தம்பி உதயநிதிக்கு திறந்த மடல்..- யாசகம் கேட்பதை நிறுத்துவோம்.. வற்றாத ஜீவநீர் ஊற்றுக்களை உருவாக்குவோம்.!

தம்பி உதயநிதிக்கு திறந்த மடல்..- யாசகம் கேட்பதை நிறுத்துவோம்..  வற்றாத ஜீவநீர் ஊற்றுக்களை உருவாக்குவோம்.!

மிழ்நாட்டின் நதிநீர் வளத்தில் பாதி அளவு காவிரி நீர் சார்ந்தது. 20 மாவட்டங்கள் .. 10 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் .. 2 கோடி மக்கள் சார்ந்திருப்பது காவிரி நீரைத்தான்.. வறட்சி ஏற்படும்போதெல்லாம் கை ஏந்துகிறது தமிழ்நாடு..! கை விரிக்கிறது கர்நாடகா…! உரிமைப் போராட்டங்கள் ஒருபுறம் நடக்கட்டும். புதிய தலைமுறையினர் வித்தியாசமாக சிந்திக்க வேண்டும். செயல்பட வேண்டும்.

யாசகம் கேட்பதை 5 ஆண்டுகளுக்குள் முற்றிலும் நிறுத்துவோம்.. வற்றாத ஜீவநீர் ஊற்றுக்களை உள்ளூர் அளவில் உருவாக்குவோம். காவிரி பாயும் மாவட்டங்களில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் மழைதரும் 100 கோடி மரங்களை நட்டு வளர்ப்போம். மழையை உருவாக்கும் ஆற்றலும், மழை நீரை கணிசமாக தேக்கிவைக்கும் ஆற்றலும் மரங்களுக்கு உண்டு.

நெல்லை கிராமத்தில் 3 ஏக்கரில் வளர்ந்த சவுண்டல் மரங்களை நோக்கி ஈர்க்கப்படும் மேகங்களால் ‘முதலில் நம் தோட்டத்தில்தான் மழை இறங்குகிறது’ என்று தோட்டக்கார அண்ணன் கூறியதை நேரில் பார்த்து உறுதிப்படுத்தியவன் நான்.

ஒவ்வொரு ஊரிலும் பயிரிடப்படாத நிலங்களில், சாலை, ஏரி ஓரங்களில் மழைதரும் மரங்களை நட்டு வளர்ப்போம். நீர் உறிஞ்சும் வேலிக்கருவை என்ற நச்சுமரத்தை அப்புறப்படுத்த வேண்டும். சவுண்டல், வேம்பு, மலைவேம்பு, புளி, பூவரசு, புங்கன், தேக்கு, செம்மரம், சந்தன மரம் உள்ளிட்ட மழைதரும் மரங்களை அதிகம் வளர்க்க வேண்டும்.

தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக ஊர் ஊராய் சுற்றிவரும் அன்பு இளவல் உதயநிதி இதனை ஓர் இயக்கமாக மேற்கொள்ள வேண்டுகோள் விடுக்கிறேன்.

1,30,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட தமிழ்நாட்டில் புதிதாக 100 கோடி மரங்கள் நட்டு வளர்த்தால், 5 ஆண்டுகளில் நிலைமை மாறும். வற்றாத ஜீவநீர் ஊற்றுக்கள் உள்ளூர் அளவில் உருவாகும். தமிழ்நாட்டின் முன்னுதாரணத்தை உலகம் கொண்டாடும்.

மனம் இருந்தால் மாற்றம் நிச்சயம்.

திருஞானம்

error: Content is protected !!