தமிழ் சினிமாவின் நாகரிகக் கோமாளி -கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்!

தமிழ் சினிமாவின் நாகரிகக் கோமாளி -கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்!
  1. நாகர்கோவில் அருகே உள்ள ஒழுகினசேரி கிராமத்தில் 1908-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ம் நாள் பிறந்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் . நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே. வறுமையின் காரணமாக நான்காம் வகுப்புடன் கலைவாணர் பள்ளிக்கூடப் படிப்பை நிறுத்தினார். பிறகு, நாடகக் கொட்டகையில் சோடா, கலர் விற்கத் தொடங்கினார். அப்படித்தான் நாடக ஆர்வம் அவருக்கு வந்தது. ஆனந்த விகடனில் தான் எழுதிய ‘சதிலீலாவதி’ தொடரை அதே பெயரில் படமாக்கினார் எஸ்.எஸ்.வாசன். அதுதான் கலைவாணரின் முதல் படம். ஆனால், ‘சதிலீலாவதி’யை முந்திக்கொண்டு என்.எஸ்.கே.அடுத்து நடித்த ‘மேனகா”வெளிவந்தது. திரைப்படத் துறையில் பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும், திரைப்படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நகைச்சுவை மூலமாக கருத்துகளை பரப்பினார்.
  2. ஏறத்தாழ 150 படங்களில் நடித்தார். ‘வசந்தசேனா’ படப்பிடிப்புக்காக கலைவாணர் அடங்கிய குழு ரயிலில் புனே சென்றது. அப்போது படத்தின் தயாரிப்பாளர் ரயிலைத் தவறவிடவே, வழிச் செலவுக்கு மதுரத்தின் நகைகளை விற்றே குழுவினரின் பசியை தீர்த்தார் கலைவாணர். அந்தச் சமயம்தான் இருவருக்கும் காதல் பூத்தது.இவரது மனைவி மதுரமும் பிரபலமான நடிகை என்பதால் இருவரும் இணைந்தே பல படங்களில் நடித்தனர்.நகைச்சுவையை சினிமா காட்சிகளாக மட்டுமின்றி பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தவர். சொந்த குரலில் பல பாடல்களை பாடியுள்ளார். பழங்கலைகளின் பண்பு கெடாமல் அவற்றைப் புதுமைப்படுத்தி மக்கள் மன்றத்திற்குத் தந்தவர். அவர் நடத்திய, கிந்தனார் கதாகாலட்சேபமும், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவைகளும் இதற்குச் சான்று. என்.எஸ்.கே-யின் கிந்தனார் கதாகாலட்சேபம் பிரபலம். நந்தனாரை கிந்தனார் ஆக்கியதற்கு மதுரம் கோபிக்கவே, ‘பாரதியார் சாப்பிட வராமல் நந்தனாரை எழுதிக்கொண்டு இருந்தபோது, ‘நந்தனாரும் வேண்டாம் கிந்தனாரும் வேண்டாம், சாப்பிட வாங்க!’ என்று சலித்துக்கொண்டாராம் அவர் மனைவி செல்லம்மா. அதில் இருந்து உருவியதுதான் இந்த கிந்தனார்!’ என்று மதுரத்தைச் சமாளித்திருக்கிறார். ஒருமுறை என்.எஸ்.கே-வின் ரஷ்யப் பயணத்தைப்பற்றி நிருபர்கள் கேட்க, ‘ரஷ்யாவில் அக்ரஹாரமும் இல்லை…சேரியும் இல்லை என்று நறுக் என்று பதில் அளித்துள்ளார். அறிவியல் கருத்துக்கள் நாட்டில் பரவ வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர் என்.எஸ்.கே. ‘மணமகள்’ படத்தில் பத்மினியை அறிமுகப்படுத்தி, அவர் ‘நாட்டியப் பேரொளி’ பட்டம் பெறக் காரணமாக இருந்தார். அந்தப் படத்தில் பாலையாவின் நடிப்பைப் பாராட்டி, தனது விலை உயர்ந்த காரை அவருக்குப் பரிசளித்தார். ‘இந்து நேசன்’ பத்திரிகை ஆசிரியர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில், கலைவாணருக்கும் தியாகராஜ பாகவதருக்கும் மறைமுகத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகத்தின்பேரில் இருவரும் கைதானார்கள். லண்டன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் கலைவாணர் விடுவிக்கப்பட்டார். ‘உங்க அப்பா எப்படி ரிலீஸ் ஆனார்னு தெரியுமா? கொலை நடந்த அன்று காருக்கு பெட்ரோல் போட்டதுக்கான ரசீது அவரிடம் இருந்தது. அதை வைத்துத்தான் அவர் விடுதலையானார்.- கலைவாணர் குடும்பத்தினரைப் பார்க்கும்போது எல்லாம் நீதிபதி கற்பகவிநாயகம் இப்படி சொல்லிச் சிரித்துள்ளார். சிறையில் இருந்து விடுதலையான என்.எஸ்.கே-வுக்கு நடந்த பாராட்டு விழாவில்தான் அவருக்கு ‘கலைவாணர்’ என்று பட்டம் சூட்டப்பட்டது.
  3. பட்டம் சூட்டியவர் பம்மல் கே.சம்பந்தம் முதலியார். “என்னைச் சிலர் தமிழ்நாடு சார்லி சாப்ளின்னு சொல்றாங்க. சார்லி சாப்ளினை ஆயிரம் துண்டுகள் ஆக்கினால் கிடைக்கும் ஒரு துண்டுக்குக்கூட நான் ஈடாக மாட்டேன்!” என என்.எஸ்.கே.தன்னடக்கமாக கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் கொடுத்துக் கொடுத்தே வறுமை நிலைக்குத் தள்ளப் பட்டார். அப்போது அவரிடம் வேலை செய்த ஒருவர், ‘எனக்குத் திருமணம்’ என்று வந்து நிற்கிறார். சுற்றும்முற்றும் பார்த்தபோது கண்ணில்பட்டது ஒரு வெள்ளி கூஜா. அதை எடுத்துக்கொடுத்து, ‘இதை விற்றுத் திருமணச் செலவுக்கு வைத்துக்கொள்’ என்றார். தம்பி எவரேனும் என்னிடம் உதவி கேட்டு, நான் இல்லை என்று கூறும் நிலை வந்தால், நான் இல்லாமல் இருக்க வேண்டும்!’ என்று அடிக்கடி கூறுவாராம். யார் எவர் என்று கணக்குப் பார்க்காமல் வாரி வழங்கிய வள்ளல்.
  4. திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு நிதியை அள்ளி அள்ளிக் கொடுத்தவர். இவரால் சினிமாவில் அடையாளம் காணப் பட்டவர்கள் பலர். குமரி மாவட்டம் இப்போதைய கேரளாவோடு இருக்கும் போது ,தமிழர்கள் தாய் தமிழகத்தோடு இணைய வேண்டும் என போராடிய தமிழ் உணர்வாளர்களுக்கு ஆதரவாக நின்றவர். தினமும் ஒரு பிச்சைக்காரர் கலைவாணர் வீட்டு வாசலில் வந்து நிற்பாராம். இவரும் பணம் கொடுப்பார். ‘அவன் உங்களை ஏமாற்றுகிறான்’ என்று வீட்டில் உள்ளவர்கள் சொல்லவே, ‘அவன் ஏமாத்தி என்ன மாடி வீடா கட்டப்போறான். வயித்துக்குத்தானே சாப்பிடப் போறான். ஏமாத்திட்டுப் போகட்டுமே’ என்பாராம். கலைவாணர், காந்தியை மிகவும் நேசித்தவர். காந்தியின் இறப்புக்கு பின் முதன்முதலாக இந்தியாவில் நாகர்கோவில் நகராட்சி பூங்காவில் ஐம்பதாயிரம் செலவில் நினைவுத் தூணை எழுப்பினார்.
  5. அது இன்றும் கவிமணியின் கவிதைகளோடு மக்களை கவர்ந்து வருகிறது.தென்னிந்திய நடிகர் சங்கத்தையும் உருவாக்கினார்.சேலம் அருகே தாரமங்கலம் பஞ்சாயத்தில் நடைபெற்ற அண்ணாவின் படத் திறப்பு விழா தான் கலைவாணர் கலந்துக் கொண்ட கடைசி நிகழ்ச்சி. அதே போல் அண்ணா கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி, கலைவாணரின் சிலை திறப்பு விழா தான்.
  6. கலைவாணர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த சமயம், அவர் இறந்து விட்டதாக அடிக்கடி வதந்திகள் பரவியது. ‘மதுரம், நான் சாகலேன்னா இவங்க விட மாட்டாங்க போல. இவங்க திருப்திக்காகவாவது ஒரு தரம் நான் அவசியம் சாகணும் போலிருக்கே! என்றாராம். ஒரு கட்டத்தில் என்.எஸ்.கே-வின் உடல்நிலை மோசமானதும் , மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர். மருந்து உண்பதை நிறுத்திவிட்டார். 1957-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி தனது 49-வது வயதில் காலமானார். உலகிலேயே இரண்டு நகைச்சுவை நடிகர்களுக்கு தான் சிலை அமைக்கப் பட்டுள்ளது. ஒன்று சார்லின் சாப்ளினுக்கு, மற்றொன்று நம்ம கலைவாணருக்கு தான்.
  7. எக்ஸ்ட்ரா ரிப்போர்ட்:
  8. N S கிருஷ்ணனின் கடைசி நாள்… (இதே ஆகஸ்ட் 30; மறைந்தார்)

தமிழகத்தின் கலைவாணர் என்றழைக்கப்படும் என்.எஸ்.கிருஷ்ணன் ஏகப்பட்ட சொத்துகள் சம்பாதித்தவர் கடைசி காலத்தில் அனைத்தையும் இழந்து படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தார். எம்.ஜி.ஆரின் மிகப் பெரிய வெற்றிப்படமான மதுரை வீரனில் என்.எஸ்.கிருஷ்ணனும், டி.ஏ.மதுரமும் நடித்தனர்.

ஜெமினி கணேசன் சாவித்திரி நடித்த “யார் பையன்” படத்திலும் இந்த ஜோடி நடித்தது. ஏ.எல்.சீனிவாசன் தயாரிப்பில் சிவாஜி கணேசன் , பானுமதி நடித்த “அம்பிகாபதி” படத்தில் என்.எஸ்.கே. நடித்துக் கொண்டிருந்த நேரம்.

அப்போது (1957 ஆகஸ்டு) அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டது. சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனை செய்து, கலைவாணர் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

அதற்கு தீவிர சிகிச்சை அளித்தனர். கலைவாணர் குணம் அடைந்து வருவதாகவும், 10 நாட்களில் வீடு திரும்பி விடுவார் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், ஆகஸ்டு 29_ந்தேதி அவர் உடல்நிலை மோசம் அடைந்தது. அவரைக் காப்பாற்ற டாக்டர்கள் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.

இதே ஆகஸ்டு 30ந்தேதி காலை 11.10 மணிக்கு, தமது 49வது வயதில் காலமானார். செய்தி அறிந்ததும், சென்னை நகரில் உள்ள சினிமா ஸ்டூடியோக்கள் அனைத்தும் மூடப்பட்டன.

எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.ஆர்.ராதா, டி.ஆர்.ராஜகுமாரி உள்பட திரை உலக நட்சத்திரங்கள், என்.எஸ்.கிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று இறுதி மரியாதை செலுத்தினர்.

பலர் கண்ணீர் விட்டு அழுதனர். வாழ்விலும், தாழ்விலும் கலைவாணரின் இணை பிரியாத நண்பராக இருந்த எம்.கே.தியாகராஜ பாகவதர், “கிருஷ்ணா! கிருஷ்ணா!” என்று கதறினார்.மறுநாள் இறுதி ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். ஐ.ஜி. ஆபீஸ் அருகில் உள்ள மயானத்தில் உடல் தகனம் நடந்தது. “சிதை”க்கு கிருஷ்ணனின் மூத்த மகன் என்.எஸ்.கே.ராஜா தீ மூட்டினார்.

நாகையா தலைமையில் நடந்த இரங்கல் கூட்டத்தில் அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் கருணாநிதி, தியாகராஜ பாகவதர், கே.ஆர்.ராமசாமி, சிவாஜிகணேசன், கண்ணதாசன் உள்பட 21 பேர் பேசினார்கள்.

எம்.ஜி.ஆர். பேச எழுந்தார். துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டு அழுதார். பேச முடியாமல் மேடையை விட்டு இறங்கிவிட்டார். என்.எஸ்.கே. மரணத்துக்கு பிறகு, “அம்பிகாபதி” வெளிவந்தது. படத்தில், அவர் இறந்துவிடுவதாக கதையை முடித்து, அவருக்கு சிலை வைக்கப்படுவதாகக் காட்டினார்கள். கலைவாணர் மரணத்தால், தமிழ்த் திரை உலகில் ஒரு சகாப்தம் முடிவடைந்தது.

தமிழ் நடிகர், நடிகைகளில், 100 படங்களுக்கு மேல் நடித்தவர்கள் என்ற பெருமையை முதன் முதலாகப் பெற்றவர்கள் கலைவாணரும், டி.ஏ. மதுரமும்தான். வருமானத்தில் பெரும் பகுதியை தர்மம் செய்வதற்கே செலவிட்டார். உதவி தேடி வருகிறவர்களை வெறும் கையுடன் அனுப்பமாட்டார்.பணம் இல்லாத போது, வீட்டில் உள்ள வெள்ளிப்பாத்திரங்களைக் கொடுத்து இருக்கிறார். கலைவாணர் மறைவுக்குப் பிறகு ஒரு சில படங்களில் மதுரம் நடித்தார்.

பின்னர் பட உலகில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். அவர் 1957ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி காலமானார்.

error: Content is protected !!