நகைக்கடன்களுக்கான புதிய கட்டுப்பாடுகள் தள்ளிவைப்பு!
அண்மையில் தங்க நகைக் கடன் வழங்குவதில் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதிநிறுவனங்களுக்கு புதிய வரைவு விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில், வங்கி அடமானம் வைக்கப்படும் தங்க நகையின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே கடன், நகைக்கான ஆதாரத்தை வழங்க வேண்டும், நகைக்கான தரம், தூய்மை குறித்த சான்று வழங்க வேண்டும் போன்ற கடுமையான விதிமுறைகள் அடங்கும். நகைக் கடனில் முறைகேடுகள் நடப்பதைத் தடுக்கும் வகையில், புதிய விதிகள் கொண்டு வரப்படுவதாக ரிசா்வ் வங்கி கூறினாலும், இவை எளிய நடுத்தர குடும்பங்கள் மத்தியில் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

தங்க நகைக்கடன் தொடர்பான ரிசர்வ் வங்கியின் விதிகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் முதல் பல்வேறு அரசியல் கட்சிகள், நகைக்கடன் நிறுவனங்கள், நுகர்வோர் அமைப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களிடமிருந்து உட்பட பல்வேறு தரப்பில் இருந்து எழுந்த கோரிக்கைகளை தொடர்ந்து கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.
தங்க நகைக்கடனுக்கு விதிக்கப்பட்டிருக்கும் விதிகளில் சில தளர்வுகள் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.அதன் முதல்படி நிலையாக ரூ.2 லட்சத்துக்கும் குறைவான கடன்களுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. முக்கிய கட்டமாக, சிறுதங்க நகை கடன் பெறுபவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க நிதி அமைச்சகம், கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரைகளை வழங்கி இருக்கிறது.புதிய விதிகளை அமல்படுத்த சிறிது அவகாசம் வழங்கி ஜனவரி 1, 2026 முதல் செயல்படுத்தலாம் என்றும் மத்திய நிதி அமைச்சகம் பரிந்துரை செய்து உள்ளது.


