நீட் தேர்வின் மீதான பிரபஞ்சன் கருத்தும் கணிப்பும்!

நீட் தேர்வின் மீதான பிரபஞ்சன் கருத்தும்  கணிப்பும்!

நீட் குறித்து நீட்டில் முதல் மதிப்பெண் வாங்கிய மாணவர் பிரபஞ்சன் கூறியிருக்கும் கருத்துக்கு அவரை ட்ரோல் மெடீரியலாக ஆக்குவது தவறு . அவரவர்க்கு அவரவர் பார்வை அது சார்ந்த கருத்துகள் இருக்கும் . எப்போதும் அடுத்தவரின் பார்வையை ட்ரால் செய்வதும், அதை மட்டுப்படுத்துவதும் தவறான போக்கு.

அது போக பனிரெண்டாம் வகுப்பு முடித்த வளர் இளம் பருவத்து மாணவ மாணவிகளுக்கு இன்னும் உலகின் அனைத்து சாராம்சங்களும் தெரியாது. அவர்கள் உங்களை என்னைப் போல வீட்டில் வளர்க்கப்பட்டவர்கள். இனி மேல் தான் அவர்கள் உலகத்தை பார்க்க இருக்கிறார்கள்.. எனக்கான இன்றைய கொள்கை மற்றும் நம்பிக்கைகள் கடந்த பத்து வருடங்களில் வளர்த்துக் கொண்டவை தான் எனும் போது ஒவ்வொருவருக்கும் சூழல் மற்றும் காலம் கற்றுத் தரும் கல்வி நிகழ்ந்தேற வாய்ப்பளிக்க வேண்டும் .

நீட் பற்றிய விவாதங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமே அன்றி அதில் தனிமனித தாக்குதல்கள் அவதூறுகள் தேவையற்றவை. கடினமான நீட் தேர்வை சிறப்பாக முயற்சி செய்து பயிற்சி செய்து அந்தத் தம்பி வென்று காட்டியுள்ளான்.. அதற்கு அவனுக்கு வாழ்த்துகள் உரித்தாக வேண்டும். மேலும் நீட் குறித்த அவரது பார்வையை அவரது வயதைக் கருத்தில் கொண்டு தோண்டித் துருவத் தேவையில்லை என்பது எனது கருத்து

யாரெல்லாம் நீட்டில் நல்ல மதிப்பெண்கள் பெற்றார்களோ அவர்களிடம் நீட்டைப் பற்றி கேட்டால் அந்த மன நிலையில் அது நல்ல தேர்வு என்று தான் கூறுவார்கள்.. யாரெல்லாம் நிலவும் சூழலால் நீட் பரீட்சையை எழுதக் கூட ஆசைப்பட வழியின்றி இருக்கிறார்களோ -அவர்கள் பக்கமும் கூறுவதற்கு நிறைய இருக்கும் ! இதை வைத்து மாணவ மாணவிகளை நாம் தூற்றுதல் கூடாது .

அவர்கள் இப்போது தான் பொதுவெளிக்கு வருகிறார்கள்.. அவர்களை கரிசனத்துடனும் அன்புடனும் அணுக வேண்டும் . எப்போதும் நம் பக்க நியாயங்களை நோக்கும் போது எதிர் பக்க நியாயத்தையும் பார்க்கப் பழக வேண்டும். ஒருவன் நமக்கு ஒவ்வாத கருத்தைக் கூறுவதாலேயே அவனை அமைதிப்படுத்துவதும் அவனை தூற்றுவதும் சகிப்புத்தன்மையன்று இன்னும் சகிப்புதன்மையை நாம் வளர்த்துக் கொண்டாக வேண்டும்.. சகோதர சகோதரிகளே…

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

error: Content is protected !!