மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம் காலமான கடைசி நிமிடங்கள்!

மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம் காலமான கடைசி நிமிடங்கள்!

இன்று நினைவஞ்சலி கடைப்பிடிக்கப்ப்டும் மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம் காலமான கடைசி நிமிடங்கள் குறித்து அவரது ஆலோசகர் ஸ்ரீஜன் பால் சிங் விரிவாக பகிர்ந்து கொண்டுள்ளார். மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் ஐஐஎம் கல்லூரி நிகழ்ச்சி மேடையில் கலாம், திடீர் மாரடைப்பால் மயங்கி சரிந்த போது அவரை தாங்கிப்பிடித்தவர் இவர். கலாமின் நெருங்கிய ஆலோசகர் ஸ்ரீஜன் பால் சிங், பேஸ்புக்கில் தன் நினைவலைகளை, அதிலும் கடைசி சில மணி நேரத்தில் நடந்த சம்பவங்களை தொகுத்து கூறியுள்ளார்.

அவர் கூறிய தகவல்கள்கள் இன்றைய நினைவூட்டலுக்காக:

கடந்த 27ம் தேதி பகல் 12 மணிக்கு டெல்லியில் இருந்து விமானத்தில் கலாமுடன் நானும் கிளம்பினேன். அவருக்கு 1ஏ சீட்; எனக்கு 1 சி சீட். வழக்கமாக அவர் அணியும் ‘கலாம் சூட்’ டில் வந்திருந்தார். கருப்பு நிற கோட் அது. நான் புன்முறுவல் பூத்தபடி, சூப்பராக இருக்கிறது என்றேன். அதற்கு சிரித்துக் கொண்டார்.

இரண்டரை மணி நேரம் பயணித்து கவுகாத்தியை அடைந்தது விமானம். பருவமழை காலத்தில், விமானத்தில் இரண்டரை மணி நேரம் பயணம் என்பது சற்று எரிச்சலைத் தருவதே. அதுவும் விமானத்தின் சிறு ஜெர்க்குகள் எனக்கு வெறுப்பாக இருந்தது. ஆனால், கலாமுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம். எனது வெறுப்புணர்வையும் குளிரில் நடுங்கியதையும் பார்த்த கலாம் சிரித்தபடியே ஜன்னலை மூடி விட்டு, ‘இனி உனக்கு குளிராது; பயப்பட மாட்டே தானே…’ என்று கண்களை சுருக்கி சிரித்தபடியே சொன்னார்.

அடுத்ததாக ஐ.ஐ.எம். ஷில்லாங்குக்கு கார் மூலமாக இரண்டரை மணி நேரப் பயணம். விமானப் பயணம், கார் பயணம் என பயணமே 5 மணி நேரத்தை விழுங்கிவிட்டது. ஆனால் அந்த 5 மணி நேரமும் நாங்கள் நிறையப் பேசினோம், ஆலோசித்தோம், விவாதித்தோம். கடந்த ஆறு ஆண்டுகளில் இதுபோன்ற நிறைய தருணம் எனக்கு வாய்த்திருக்கிறது. அன்றைக்கு ஏழு கார்கள் அணிவகுத்தன. அதில் இரண்டாவது காரில் கலாமுடன் நான் பயணித்தேன். கடந்த ஆறாண்டாக பல விஷயங்கள் பேசியிருந்தாலும், ஷில்லாங் சேரும் வரை கிடைத்த இரண்டரை மணி நேர பேச்சு என் நினைவை விட்டு அகலாது. வழக்கம் போல எந்த சப்ஜெக்ட் பற்றியும் என்னுடன் அளவளாவுவார்.

காரில் மூன்று விஷயங்கள் பேசினோம். அதில் அவரின் மனிதநேயத்தை நான் மீண்டும் ஒரு முறை கண்டேன். முதல் விஷயம்: ஷில்லாங் ஐஐஎம் கல்லூரியில் பேச வேண்டிய பேச்சு தலைப்பு, மனிதன் வாழக்கூடியதான இன்னொரு பூமி உருவாக்குவது பற்றியது. இது பற்றி பேசிக்கொண்டே வந்தபோது அவர் சொன்ன ஒரு முத்தான வார்த்தைகள்: ‘மனிதன் உருவாக்கும் எந்த சக்திகளும் , மனிதன் வாழக்கூடிய பூமிக்கு ஆபத்தாக தான் இருக்கும் போலிருக்கே…இந்த சுற்றுச்சூழல் மாசு போல…’ என்றார். ஆழமான கருத்து என்னை வியக்க வைத்தது.

இரண்டாவது சப்ஜெக்ட், நாடாளுமன்றம் பற்றியது. ‘நான் பதவியில் இருந்தபோது இரு வேறு அரசுகளையும் பார்த்து விட்டேன். ஆனால், நாடாளுமன்றத்தை பொறுத்தவரை கூச்சல் குழப்பம் தொடர்ந்து கொண்டே இருக்கிறதே…இது தவறுதானே… நாடாளு மன்றம் , வளர்ச்சி சார்ந்த அரசியல் விஷயங்களுக்கு இடமளிக்க கூடியதாக இருக்க வேண்டும். இதற்கு நாம் ஏதாவது செய்தாக வேண்டும்…’என்று முடித்தார். அத்துடன் நிற்கவில்லை; ‘;நீ என்ன பண்ணு, ஷில்லாங் மாணவர்களிடம் என் பேச்சின் கடைசியில் கேள்விகளை கேட்கிறேன். அதற்கு இந்த சப்ஜெக்ட்டை வைத்து தயார் செய்யேன்…’ என்றும் சொன்னார்.
மூன்றாவது சப்ஜெக்ட் தான் அவரின் மனித நேய மாண்பின் உச்சத்தை வெளிக்காட்டியது. எங்கள் காருக்கு முன்னால் ராணுவ ஜீப்பில் மூன்று வீரர்கள் அமர்ந்திருந்தனர். ஒருவர் நின்றபடியே துப்பாக்கியை நீட்டியபடி கண்காணித்தவாறே வந்தார். ஆரம்பத்தில் இருந்தே இதை கவனித்து வந்துள்ளார் கலாம். அது எனக்கு தெரியவில்லை. ‘ஏன் அவர் நின்று கொண்டே இருக்கிறார்? இது பனிஷ்மென்ட் போலத்தான். நீ உடனே வயர்லெஸ் மூலம் சொல்லி, அவரை உட்கார சொல்லேன்…’என்றார். நானும் வயர்லெஸ்சில் சொன்னேன். ஆனால், அந்த வீரர் உட்காரவே இல்லை.

அறையில் சில நிமிடம் கூட தங்கவில்லை. உடனே கல்லூரி நிகழ்ச்சி மேடைக்கு வந்து விட்டார். ‘மாணவர்களை நிற்க வைக்க கூடாது’ என்று சொல்லி, என்ன தயார் செய்துட்டியா…’ என்று கேட்டபடியே மைக் முன் நின்று விட்டார். நான் போய் மைக்கை சரி செய்தேன். நான் அவருக்கு பின்னால் அமர்ந்திருந்தேன். கம்ப்யூட்டரில் அவர் பேச்சை கவனித்தபடியே இருந்தேன். 2 நிமிடம் தான் …பேசிக் கொண்டிருந்த கலாம் வாயை அகல திறந்து மூச்சை இழுத்து விட்டார். அடுத்த நொடி சரிந்து விழுந்து விட்டார். எல்லாம் ஒரு சில நொடிகளில் நடந்து விட்டது.

உடனே.. உடனே மருத்துவமனைக்கு அவரை தூக்கி கொண்டு விரைந்தோம். காரில் போன போது, அவரின் கண்கள், நான்கில் மூன்று பங்கு மூடியபடி இருந்ததை நான் கவனிக்க தவறவில்லை. முகத்தில் சலனமில்லை. வலியை கூட உணரவில்லை; அப்படியே அசைவற்று இருந்தார். ஐந்து நிமிடத்தில் மருத்துவமனையை அடைந்து விட்டோம். டாக்டர்கள் அவரை பரிசோதித்து விட்டு, அவர் உயிர் பிரிந்து விட்டதை உறுதி படுத்தினர். என் கண்களில் நீர் வழிந்தது; கைகள் நடுங்கின. அவர் காலை பற்றி ஒரு நிமிடம் பிரார்த்தித்தேன். இதுதான் கலாம் ஆலோசகர் ஸ்ரீஜன் பால் சிங் சொன்னது.

error: Content is protected !!