரப்படும். கர்ப்பிணி பெண்களுக்கு தாய் ஊட்டச்சத்து பெட்டகம் அமைக்கப்படும். திருமண உதவி திட்டங்களுக்கு ரூ.724 கோடி ஒதுக்கப்படும். மகளிர் சுகாதார திட்டத்தில் சானிட்டிர் நாப்கின்கள் வழங்க ரூ.60.58 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்க ரூ.250 கோடி ஒதுக்கீடு.

சமூக நலன்

வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு ரூ. 581.81 கோடி ஒதுக்கீடு. இலவச வேட்டி சேலை திட்டத்திற்கு ரூ.490 கோடி ஒதுக்கீடு. இலங்கை அகதிகள் நலனுக்கு ரூ.109 கோடி ஒதுக்கீடு. முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு ரூ.1,361.60 கோடி ஒதுக்கீடு.

விவசாயம்:

வேளாண் துறைக்கு இந்த ஆண்டு ரூ.8,916 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் உழவன் எனும் பெயரில் செயலி அறிமுகம் செய்யப்படும். கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.8,000 கோடி புதிய கடன் வழங்கப்படும். சென்னை கிண்டியில் ரூ.20 கோடியில் அம்மா பசுமை பூங்கா அமைக்கப்படும். ஓசூரில் மலர் வணிக வளாகம் அமைக்கப்படும்.

மற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:

• முதல் தலைமுறை தொழில்முனவோருக்கு வழங்கப்படும் கடன் தொகை ரூ.5 கோடியாக உயர்வு.

• சிறு, நடுத்தர மற்றும் குறுந்தொழில்களுக்கு ரூ.540.66 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

• சுகாரதாரத்துறைக்கு ரூ.11,638.44 கோடி ஒதுக்கீடு.

• தஞ்சை பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி விரிவாக்க மையம்.

• தமிழ்மொழி விரிவாக்க மையத்திற்கு ஆண்டுதோறும் ரு.2 கோடி ஒதுக்கப்படும்.

• தமிழ் பண்பாட்டு மையம் ரூ.1 கோடியில் அமைக்கப்படும்.

• தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.550 கோடி ஒதுக்கீடு.

• 7,000 ஏக்கரில் ரூ.21.43 கோடி மதிப்பீட்டில் மரங்கள் நடப்படும்.

• மறைமுக வரியில் ஜி.எஸ்.டியால் தமிழகத்திற்கு பாதிப்பு.

• மாநில பொருளாதாரத்தில் நிலவும் நேர்மறை காரணங்களால் வரி வருவாய் அதிகரிக்க வாய்ப்பு.

• மத்திய அரசிடம் சிறப்பு மானியம் கோரியும் இதுவரை பதில் கிடைக்கவில்லை.

• 2018-19 வரவு செலவு திட்ட மதிப்பீடுகள் ரூ.1,12,616 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

• பட்ஜெட்டில் புதிய வரி இல்லை.

• காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.

• 2019 ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் 2 நாட்கள் நடைபெறும்.

• தமிழக பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக உயரும் என கணிப்பு.

• ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற ரூ.20 கோடி.

• பட்ஜெட்டில் தமிழக அரசின் கடன் ரூ.3,55,845 கோடியாக இருக்கும்.

• மெரினாவில் ஜெயலலிதா நினைவு மண்டபம் ரூ.50.80 கோடியில் அமைக்கப்படும்.

• உதய் திட்டத்தை ஏற்றுக்கொண்டதால் தமிழக மின்வாரியத்திற்கு நஷ்டம் அதிகரிப்பு.

• உள்ளாட்சி தேர்தலுக்காக ரூ.172 கோடி ஒதுக்கீடு.

இப்படியான அறிவிப்புகளுக்கிடையே தமிழக அரசின் கடன் சுமை 3.55 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என பட்ஜெட்டில், கணக்கிடப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் நிதி பற்றாக்குறை ரூ. 44,480 கோடியாக இருக்கும் எனவும், வருவாய் பற்றாக்குறையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஜிடிபியில் அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் கடன் பெறுவதால் கடன் சுமை உயர்கிறது. நிதிச்சுமையும், கடன் பற்றாக்குறையும் கட்டுக்குள் இருப்பதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த கடன் சுமை அதிகம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இதுபற்றி பொருளாதார நிபுணர் கெளரி ராமசந்திரன், “‘‘தமிழக பட்ஜெட்டில் வேளாண்மை துறை பற்றிய பெரிய அறிவிப்புகள் இல்லை. சிறு குறு தொழில்கள், சேவை துறைகளை பற்றிய அறிவிப்புகள் இல்லை. இதனால் வேலைவாய்ப்பு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போகும். சர்வதேச முதலீடுகள் பற்றி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. ஆனால், அவை செயல்பாட்டிற்கு வருவதில் சிக்கல்கள் நீடிக்கின்றன. மாநிலத்தின் ஜிடிபி எனப்படும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக உயரும் என பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கடன் சுமை அதிகமாக உள்ள நிலையில் இவற்றை எட்டுவதற்கு வாய்ப்பு குறைவே. கடன் சுமை பற்றிய அறிவிப்பு கவலைக்குரியதாக உள்ளது. நிதிச்சுமையும், கடன் பற்றாக்குறையும் கட்டுக்குள் இருப்பதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்தநேரத்திலும் வரையறை எல்லையை தாண்டி செல்லக்கூடிய ஆபத்து உள்ளது. கடன் சுமை அபாய கட்டத்தில் இருப்பதால் அரசு கவனத்துடன் இருக்க வேண்டும்’’ எனக் கூறினார்.

பாமக தலைவர் ராமதாச் இந்த பட்ஜெட் குறித்து, “இலக்குகளைவிட குறைவாகச் செலவு செய்வதும் அதிக வருவாய் ஈட்டுவதும்தான் நல்ல அரசுக்கு அடையாளமாகும். ஆனால், தமிழக அரசின் செயல்பாடுகள் தலைகீழாக உள்ளன. தமிழக ஆட்சியாளர்களுக்கு நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாது என்பதைத்தான் இது காட்டுகிறது. 2018-19-ம் ஆண்டில் அரசின் மொத்தக் கடன் ரூ.7 லட்சம் கோடியை எட்டக்கூடும். அதாவது தமிழக மக்கள் ஒவ்வொருவரின் தலையிலும் தலா ரூ.1 லட்சம் கோடி கடனை அரசு சுமத்தியுள்ளது. திவாலை நோக்கியப் பயணத்தில் தமிழகத்தையும் தமிழக மக்களையும் மேலும் சில அடி முன்னோக்கி அழைத்துச் சென்றுள்ளது அரசு. இது மக்கள் மகிழ்ச்சியடைய வேண்டிய சாதனை அல்ல… வெட்கித் தலைகுனிய வேண்டிய வேதனை ஆகும்” என்று தெரிவித்துள்ளார்

பொருளாதார நிபுணர் சோம. வள்ளியப்பன், “‘‘தமிழக அரசின் கடந்த பட்ஜெட்டின், நகல் பட்ஜெட்டாகவே இது உள்ளது. சில கவர்ச்சிகரமான திட்டங்கள் இருப்பது போன்ற தோற்றம் இருந்தாலும் கடந்த பட்ஜெட்டில் இருந்து பெரிய மாற்றங்கள் இல்லை. கடன் சுமை அதிகரிப்பதாக கூறப்பட்டுள்ளது கவலையளிக்கிறது. ஜிஎஸ்டி வருவாய் உயர்ந்துள்ளது ஆறுதல் அளிக்கும் அம்சம். மாநிலத்தின் ஜிடிபி 9 சதவீதமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அவ்வாறு உயர்ந்தால் மகிழ்ச்சி’’ என்றார்

Related Posts

error: Content is protected !!