மோடி ஆட்சி மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்: மக்களவையில் 8–ந்தேதி விவாதம்!

மோடி ஆட்சி மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்: மக்களவையில் 8–ந்தேதி விவாதம்!

பார்லிமெண்டில் மத்திய அரசின் மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து ஆகஸ்ட் 8–ந்தேதி விவாதம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மணிப்பூர் வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. அந்த விவகாரம் குறித்து விவாதிக்கத் தயாராக உள்ளதாகவும், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிப்பார் என்றும் மத்திய அரசு தெரிவித்து வருகிறது.ஆனால், அதை ஏற்காத எதிர்க்கட்சிகள், பிரதமரே விளக்கமளிக்க வேண்டும் எனக் கூறி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. அதன் காரணமாக, நாடாளுமன்ற அவைகளின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் சில மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது.

இந்நிலையில் மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடியை பேச வைப்பதற்காக பாரதீய ஜனதா தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் மக்களவை அலுவல் விதி 198-–ன் கீழ் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தாக்கல் செய்தார். விதிப்படி, நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக் கொள்வதற்கு 50 எம்.பி.க்கள் ஆதரவளித்த நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா அதனை விவாதத்திற்கு ஏற்றுக் கொண்டார். அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு விவாதத்திற்கான தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், வருகின்ற 8-ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் விவாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 3 நாட்கள் விவாதம் நடத்திய பிறகு ஆகஸ்ட் 10-ம் தேதி மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!