நன்றி கூறும் திருவிழாவே பொங்கல் என்னும் கொண்டாட்டம்!

நன்றி கூறும் திருவிழாவே பொங்கல் என்னும் கொண்டாட்டம்!

ம் பாரத பூமியில் முன்னொரு காலத்தில் முன்னூற்று அறுபத்தி ஐந்து நாட்களும் ஏதோ ஒரு கொண்டாட்டம் இருந்தது. நமக்கு தினசரி கொண்டாட்டம்தான். வார இறுதி நாட்களில் மட்டும் கொண்டாட்டம், தினசரி அலுப்பூட்டும் பணி என்ற கருத்து மேற்குலக நாடுகளுக்கு உரித்தானது. தினசரி நாம் செய்யும் செயலில் உற்சாகம், கொண்டாட்டம் இல்லாமல் வெறும் பிழைப்புக்காக மட்டும் செயல்பட்டால், வாழ்க்கையில் பாதிப்புதான் ஏற்படும். வாழ்வே ஒரு பெரும் சுமையாக இருக்கும். செயலில் ஆனந்தமும், உற்சாகமும் இல்லையென்றால், வாழ்க்கை பரிசு வழங்காது, உடலில் நோயும், நரகமும்தான் உருவாகும். உங்களுக்கு வரவில்லையென்றால், நீங்கள் மற்றவர்களுக்கு உருவாக்கிவிடுவீர்கள். கொண்டாட்டம் இல்லாத ஒரு வாழ்க்கையை நல்லவிதமாக வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை.

இந்நிலையில் மனிதனாகப் பிறந்து, இவ்வளவு புத்திசாலித்தனத்தை இயற்கை வழங்கியிருப்பதை உணர்ந்து, இதைத் தாண்டி ஏதோ ஒன்றை உருவாக்கவேண்டும் என்ற நோக்கம் இல்லாமல், மனிதன் வெறும் உணவுக்காகவே வாழ்ந்தால், அதற்கு ஒரு மண்புழுவாகப் பிறந்திருக்கலாம். விவசாயிக்காவது உபயோகமாக இருந்திருக்கும். ஆகவே செய்யும் செயலில் சந்தோஷமும், கொண்டாட்டமும் இணைந்திருப்பது நமது பாரம்பரியத்தில் வழக்கமாக இருக்கிறது. இந்த நாட்டில் மண்ணில் ஏர் பூட்டுவதற்கு, விதைப்பதற்கு, களை எடுப்பதற்கு, அறுவடைக்கு என எல்லாவற்றுக்கும் ஒரு கொண்டாட்டம் உண்டு. கொண்டாட்டம் என்பது, ஆனந்தமாக, உற்சாகமாக செயல்படுவதற்கான ஒரு வழி. தைப் பொங்கலும் விவசாயிகளும்!பொங்கல் திருநாள் என்பது நம் தமிழ் கலாச்சாரத்தில் மிகவும் முக்கியமானது. இது பாரத தேசம் முழுவதிலும் சங்கராந்தி அல்லது மகர சங்கராந்தி எனப்படுகிறது. எங்கெல்லாம் விவசாய சமூகங்கள் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

ஆம்.. விவசாயிகளை நினைவுகூர்வதே , பொங்கல் கொண்டாட்டத்தின் மற்றொரு முக்கியமான அம்சம். நமது நாட்டில் சுமார் எழுபது சதவிகித மக்கள் விவசாயத்தில் இருக்கின்றனர். நாம் செவ்வாய்க் கிரகம் சென்றிருக்கலாம், தகவல் தொழில் நுட்பத்தில் பலபடிகள் முன்னேறி இருக்கலாம், ஆனால் அனைத்தையும்விட மகத்தான சாதனை என்னவென்றால், நூற்றி இருபது கோடி மக்களுக்குத் தேவையான உணவை விவசாய சமூகம் உற்பத்தி செய்து வருகிறது. இது சாதாரண செயல் அல்ல. ஆனால் அது குறித்து நமக்குக் கவனமில்லை. கிராமங்களில் அறிவியல்ரீதியான வசதி, நவீன அடிப்படைக் கட்டமைப்புகள், சேமிப்புக்கிடங்கு என்று எதுவும் பெரிய அளவில் இல்லாத நிலையிலும், விசாயிகளின் திறமையினால் மட்டும் இந்த சாதனை நிகழ்ந்து வருகிறது. மக்கள் பலரும் இதை உணராமல் இருக்கின்றனர்.

நாம் வாழ்ந்திருப்பதற்குக் காரணம், வேறெந்த பொருளாதரமோ அல்லது பங்குச் சந்தையோ கிடையாது. பெரிய அளவில் எந்த அமைப்பும் இல்லாமல், ஆனால் ஒரு தனிப்பட்ட விவசாயியின் சிரமத்தினால், அவருடைய செயலினால்தான் நாடு இந்த அளவுக்கு முன்னேற்றமாக இருக்கிறது. நாம் பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்திருக்கலாம். ஆனால் உணவு பற்றாக்குறை சூழல் இதுவரை நம் நாட்டில் ஏற்படவில்லை. இதற்கு முக்கிய காரணம் கிராமங்களில் இருக்கும் நமது விவசாயிகள்.

நகரவாசிகளான நாம் அனைவரும் வருடத்தில் ஒரு நாளாவது விவசாயிகளை நினைவுகூர்ந்து, அவர்களது சாதனைக்குத் தலைவணங்கவேண்டும். தினமும் நமக்கு முன்னால் உணவு வரும்போது, முதலில் நாம் விவசாயியை வணங்கவேண்டும். நாம் யாராக இருந்தாலும் உணவைத்தான் சாப்பிடுகிறோம். இதற்கு ஒரு நன்றியும் கவனமும் அளிப்பது நமது பண்பாடு. உணவைக் கொடுக்கும் மண்ணுக்கு, மண்ணிலிருந்து உணவை உருவாக்கும் விவசாயிக்கு, அதைப் பக்குவமாகச் சமைத்துப் பரிமாறும் தாய்க்கு, இதற்கெல்லாம் மூலமாக இருக்கும் மாடுகள், சுற்றுச்சூழல், மற்றும் சூரியனுக்கு நாம் நன்றி செலுத்தவேண்டும்.

இந்தப் பொங்கல் திருநாள் மட்டுமில்லாமல், வருடத்தின் ஒவ்வொரு நாளும், ஒரு கணமேனும் நமக்குள் இந்த நன்றி உணர்வைக் கொண்டுவந்தால், நமது வாழ்க்கையின் அடிப்படையையே நாம் மாற்றிக்கொள்ள முடியும். இந்த பொங்கல் விழாவின் அடிப்படை, அதற்குப் பின்னாலிருக்கும் ஒரு மகத்தான புரிதல், ஒரு தத்துவம் உலக மக்கள் அனைவரையும் சென்றடைவதை நாம் உறுதிசெய்துகொள்ளவேண்டும்.

நாம் மறந்துவிடக் கூடாத ஒன்று என்னவென்றால், பொங்கல் என்றால் நாம் சாப்பிடும் விஷயம் மட்டுமல்ல. பொங்கல் என்றால், நம் கலாச்சாரத்தில் உழவர் திருநாள் என்று வைத்திருக்கிறோம். முக்கியமாக இது நம் விவசாயத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு விழா. இந்தவொரு நாளில், படித்தவர்கள், இளைஞர்கள் என நீங்கள் அனைவருமே கிராமத்திற்கு சென்று பார்க்க வேண்டும். உணவைக் கொடுக்கும் மண்ணுக்கு, மண்ணிலிருந்து உணவை உருவாக்கும் விவசாயிக்கு, அதைப் பக்குவமாகச் சமைத்துப் பரிமாறும் தாய்க்கு, இதற்கெல்லாம் மூலமாக இருக்கும் மாடுகள், சுற்றுச்சூழல், மற்றும் சூரியனுக்கு நாம் நன்றி செலுத்தவேண்டும்.

இயற்கை விவசாயத்தில் வளர்க்கப்பட்டிருக்கும் நெற்பயிரைப் பாருங்கள். நம்மை விட உயரமாக இருக்கிறது. இந்த நெல் மட்டுமல்ல மற்ற எல்லாவிதமான பயிர்களையும் நாம் இயற்கை விவசாயத்தில் கொண்டு வரவேண்டும். இதுதான் நம் முன்னேற்றத்திற்கும், நம் ஆரோக்கியத்துக்கும், நம் ஜனத் தொகையின் தெம்பிற்கும் மிக மிக முக்கியமானது. அனைவருக்கும் ஆந்தை ரிப்போர்ட்டர் டீமின் பொங்கல் வாழ்த்துகள்!

நிலவளம் ரெங்கராஜன்

error: Content is protected !!