கோவை சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்!

கோவை சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு சேவை உள்ளத்தோடு இலவசமாகவும்‌, மலிவு விலையிலும் மதிய சாப்பாடு வழங்கி வந்த சாந்தி கியர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சுப்பிரமணியன் உடல் நலக் குறைவால் இன்று (11.12.2020) காலமானார். சுப்பிரமணியன் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கோவை திருச்சி ரோட்டில் கோவை சிங்காநல்லூரில் அமைந்திருக்கும் சாந்தி கேண்டீனில் மதிய சாப்பாடு சாப்பிட சென்றால் அங்கு …….பிரமாண்டமான சுத்தமான வளாகம். ராணுவக் கட்டுப்பாடு. பார்த்தவுடன் பிரமிப்பை ஏற்படுத்தும். வரிசையில் நின்று சாப்பாட்டிற்கான டோக்கன் வாங்க வேண்டும்.ஒரு நபருக்கு ரூபாய் 20/- மட்டுமே. எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம். பார்சல் கிடையாது.

அருமையான சாப்பாடு. அங்கு வேலை செய்பவர்களிடம் இயந்திரம் தோற்றுப் போகும். அவ்வளவு வேகம். ஒரு நாளுக்கு மதிய வேளையில் 3000 நபர்களுக்கு சாப்பாடு தயார் செய்து விநியோகிப்பதாக தெரியவந்தது. அதற்கு மேல் கண்டிப்பாக கிடையாது.

இதனை நிறுவியர் பெயர்தான் பி.சுப்பிரமணியம். கோவை சாந்தி கியர்ஸ் அதிபர் என்றால் அனைவருக்கும் தெரியும். அவரது மனைவியின் பெயர் சாந்தி. தனது மனைவியின் நினைவாக சாந்தி சோஷியல் சர்வீஸஸ் என்ற பெயரில் இதனை அவர் நடத்தி வருகிறார். தமிழகத்தில் தரமான உணவுகளை இவர்கள் அளவிற்கு எந்த உயர்தர உணவகமும் கொடுக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. ரூ.20-க்கு முழுச் சாப்பாடு, ரூ.5 முதல் ரூ.15-க்கு டிபன் வகைகள், பில்டர் காபி, டீ, ராகி பால், சத்து மாவு பால் என்று எதைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டாலும் விலை ரூ.5 தான். நாம் மூன்று வேளையும், கொலைப் பசியில் சாப்பிட்டாலும் பில் நூறு ரூபாய் ஆகாது. இதனால், இந்த பகுதியில் வாடகைக்கு வீடு கிடைப்பது அரிது. அங்கு குடியிருப்பவர்கள் அந்த வீடுகளில் சமையல் செய்வதும் கிடையாது. ஏழைகள் மற்றும் முதியோர்களுக்கென தனி உணவு விடுதியுள்ளது. அங்கு அவர்களுக்கு இலவசமாகவே உணவு வழங்கப்படுகிறது என்பது விசேஷ செய்தி.

உணவில் மட்டுமல்லாமல், கல்வி, பெட்ரோல், டீசல், பார்மஸி, டயாலிஸிஸ் சேவை, ரத்த வங்கி சேவை, கண் கண்ணாடி கடை, ரேடியோலஜி சேவை, ஆய்வு மையம், எரிவாயு எரியூட்டு மையம் என்று பல சேவைகளை செய்து வருகிறார்கள். இந்த வளாகத்திலுள்ள மருத்துவ ஆய்வகத்தில் எடுக்கப்படும் ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்டவை மற்ற மையங்களைவிட, 50 முதல் 70 % கட்டணம் குறைவு.

இந்த அனைத்துப் புகழுக்கும் காரணம் இதன் நிறுவனர் சுப்பிரமணியம். ஆனால், வலது கை கொடுப்பது, இடது கைக்குத் தெரியக் கூடாது என்று சொல்வதைப் போல, இதுவரை தன்னை எங்கேயும் இவர் அடையாளப்படுத்திக் கொண்டது இல்லை. பெரும்பாலான ஊடகங்கள் அவரைச் சந்தித்துப் பேட்டியெடுக்க முயற்சி செய்தன. ஆனால், அவர் எந்த ஊடகத்தையும் சந்திக்கவுமில்லை. பேட்டி கொடுக்கவுமில்லை. எங்குமே அவர்கள் புகைப்படம் இருக்காது. இன்டர்நெட்டில் தேடினால் கூட அவரது புகைப்படம் கிடைக்காது.

https://twitter.com/aanthaireporter/status/1337366968765009922

அப்பேர்பட்டவரின் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

கோயம்புத்தூர் மாவட்டத்தில் குறைந்த விலையில் மதிய சாப்பாடு வழங்கி வந்த சாந்தி கியர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், சாந்தி சமூக சேவை அறக்கட்டளையின் நிறுவனருமான திரு. சுப்பிரமணியன் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று (11.12.2020) உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

சுப்பிரமணியன் அவர்கள் கோவை பகுதியிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் உணவு, மருத்துவம், உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்த பெருமைக் குரியவர். சுப்பிரமணியன் அவர்கள் தனது இறுதி மூச்சு வரை சமூக சேவையில் தன்னை அர்பணித்துக் கொண்டவர் என்ற சிறப்புக்குரியவர்.

சுப்பிரமணியன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவருடைய தன்னலமற்ற சேவையை பல ஆண்டுகளாகப் பெற்று வந்த கோவை பகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.” இவ்வாறு, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

துணை முதலமைச்சர் இரங்கல்

சாந்தி சோசியல்‌ சர்வீஸ்‌ அமைப்பின்‌ மூலம்‌ ஏழை, எளிய மக்களுக்கு சேவை உள்ளத்தோடு இலவசமாகவும்‌, மலிவு விலையிலும்‌ உணவு மற்றும்‌ பல்வேறு சேவைகளை ஆற்றி வந்த சாந்தி கியர்ஸ்‌ “கியர்மேன்‌ திரு. சுப்ரமணியம்‌’” அவர்கள்‌ இன்று உடல்நலக்குறைவால்‌ காலமான செய்தி மிகுந்த அதிர்ச்சியும்‌ வேதனையும்‌ அளிக்கிறது.

எளிய மக்களுக்காக மலிவுவிலை உணவகம்‌, மருந்தகங்கள்‌, மருத்துவமனை, பெட்ரோல்‌ பங்க்குகள்‌, இலவச மின்‌ மயானம்‌ என பல்வேறு சேவைகளை வழங்கி வந்த உன்னத மனிதர்‌ சுப்ரமணியம்‌ ஆவார்‌. சமூக நலப்பணிகளில்‌ தம்மை முழுமையாக அர்ப்பணித்துக்‌ கொண்ட சுப்ரமணியம்‌ அவர்களின்‌ மறைவு கோவை மக்களுக்கு பேரிழப்பு!

சுப்ரமணியம்‌ அவர்களது பிரிவால்‌ மீளாத்துயரில்‌ வாடும்‌ அவர்தம்‌ குடும்பத்தினருக்கும்‌, கோவை மக்களுக்கும்‌ எனது ஆழ்ந்த இரங்கலையும்‌, அனுதாபத்தையும்‌ தெரிவித்துக்‌ கொண்டு, அன்னாரது ஆன்மா இறைவன்‌ திருவடியில்‌ இளைப்பாற வேண்டுகிறேன்‌.

Related Posts

error: Content is protected !!