ரத்தன் டாடா காலமானார்!

ரத்தன் டாடா காலமானார்!

ந்தியாவின் பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா, புதன்கிழமை அன்று மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்தத் தகவலுக்கு மறுப்பு தெரிவித்திருந்தார் ரத்தன் டாடா. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் வயோதிகத்தால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவர் புதன்கிழமை இரவு காலமானார். வய்து 86

இன்று நம் நாட்டில் ரத்தன் டாடா நிறுவனம் தொடாத தொழிலே இல்லை எனக் கூறும் அளவிற்கு வளர்ச்சி பெற்றிருக்கும் ஓர் நிறுவனம் ஆகும். பருத்தி முதல் கார் வரை டாடா நிறுவனம் உற்பத்தி செய்யாத பொருட்களே இல்லை எனக் கூறலாம். இந்தியாவில் கடைக்கோடியில் இருப்பவரையும் டாடா நிறுவனத்தின் தயாரிப்புக்கள் சென்றடைந்துள்ளன. இதன் பெருமைக்கு வித்திட்டவர் ரத்தன் டாடா எனும் பிரபல தொழிலதிபர்.இந்தியாவின் மிக நீண்ட பாரம்பரியம் கொண்ட டாடா நிறுவனத்தின் வாரிசான ரத்தன் டாடாவின் தனிமனித வருவாய் இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானியை விட அதிகம் எனப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

தொடக்க வாழ்க்கை

டாடா 1937 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் திகதி சூரத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் பெயர் சூனு மற்றும் நவால் ஹார்முஸ்ஜி டாடா ஆகும். மும்பையில் வளமும் புகழும் மிகுந்த டாடா குடும்பத்தில் ரத்தன் டாடா பிறந்தார்.இவரது குழந்தைப் பருவ வாழ்க்கையானது இடர் நிறைந்ததாக இருந்தது. காரணம் இவரது பெற்றோர்கள் இவருக்கு ஏழு வயதாக இருந்த போதே பிரிந்தனர். இவரது தாயார் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்ற பின் அவரையும்⸴ சகோதரியையும் பாட்டியான “லேடி நவஜிபாய்” வளர்த்து வந்தார்.தாய்ப் பாசத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்த ரத்தன் டாடாவுக்கு அவரது பாட்டி இன்னொரு தாயாகவே மாறினார். பாட்டியின் மடியே அவரின் சோகங்களை எல்லாம் இறக்கி வைக்கும் புகலிடமாய் அமைந்தது.


பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த இவர் மும்பை மற்றும் சிம்லாவில் பள்ளிப் படிப்பை முடித்தார். இயந்திரப் பொறியியல் படிக்க வேண்டும் என்று இவரது தந்தை இவரை நிர்ப்பந்திக்க அதில் ரத்தன் டாடாவிற்கு துளியும் விருப்பமில்லை.என்றாலும் கண்டிப்பான தந்தையின் ஆணையை அவரால் மறுக்க முடியவில்லை. பாதி மனதுடன் இயந்திரப் பொறியியல் பயில அமெரிக்கா சென்றார். ஆனால் அங்கு அவரால் முழுமனதுடன் கல்வியில் கவனம் செலுத்த முடியவில்லை.இதற்கு காரணம் கட்டடக் கலையில் அவருக்கிருந்த ஆர்வம் தான். தன்னால் இனி இயந்திரப் பொறியியல் தொடர முடியாது என பாட்டியிடம் கூறிவிட்டு தனக்கு கட்டடக் கலையைப் பயிலவே அதிக விருப்பம் இருப்பதாகவும் கூறினார்.

அதனை ஏற்ற பாட்டி கட்டிடக் கலையை பயில ஏற்பாடு செய்தார். பாட்டியின் உதவியுடன் கோர்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலையைப் பயின்றார்.இதன்படி 1962 ஆம் ஆண்டு கோர்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டமைப்பு பொறியியலில் பிஎஸ்சி இளங்கலை பட்டம் பெற்றார். 1975இல் வணிகப் பள்ளியில் உயர் மேலாண்மை பட்டம் பெற்றார். இவர் இன்றுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை.

டாட்டா தலைமையில் அசுர வளர்ச்சி

நிர்வாக மேற்படிப்பை ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் படித்து மிகப் பெரிய நிறுவனமாக இன்றளவும் விளங்கும் ஐபிஎம் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். எனினும் தாய் நாட்டின் மீது கொண்ட பற்றின் காரணமாக இந்தியாவிற்கே திரும்பி தனது குடும்ப வணிகத்தை தொடர்ந்தார்.1975ஆம் ஆண்டிலேயே டாடா குழுமத்தில் சேர்ந்தார். முப்பது வருடங்கள் அயராத உழைப்பின் பயனாக 1991 இல் டாடா குழுமத்தின் தலைவராகவும்⸴ நிறுவனராகவும் நியமிக்கப்பட்டார். இவரின் பின்னரே டாடா குழுமம் அசுர வளர்ச்சி கண்டது.

டாடா குழுமம் இவரின் சொந்த நிறுவனமாக இருந்தாலும் சிறுசிறு பொறுப்புகளில் இருந்துள்ளார். இதனால் இவரால் வெற்றியின் ரகசியத்தை நன்கு அறிந்து கொள்ள முடிந்தது. சர்வதேச சந்தையில் தங்கள் நிறுவனத்திற்கான வாய்ப்புகளைச் சரியான வகையில் கண்டுபிடித்தார். இவர் இரும்பு⸴ ஐடி துறை⸴ கெமிக்கல்⸴ கார்கள்⸴ டீ எனப் பல துறைகளிலும் தனது வர்த்தக நடவடிக்கையை வெற்றிகரமாக விரிவுபடுத்தினார்.

இதில் ஐடி துறை இன்றளவிலும் இந்தியாவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (Tata Consultancy Services, டிசிஎசு ) நிலைத்து வருகின்றது. இது இந்தியா மட்டுமல்லாது பல நாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களுக்கு வாழ்வளித்து வருகின்றது. இந்நிறுவனம் ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலருக்கு மேல் வருவாயை ஈட்டித் தருகின்றது. இது மட்டுமன்றி வாகன தயாரிப்பிலும் தனக்கென ஒரு இடத்தை கொண்டுள்ளது.

டாடா நிறுவனத்தின் உற்பத்திகளில் ஒன்றான நானோ கார்களை நடுத்தர குடும்பங்களின் கார் கனவுகளை நனவாக்கிக் கொள்ள⸴ குறைந்த விலையில் தயாரித்து உள்ளது.அதாவது இன்று சர்வதேச அளவில் நடுத்தரக் குடும்பத்தினர் ஒரு பைக்கில் 4 பேராக கஷ்டப்பட்டுப் போவதைப் பார்க்கும்போதெல்லாம், குறைந்த விலையில் சிறிய கார் தயாரிக்கவேண்டும் என்ற உந்துதல் இவரிடம் ஏற்பட்டது. இந்த கனவு, ‘டாடா இண்டிகா’ வடிவில் 1998-ல் நிஜமானது. உலகிலேயே மலிவாக ரூ.1 லட்சத்துக்கு கார் வெளியிடுவதாக அறிவித்தார். ‘டாடா நானோ’ கார் 2008-ல் உற்பத்தியாகி வந்தபோது அதன் செலவு அதிகரித்துவிட்டது. ஆனாலும், விலையை உயர்த்த மறுத்துவிட்டார்.

இரும்புத் துறையிலும் தனக்கென ஒரு இடத்தை வகிக்கின்றது. இவ்வகையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியிலும் இவரது பங்களிப்பு அளப்பரியது ஆகும்.இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் மாபெரும் மாற்றம் ஏற்படுத்திய தொழிலதிபர் இவர். பிரதமரின் வணிகம் மற்றும் தொழில்கள் தொடர்பான குழுவில் உறுப்பினராக இருந்தவர். பல்வேறு வெளிநாட்டு அறக்கட்டளைகளுக்கு அறங்காவலர் குழு உறுப்பினராக இருந்தவர். பில்கேட்ஸ் நிறுவனத்தின் இந்திய எய்ட்ஸ் திட்டக் குழுவிலும் இருந்தவர்.

ரத்தன் டாடா அடிக்கடி நவீன வளர்ச்சியை தனக்கு சாதகமாகக் கையிலெடுப்பார்.  அதன்படி நெல்கோ நிறுவனம் மூலம் செயற்கைக்கோள் சேவையை வழங்கத் தொடங்கினார். இந்தப் புதிய மாற்றம் நெல்கோ நிறுவனத்தை லாபகரமாக மாற்றியது. குறுகிய நாட்களிலேயே வளர்ச்சியை அதிகரித்தது அந்நிறுவனம் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி வெற்றியடையும் டாடாவின் இந்த வியூகம் பலரையும் வியப்பில் ஆழ்த்தின. மும்பையில் நடந்த விருது விழாவில் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

தனது ஓய்வின் பின்பு டாடா நிறுவனத்தின் தலைவராக யாரை நியமிக்கலாம் என ரத்தன் டாடா தீவிர ஆலோசனை செய்தார். அப்போது டாடா நிறுவனத்தின் PCS தலைவராக இருந்த தமிழரான நடராஜன் சந்திரசேகரனின் நினைவு அவருக்கு வரவே இவரைவிட பொருத்தமான நபர் வேறு யாரும் கிடைக்க மாட்டார் எனக் கருதிய ரத்தன் டாடா அவரை டாடா நிறுவனத்தின் தலைவராக நியமித்தார்.பாரம்பரிய டாடா குழுமத்தின் தலைவராக ஒரு தமிழர் நியமிக்கப்பட்டது அனைத்துத் தமிழர்களுக்கும் பெருமையான தருனமாகும். இளைய தலைமுறைக்கும் சாதிக்கத் துடிக்கும் நபர்களுக்கும் சக போட்டியாளர்களுக்குமே ரத்தன் டாடா முன்னுதாரமான நபராக திகழ்ந்தார்.

பத்மபூஷண், பத்மவிபூஷன், நற்பணிகளுக்கான கார்னகி பதக்கம், சிங்கப்பூர் அரசு வழங்கிய கவுரவக் குடிமகன் அந்தஸ்து, பிரிட்டிஷ் அரசின் ஹானரரி நைட் கமாண்டர் ஆஃப் பிரிட்டிஷ் எம்பயர் ஆகிய கவுரவங்களைப் பெற்றுள்ளார். டைம் இதழ் வெளியிட்ட உலகின் செல்வாக்கு படைத்த 100 பேர் பட்டியல் மற்றும் உலகின் சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் இடம்பெற்றவர். 2012 வரை டாடா குழுமத் தலைவராக இருந்த இவர் தற்போது டாடா குழும அறக்கட்டளைகளின் தலைவராக இருந்து வழிநடத்தியவர்.பணக்காரர் பட்டியலில் இவரின் பெயர் நிரந்தரமாக இருக்கிறதோ இல்லையோ ஆனால் நிச்சயம் மனிதநேயர் என்ற பட்டியலில் அவரின் பெயர் நிச்சயம் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

நிலவளம் ரெங்கராஜன்

error: Content is protected !!