June 2, 2023

கோயில் சொத்து கொள்ளை போனால் அக்கோயில் ஆபீசர்தான் ஜவாப்தாரி!

சமீப காலங்களில் பல்வேறு கோயில்களில் திருட்டு நடைபெறுவதற்கு காரணம் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அலுவலர்கள் முக்கியத்துவம் அளிக்காதது தான் காரணம் என்ற சந்தேகம் ஏற்படுகிறது. எனவே தங்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள கோயில்களில் பாதுகாப்பு எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோயிலுக்கு சொந்தமான பொருட்கள் திருட்டு போனால் தொடர்புடைய அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், இழப்பீட்டு தொகையும் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து அறநிலையத்துறை ஆணையர் கூறி உள்ளார்.

kovil theft jun 14

இதுகுறித்து தமிழக இந்து அறநிலையத்துறை ஆணையர் மா.வீரசண்முகமணி, தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில் இணை- ஆணையர்கள், துணை- ஆணையர்கள், உதவி- ஆணையர்கள் மற்றும் செயல் அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்,“கோயில் களில் உள்ள விலைமதிப்புமிக்க சிலைகள், பழமையான பொருட்களையும், விலைமதிப்புமிக்க ஆவணங்களையும், உண்டியல்களையும் பாதுகாப்பது குறித்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமீப காலங்களில் திருட்டு நடைபெறுவதற்கு காரணம் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அலுவலர்கள் முக்கியத்துவம் அளிக்காதது தான் காரணம் என்ற சந்தேகம் ஏற்படுகிறது. எனவே தங்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள கோயில்களில் பாதுகாப்பு எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

கோயிலுக்கு சொந்தமான விலைமதிப்பில்லாத தெய்வத்திருமேனிகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை பாதுகாக்க மும்முறைப் பூட்டு உற்பத்தி செய்யும் நிறுவனத்திடமிருந்து மும்முறைப் பூட்டினைக் கொள்முதல் செய்து சுவரிலோ அல்லது பெட்டகத்திலோ விலை உயர்ந்த பொருட்களை வைத்துப் பூட்டிப் பாதுகாக்க வேண்டும். அதில் ஒரு சாவியை அர்ச்சகரிடமும், 2-வது சாவியை கோயில் ஊழியர்களிடமும், 3-வது சாவியை தொடர்புடைய திருக்கோவில் செயல் அலுவலரிடமும் வைத்துக் கொள்ள வேண்டும். செயல் அலுவலர் விடுப்பில் சென்றால் துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து செல்வதன் மூலம் விலை உயர்ந்த பொருட்கள் திருட்டு போவதை தடுக்க முடியும்.

கோமேதகம் மற்றும் மரகதலிங்கம் போன்ற விலைமதிப்பில்லாத பழங்காலத் தெய்வத்திருமேனிகள் உள்ள கோயில்களின் கண்காணிப்புக் காமிராவில் அலாரம் பொருத்தி அதனை அருகில் உள்ள காவல் நிலையத்துடனும், செயல் அலுவலரின் செல்போனிலும் இணைக்க வேண்டும்.

கோயில் கதவுகள் மற்றும் உள்பூட்டு, வெளிப்பூட்டு ஆகியவை சரியாக இருந்தும் அவைகள் பயன்படுத்தப்படுகின்றனவா? என்பதையும் உடனடியாக சரிபார்க்க வேண்டும். குறைபாடுகள் இருந்தால் உடனடியாக சரிபார்க்க வேண்டும். அத்துடன் கோயில்களுக்கு தகுதி உள்ள காவலர்களை பாதுகாப்புக்காக நியமிக்க வேண்டும்.

இரவில் பாதுகாவலர்கள் தூங்கிவிடாமல் இருப்பதற்காக ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை பதிவு செய்யும் டெல்டேல் கடிகாரமும் பயன்படுத்த வேண்டும். உலோகத்திருமேனிகள் உள்ள அறை கதவுகளின் பூட்டுகளை அவ்வப்போது சரிபார்ப்பதுடன், திருட்டு எச்சரிக்கை மணியும் பொருத்த வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை பயன்படுத்தப்படும் விக்கிரகங்கள் மற்றும் பூஜையில் இல்லாத உற்சவ விக்கிரகங்கள் அருகில் உள்ள பாதுகாப்பு மையத்தில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவில் நடையை சாத்தும் போது, வெளி ஆட்கள் எவரேனும் கோயிலுக்குள் இருக்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். தேர் நிற்கும் பகுதியில் தகரத்தட்டினால் மூட வேண்டும். ஊழியர்கள் இல்லாத சிறிய கோயில்கள், ஊருக்கு வெளியே இருக்கும் கோயில்களுக்கு அருகில் உள்ள காவல்நிலையத்தில் எழுத்து பூர்வமாக விண்ணப்பித்து பாதுகாப்புக்கு பாதுகாவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோயில்களில் பயன்படுத்தாத அறைகள் இருந்தால் அவற்றை திறந்து பார்த்து சோதனை செய்துவிட்டு, பூட்டி பாதுகாக்க வேண்டும். கோயிலுக்கு வரும் நபர்கள் மீது சந்தேகம் இருந்தால், அவர்களை சோதனை செய்து அனுமதிக்க வேண்டும். பக்தர்கள் கொண்டு வரும் பைகளை அவர்கள் மனம் புண்படாமல் சோதிக்க வேண்டும். பாதுகாப்பு குறையாமல் இருக்க அவ்வப்போது கோவில் சரக இணை-ஆணையர்கள், உதவி ஆணையர்கள் திடீர் ஆய்வு செய்ய வேண்டும்.

தங்கம், வெள்ளியிலான தேர்கள், சப்பரம், வாகனங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு சுழலும் கதவுகள் அமைத்து பெட்டிப் பூட்டுகள் போட வேண்டும். மும்முறை பூட்டு போடுவதுடன், வெளியூர் நபர்களை அனுமதிக்கக் கூடாது. இரவு காவலர்கள் இல்லாத கோயில்களில் எவர்சில்வர் உண்டியல்கள் பொருத்துவதை தவிர்க்க வேண்டும். உரிய பதிவேடுகள் பேணப்படுவதுடன், குருக்கள், மணியம் ஆகியோர் இரவில் பணி முடிந்து செல்லும் போது திருட்டு எச்சரிக்கை மணியை இயக்க நிலையில் வைத்துவிட்டு செல்ல வேண்டும். எக்காரணம் கொண்டும் எச்சரிக்கை மணி சாவியை காவல் பணியில் ஈடுபடுபவரிடம் கொடுக்கக்கூடாது.

கோயிலுக்கு சொந்தமான பொருட்கள் திருட்டு போக நேர்ந்தால் தொடர்புடைய சார்நிலை அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவர்களிடம் இருந்து இழப்பீட்டிற்கான தொகையினை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் அவர் கூறி உள்ளார்.