பம்பர் – விமர்சனம்!

பம்பர் – விமர்சனம்!

னிதனாகப் பிறந்த நாம் செய்கின்ற தொழில்⸴ வாழ்கின்ற வாழ்க்கை நம்மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு என அனைத்திற்கும் நேர்மையாக இருப்பதே உயரிய பண்பாகும். இன்று நேர்மையான மனிதர்களைக் காண்பது அரிது என்பது வருத்தமளிக்கவே செய்கின்றது. ஆனால் நேர்மையற்ற வாழ்க்கை நிலையற்றது⸴ நேர்மையான வாழ்க்கையே நிரந்தரமானது என்ற உண்மையை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் லாட்டரி டிக்கெட்ஒன்றை மையாமாக்கி குடும்பத்தோடு பார்க்க கூடிய முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக கொடுத்தது மட்டும் இன்றி சமய ஒற்றுமை, தனிமனித ஒழுக்கம், பணத்தால் மாறும் குணம் என்று ஏகப்பட்ட நல்ல விஷயங்களையும் சொல்லி அசத்தியிருக்கிறார் பம்பர் படத்தின் இயக்குநர் எம்.செல்வகுமார்.

சின்ன சின்ன திருட்டுகள், உருட்டல், மிரட்டல், குடி, கூத்து எனக் கூட்டாக சேர்ந்து செய்தபடி வாழ்க்கையை ஓட்டி வருகிறார்கள் நாயகன் புலிபாண்டியும் (வெற்றி) அவரது மூன்று நண்பர்களும். ஒரு சூழலில் அவர்களை போலீஸ் குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பார்க்கிறது இதிலிருந்து தப்பிக்க அவர்கள் ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டு செல்கின்றனர். அப்போது, ஒரு இஸ்லாமிய முதியவரிடம் லாட்டரி சீட்டு வாங்குகிறார் புலிப்பாண்டி. அதை அவர் அங்கேயே தொலைத்துவிட, அந்த லாட்டரி சீட்டுக்கு பத்துகோடி ரூபாய் விழுகிறது. தொலைந்த சீட்டும், பம்பரில் கிடைத்த பணமும் இறுதியில் யாருக்குக் கிடைத்தது என்பதுதான் பம்பர் படத்தின் திரைக்கதை.

புலிப்பாண்டி ரோலில் நடித்திருக்கும் வெற்றி தன்னை இம்ப்ரூவ் செய்து கொள்வதில் ஆர்வமே காட்டுவதில்லை… சகல உணர்ச்சிகளுக்கு ஒரே மாதிரியான முகபாவனையைக் காட்டி வெறுப்பேற்றுகிறார்.. இடைவேளைக்கு பிறகே அதிக காட்சிகளில் வரும் ஹரிஸ் பேரடி, இஸ்லாமிய முதியவராகவே வாழ்ந்திருக்கிறார். அவரிடம் இருக்கும் மிடுக்கான உடல்மொழியோ, மிரட்டும் பார்வையோ இந்தப் படத்தில் எதிர்பார்க்க முடியாது. கனிவும், நேர்மையும் கொண்ட கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். நாயகி ஷிவானி கதாபாத்திரம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இதுதவிர ஜி.பி. முத்து, தங்கதுரை செய்யும் காமெடிகள் ஓரளவு ஓகே. காவலராக வரும் கவிதா பாரதி, மதன் குமார் ஆகியோரும் குறை இல்லாத நடிப்பை வழங்கியுள்ளனர்.

கேமராமேன் வினோத் ரத்தினசாமியின் ஒளிப்பதிவு ஒட்டு மொத்தமாக பிரமாண்டமாக படமாக்கியிருப்பதோடு, தூத்துக்குடி மற்றும் கேரளப் பகுதிகளையும் மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறது. கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக சரணமே, சரணமே’, ‘லாட்டரி கண்ணே’ பாடல்கள் ரசிக்க வைக்கின்றனர். கதை தோய்வதாகத் தெரியும் இடங்களில் பின்னணி இசையும் தாங்கிப் பிடிக்கிறது.

காசி விஸ்வநாதனின் கத்திரிகோல்தான் கொஞ்சம் மழுங்கி விட்டது போலும்.. . சலிப்பூட்டும் சண்டைக் காட்சிகளையும், நண்பர்களுக்கு இடையிலான உரையாடல் காட்சிகளையும் வெட்ட தவறி விட்டார்.

ஒரே ஒரு நேர்மையான கதாபாத்திரத்தை சுற்றி ஏகப்பட்ட கிளைக் கதாபாத்திரங்களை உருவாக்கி ஒரு நேர்த்தியான திரைக்கதை எழுதியுள்ளார் அறிமுக இயக்குநர் செல்வக்குமார். படத்தின் முதல் பாதியில் கதையைவிட, தூத்துக்குடி வட்டார வழக்கே தாங்கிப் பிடிக்கிறது. இரண்டாம் பாதியின் திரைக்கதை கனகச்சிதம். எதிர்பாராத திருப்பங்களும், இறுதிக் காட்சியும் புது ரகம். பத்து கோடி என்ற தொகை மிகைதான் என்றாலும் முத்தாய்ப்பாக எந்த நிலையிலும் நேர்மையோடு வாழ்பவர்களுக்கு கடவுள் மனித ரூபத்தில் வந்து உதவி செய்வார், என்ற மெசஜை எளிமையாக சொல்லியிருக்கும் பாணிக்காகவே படத்தைப் பார்க்கலாம்

மொத்தத்தில் இந்த பம்பர் – கோலிவுட்டின் அதிர்ஷ்டம்

மார்க் 3.75/5

error: Content is protected !!