என்னை சிறந்த மனிதனாகவும், சிறந்த அதிபராகவும் மாற்றியது நீங்களே! – ஒபாமா நெகிழ்ச்சி

என்னை சிறந்த மனிதனாகவும், சிறந்த அதிபராகவும் மாற்றியது நீங்களே! – ஒபாமா நெகிழ்ச்சி

அமெரிக்க அதிபர் ஒபாமா தனது இறுதிப் பேருரையை சிகாகோவில் ஆற்றினார். அங்கு தான் அவரது அரசியல் பயணம் தொடங்கியது. கடந்த 2008 மற்றும் 2011 ஆம் ஆண்டு ஒபாமா வெற்றிபெற்றதாக சிகாகோவில் தான் அறிவிக்கப்பட்டது.கடந்த 8 ஆண்டுகளாக வெள்ளை மாளிகையில் வசித்து வந்த ஒபாமாவின் குடும்பம் அந்த மாளிகையை காலி செய்து விட்டு சிகாகோ புறப்பட்டனர்.

obama jan 11

இதையொட்டி அதிபராக தனது கடைசி உரையை சிகாகோவின் மெக்கார்மிக் திடலில் அவர் ஆற்றினார். அமெரிக்க மக்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் அவரது உரையை சோகத்துடனும் செவி மடுத்தனர்.

அப்போது பேசிய ஒபாமா, “ உங்கள் தயவால்தான் நான் சிறந்த அதிபராக இருந்தேன். என் பதிவி கால சாதனைகளில் மக்களாகிய உங்கள் ஒவ்வொருவருக்கும் பெரும் பங்கு உள்ளது. மக்கள் நினைத்தால் மட்டுமே மாற்றம் ஏற்படும். நீங்கள் என்னை சிறந்த மனிதனாகவும், சிறந்த அதிபராகவும் மாற்றி உள்ளீர்கள். நீங்கள் நாள்தோறும் எனக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளீர்கள். அதற்காக உங்களுக்கு நன்றி தெரிவிக்கும் நேரமிது. கடந்த சில வாரங்களாக நானும் எனது மனைவியும் பாராட்டு மழையில் நனைந்து வருகிறோம். இப்போதைய நிலையில் அமெரிக்கா பலமான இடத்தில் உள்ளது. வரலாற்றிலேயே அதிக அளவிலான வேலைவாய்ப்பை அமெரிக்கா உருவாக்கி உள்ளது.
உங்களால் தான் அமெரிக்கா பலமான நிலையை அடைந்துள்ளது. நமது பொருளாதாரம் வளர்ச்சி அடைந்ததாக உள்ளது. இந்த வளர்ச்சி போதாது. இன்னும் நாம் வளர வேண்டும். ஜனநாயகத்தின் மூலமே நமது வளர்ச்சியை அடைய முடியும்.

பயங்கரவாதம் ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது. இதனை நமது குழந்தைகளுக்கு எடுத்துரைத்து அவர்களை திறமையானவர்களாக வளர்க்க வேண்டும். மக்கள் ஒருங்கிணைத்தால் மட்டுமே மாற்றங்களும், வளர்ச்சிகளும் சாத்தியமாகும். 8 ஆண்டுகளாக உங்களின் அதிபராக இருந்ததில் இதனை நான் நம்புகிறேன். இது எனது நம்பிக்கை மட்டுமல்ல நமது அமெரிக்காவின் கொள்கையும் இது தான். ஒன்றாகவே வீழ்வோம் அல்லது ஒன்றாகவே எழுவோம். அடுத்த 10 நாட்களில் அமைதியான முறையில் தலைமை மாற்றம் இருக்கும்.

அமெரிக்காவில் குடியேறியவர்களின் குழந்தைகளின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அமெரிக்க வளர்ச்சியில் குடியேறியவர்களின் பங்கு முக்கியமானது. கடந்த 8 ஆண்டுகளில் பயங்கரவாத தாக்குதல் ஏதும் நடத்தப்படவில்லை. சட்டங்கள் மட்டும் போதாது. மனங்கள் மாற வேண்டும். பயங்கரவாதம் அமெரிக்காவில் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

ஒபாமா உரையாற்றிக் கொண்டிருந்த போது அவரது ஆதரவாளர்கள் பலர், அவர் மேலும் 4 ஆண்டுகள் அதிபராக நீட்டிக்க வேண்டும் என கோஷமிட்டனர். அப்போது பேசிய ஒபாமா, ஆதரவாளர்களின் கோரிக்கைப்படி அடுத்த 4 ஆண்டுகள் அதிபராக இருக்க முடியாது. எனது நலனில் அக்கறை கொண்டவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நேரம் இது. அவர்களை என்றும் நான் மறக்க மாட்டேன் என்றார்

error: Content is protected !!