ஆந்திரா எலுரு : குடிநீரில் பூச்சிக் கொல்லி மருந்தால் ஏற்பட்ட பாதிப்பு!

ஆந்திரா எலுரு : குடிநீரில் பூச்சிக் கொல்லி மருந்தால் ஏற்பட்ட பாதிப்பு!

கொரோனா பூச்சாண்டி ஒரு பக்கம் உலக மக்களை மிரட்டிக் கொண்டிருக்கும் சூழலில் ஆந்திராவின் எலுரு நகரில் மக்களுக்கு ஏற்பட்ட மர்ம நோய்க்கு குடிநீரில் கலந்துள்ள பூச்சி கொல்லி மருந்துகள் காரணமாக இருக்கலாம் என எய்ம்ஸ் ஆய்வு குழு தெரிவித்துள்ளது.

ஆந்திரபிரதேச மாநிலம் எலுரு நகரில் கடந்த 6ம் தேதி முதல் மர்ம நோய் ஒன்று பரவி வருகிறது. மக்கள் வலிப்பு போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 3 நாட்களிலேயே சுமார் 600 பேர் இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நிலைமை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று எலுருக்கு விரைந்தார். அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதற்கிடையில் எலுருவில் பரவி வரும் மர்ம நோய்க்கான காரணத்தை கண்டறியும் பணியில் மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய ஆய்வு குழு ஈடுபட்டு வருகிறது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை, பூனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம், இந்திய வேதியியல் தொழில் நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.சி.டி), செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம், மற்றும் ஹைதராபாத்தின் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் ஆகியவற்றைச் சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழு, எலுருவில் உள்ள குடிநீரில் கலக்கப்பட்ட பூச்சிகொல்லி மருந்தாலோ அல்லது வைரஸ் காரணமாகவோ அல்லது இரண்டின் கலவையாலும் இந்த மர்ம நோய் ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளது.

விஜயவாடாவில் உள்ள ஒரு முன்னணி தனியார் ஆய்வகத்தில் எலுரு பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட குடிநீர் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அந்த குடிநீரில் டி.டி.டி (DTT) உள்ளிட்ட பூச்சிக்கொல்லிகள் அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டது. விஜயவாடா ஆய்வக அறிக்கையில் குடிநீரில் டிடிடி எனப்படும் டிக்ளோரோடைபினைல் டைகிளோரோஎதேன் லிட்டருக்கு 14.21 மற்றும் 15.23 மில்லி கிராம் அளவு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிநீரில் டிடிடி-ன் ஏற்றுக்கொள்ளக்கூடிய வரம்பு வெறும் 0.0001 மட்டுமே.

இதேபோல், அலாக்ளோர் என்ற களைக்கொல்லி 10.88 ஆகவும் மெத்தாக்ஸைக்ளோர் என்ற பூச்சிக்கொல்லி 17.64 ஆகவும் உள்ளது. இவற்றின் ஏற்றுக்கொள்ளத்தக்க அளவு 0.001 ஆகும். மேலும் எய்ம்ஸ் மங்களகிரியின் ஒரு தனி அறிக்கை நோயாளிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட இரத்த மாதிரிகளில் அதிக அளவு ஈயம் மற்றும் நிக்கல் இருப்பதாக தெரிவித்துள்ளது. எலுருவில் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ள இரண்டு நீர்ப்பாசன கால்வாய்கள் மூலம் குடிநீர் கிடைக்கிறது. ஒரு கால்வாய் ராஜமுந்திரியிலும் மற்றொரு கால்வாய் விஜயவாடா விலும் துவங்குகிறது.

ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கும் எலுரு நகரத்திற்கும் குடிநீர் ஆதாரமாக விளங்கும் இந்த கால்வாய்களில் விவசாயிகள் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்கள் அதிகளவில் கொட்டப்படுகின்றன. இந்த திடீர் நோய்க்கு குடிநீர் தான் காரணம் என்பதை உறுதி செய்ய நிபுணர் குழு நோயாளிகளிடமிருந்து ரத்த மாதிரிகளை சேகரித்து என்.ஐ.வி புனே மற்றும் பிற ஆய்வகங்களுக்கு அனுப்பியுள்ளது.

முன்னதாக, எய்ம்ஸ் (மங்களகிரி) மருத்துவ கண்காணிப்பாளர் ராகேஷ் கக்கர் ஞாயிற்றுக் கிழமை எலுருவுக்குச் சென்று நோயாளிகளின் வழக்குத் தாள்களைப் படித்து, திடீர் நோய்க்கான காரணங்களை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார். நோயாளிகளிடம் வலிப்புத்தாக்கங்கள், வலிப்பு, வாந்தி, நுரைத்தல் மற்றும் நடுக்கம் போன்ற அறிகுறிகள் உள்ளன. நேர்காணல் செய்யப்பட்ட 20 நோயாளிகளில் பெரும்பாலோர் தண்ணீரின் நிறத்திலும் சுவையிலும் மாற்றம் இருப்பதாகக் கூறினர். வீட்டில் வரும் தண்ணீரும் பச்சை அல்லது சேற்று நிறத்தில் மாறி இருந்ததாக சிலர் தெரிவித்தனர், என்று எய்ம்ஸ் தனது ஆரம்ப அறிக்கையில் மாநில அரசுக்கு தெரிவித்துள்ளது.

அதைத் தொடர்ந்து ஆந்திரபிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related Posts

error: Content is protected !!