பெட்ரோலிய தேவையை குறைத்துக் கொள்ள வேண்டிய தருணமிது! – மோடி பேச்சு

பெட்ரோலிய தேவையை குறைத்துக் கொள்ள வேண்டிய தருணமிது! – மோடி பேச்சு

டெல்லியை அடுத்த உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டா தாவரவியல் பூங்காவில் இருந்து தெற்கு டெல்லியில் கல்கஜ் மந்திர் வரையில் 12. 5 கிலோ மீட்டர் தொலைவிலான மெஜந்தா லைன் மெட்ரோ ரயில் அமைக்கும் பணி சமீபத்தில் நடந்து முடிந்தது. நாட்டிலேயே முதன்முறையாக ஓட்டுனர் இன்றி இயக்கப்படும் வகையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் இந்த பாதையில் ரயிலை இயக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பாதையில் ரயில் போக்குவரத்த்தை பிரதமர் மோடி இன்று (திங்கள்) தொடங்கி வைத்தார். பின்னர் தாவரவியல் பூங்கா முதல் ஒக்லா தாவரவியல் பூங்கா ரயில் நிலையங்கள் இடையே புதிய மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம் செய்தார். அவருடன் உத்தரப் பிரதேச ஆளுநர் ராம்நாயக், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பயணம் செய்தனர். இந்த பாதையில் சில தினங்களுக்கு முன், மெட்ரோ ரயில் வெள்ளோட்டம் விடப்பட்டபோது, டெப்போவின் சுவற்றில் மோதி ரயிலின் முன் பக்கமும் சுவரும் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசிய போது, ”‘‘வரும் 2022ம் ஆண்டு இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது. இந்தியா தனது பெட்ரோலிய தேவையை குறைத்துக் கொள்ள வேண்டிய தருணம் வந்துள்ளது. பெட்ரோலிய பொருட்களை சிக்கனமாக பயன்படுத்துவது அவசியம். பல்முனை பொது போக்குவரத்தின் மூலம் பெட்ரோலியப் பொருட்களின் தேவையை கணிசமாக குறைக்க முடியும்.

இதன் மூலம் சாதாரண மக்கள் பணத்தை மிச்சப்படுத்துவதுடன், சுற்றுச்சூழல் மாசுபடுவதையும் வெகுவாக குறைக்க முடியும். மக்களுக்கு போக்குவரத்து மிகவும் இன்றியமையாதது. தற்போது அதன் தேவையும் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சூழலில் மெட்ரோ ரயில் சேவை மக்களுக்கு அதிக பயனுடையதாக இருக்கும்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 93வது பிறந்த தினம் தற்போது கொண்டாடப்படுகிறது. 2002ம் ஆண்டு மெட்ரோ ரயில் சேவையை அவர், தொடங்கி வைத்து பயணம் செய்ததை எண்ணிப் பார்க்கிறேன். அதன் பின் மெட்ரோ ரயில் சேவை பல மடங்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது’’ எனக்கூறினார்.

error: Content is protected !!