ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கிடுச்சு!

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கிடுச்சு!

ந்திய முதல்தர கிரிக்கெட்டாக திகழும் ரஞ்சி கோப்பை போட்டி 1935-–36-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முதல்முறையாக ரஞ்சி கோப்பை போட்டி கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதன்படி 87-வது ரஞ்சி கிரிக்கெட் தொடர் இந்தியாவில் 9 நகரங்களில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. அவை இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக லீக் சுற்று இன்று முதல் மார்ச் 15-ந்தேதி வரையும், அடுத்தகட்டமாக நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் ஐ.பி.எல். முடிந்த பிறகு மே 30-ந்தேதி முதல் ஜூன் 26-ந்தேதி வரையும் நடைபெறுகிறது. போட்டிகள் சென்னை, கொல்கத்தா, ஆமதாபாத், டெல்லி உள்பட 9 நகரங்களில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையம் (பயோ பபுள்) உருவாக்கப்பட்டு அதில் இணைந்த வீரர்கள் 5 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அப்போது இரண்டு முறை கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட்டது. 2019-–20-ம் ஆண்டில் 169 ஆட்டங்கள் நடந்தன. ஆனால் இந்த சீசனில் மொத்தம் 65 ஆட்டங்களில் சாம்பியன் யார் என்பது தெரிந்து விடும்.

இதில் பங்கேற்கும் 38 அணிகளில் 8 ‘எலைட்’ பிரிவில் தலா 4 அணிகளும், ‘பிளேட்’ பிரிவில் 6 அணிகளும் இடம் பெற்றுள்ளன. ‘எலைட்’ பிரிவில் ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். ‘பிளேட்’ பிரிவில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் 3 அணிகளை மட்டுமே சந்திக்கும். லீக் சுற்று முடிவில் ‘எலைட்’ பிரிவில் ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இடங்களை பிடிக்கும் 8 அணிகளில் சிறந்த 7 அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெறும். எஞ்சிய ஒரு அணி, ‘பிளேட்’ குரூப்பில் முதலிடத்தை பெறும் அணியுடன் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் மோதும்.

விஜய் சங்கர் தலைமையிலான தமிழக அணி ‘எச்’ பிரிவில் அங்கம் வகிக்கிறது. டெல்லி, சத்தீஷ்கார், ஜார்கண்ட் அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். தமிழக அணி தனது தொடக்க ஆட்டத்தில் டெல்லி அணியை இன்று சந்திக்கிறது. 4 நாள் கொண்ட இந்த ஆட்டம் கவுகாத்தியில் தொடங்குகிறது.

மற்றொரு ஆட்டத்தில் 41 முறை சாம்பியனான பிரித்வி ஷா தலைமையிலான மும்பை அணி, நடப்பு சாம்பியனான ஜெய்தேவ் உனட்கட் தலைமையிலான சவுராஷ்டிராவை ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் மற்றொரு வகையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் ரன் எடுக்க முடியாமல் தடுமாறும் அஜிங்யா ரஹானேவும் (மும்பை), புஜாராவும் (சவுராஷ்டிரா) உள்ளூர் அணிக்கு திரும்பியுள்ளனர். இலங்கை டெஸ்ட் தொடருக்கு முன்பாக ரஞ்சி போட்டியில் கால்பதிக்கும் அவர்கள் ரன் குவிக்க வேண்டியது அவசியமாகும். அதனால் எப்படி ஆடப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Related Posts

error: Content is protected !!