நோபல் – அமைதிக்கான பரிசை பெறுகிறார் ஈரானைச் சேர்ந்த நர்கிஸ் முகம்மது!

நோபல்  – அமைதிக்கான பரிசை பெறுகிறார் ஈரானைச் சேர்ந்த நர்கிஸ் முகம்மது!

டந்த 2022-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு, பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த மனித உரிமை போராளி அலெஸ் பியாலியாட்ஸ்கியுடன், ரஷ்யாவின் மனித உரிமைகள் அமைப்பான மெமோரியல் மற்றும் உக்ரைனின் மனித உரிமைகள் அமைப்பான சென்டர் பஃர் சிவில் லிபர்ட்டீஸ் ஆகியவற்றுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட நிலையில் ஈரானில் பெண்களின் ஒடுக்குமுறைக்கு எதிராகவும், மனித உரிமைகள் – சுதந்திரத்துக்காவும் போராடியதற்காக ஈரானைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் நர்கிஸ் முகம்மதிக்கு 2023-ம் ஆண்டுக்கான அமைதிகான நோபல் பரிசு வழங்கப்படுவதாக ராயல் ஸ்வீடிஷ் அகாடமி அறிவித்துள்ளது.

கடந்த 1896-ஆம் ஆண்டு மறைந்த ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபலின் உயிலின்படி பெறப்பட்ட 11 மில்லியன் ஸ்வீடிஸ் குரோனார் (1 மில்லியன் டாலர்) பரிசுத் தொகையைக் கொண்டது. இந்தாண்டு ஸ்வீடிஸ் குரோனார்களின் மதிப்பு வீழ்ச்சியடைந்தைத் தொடர்ந்து பரிசுத்தொகை 1 மில்லியன் குரோனார்கள் உயர்த்தப்பட்டுள்ளன. ஆல்பரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10-ஆம் தேதி நடைபெறும் விழாவில் தேர்வு பெற்றவர்கள் பரிசு பெற அழைக்கப்படுவார்கள். இதில் நோபலின் விருப்பப்படி, அமைதிக்கான பரிசு மட்டும் ஒஸ்லோவில் வைத்து வழங்கப்படுகிறது. மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமில் வைத்து நடைபெறும் விழாவில் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில் ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கிஸ் முகம்மதிக்கு 2023-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டுப் பெண்களின் உரிமைக்காக குரல் கொடுத்து வருவதற்காகவும், மரண தண்டனைகளை எதிர்த்து மனித உரிமைகள், சுதந்திரத்துக்காக போராடி வருவற்காகவும் அவர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் மனித உரிமைகள் பாதுகாப்போர் அமைப்பின் Defenders of Human Rights Center (DHRC) துணைத் தலைவராக இருக்கிறார். இந்த அமைப்பு 2011-ல் ஷிரின் எப்பாடியால் நிறுவப்பட்டது. ஷிரின் எப்பாடி 2011-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் விருதை வென்றவர் ஆவார். இருப்பினும், அமைதிக்கான நோபல் விருதை நர்கிஸ் மற்ற விருதாளர்கள் போல் வந்து பெருமிதத்துடன் வாங்க இயலாது. காரணம், நர்கிஸ் இப்போது ஒரு சிறையில் இருக்கிறார்.

ஆம்.. ஈரான் நாட்டின் வடக்குப் பகுதியில் தலைநகர் தெஹ்ரானில் உள்ள சிறைச்சாலையில் தான் நர்கிஸ் முகம்மது தற்போது இருக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் அவர் அங்கிருந்தவாறே தொலைபேசி மூலம் அயல்நாட்டு ஊடகத்துக்குப் பேட்டி அளித்தார். அதில் அவர், “என் அறையின் சாளரத்தின் முன்னால் நான் ஒவ்வொரு நாளும் அமர்கிறேன். அதன் வழியாக வெளியே தெரியும் மலைகளைப் பார்க்கிறேன். அதில் இருக்கும் பசுமை புல்வெளியைப் பார்க்கிறேன். அதைப் பார்த்தவாரே சுதந்திர ஈரானுக்கான கனவைக் காண்கிறேன். என்னை அவர்கள் எவ்வளவு அதிகமாகத் தண்டிக்கிறார்களோ, என்னிடமிருந்து எத்தனை எத்தனை உரிமைகளைப் பறிக்கிறார்களோ அந்த அளவுக்கு எனது போராட்டம் வலிமை பெறுகிறது. ஜனநாயகமும், சுதந்திரமும் பெற வேண்டும் என்ற போராட்ட குணம் வலுப்பெறுகிறது” என்று கூறினார். அவருடைய அந்தப் பேட்டி சிறையைத் தாண்டி பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் ஈரான் நாட்டின் ஜான்ஜான் என்ற இடத்தில் பிறந்த முகம்மதி, இமாம் கொமேனி சர்வதேச பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பிரிவில் பட்டம் பெற்றார். கல்லூரி காலத்திலேயே அவர் மற்ற மாணவர்களிடம் இருந்து தனித்தே தெரிந்தார். அப்போது முதலே அவர் சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வந்தார். படிப்பை முடித்த பிறகு, அவர் ஒரு இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். இருப்பினும், தொடர்ச்சியாகப் பெண்ணுரிமை குறித்த பல செய்தித்தாள்களில் எழுதி வந்தார். கடந்த 2003ஆம் ஆண்டில், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஷிரின் எபாடியால் ஈரானில் நிறுவப்பட்ட மனித உரிமைகளின் பாதுகாவலர் மையத்தில் அவர் இணைந்தார். அப்போது முதல் அவர் பெண் உரிமை, அனைவருக்குமான சமத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தி தொடர்ச்சியாகப் பல போராட்டங்களை நடத்தி வந்தார். அவர் கடந்த 2011இல் முதன்முறையாகக் கைது செய்யப்பட்டார். போராட்டம்: இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்த முகமதி பின்னர் 2013இல் ஜாமீன் பெற்றார். அதன் பிறகு மரண தண்டனைக்கு எதிரான தனது போராட்டங்களை அவர் தீவிரப்படுத்தினார். இதையடுத்து அவர் மீண்டும் 2015இல் கைது செய்யப்பட்டார். அவரது சிறைத் தண்டனை நீட்டிக்கப்பட்டது. சிறையில் இருந்த போதும் அவர் அமைதி மற்றும் சமத்துவத்துக்கு குரல் கொடுப்பதை நிறுத்தவில்லை.

சிறையிலும் அவர் ​அரசியல் கைதிகள், குறிப்பாகப் பெண்களுக்கு எதிராக நடக்கும் சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகளை எதிர்த்து குரல் கொடுத்தார். கடந்த ஆண்டு புர்கா விவகாரத்தில் ஈரான் நாட்டின் கலாச்சார போலீசாரால் மஹ்சா அமினி என்ற பெண் கொலை செய்யப்பட்ட நிலையில், அதைக் கண்டித்து முகமதி சிறையிலேயே போராட்டம் நடத்தினார். இதனால் சிறையில் அவருக்கான கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. அவருக்கும் வெளியுலகிற்குமான தொடர்பைத் துண்டிக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.

இத்தனைக்கும் அவரது கணவர் ஏற்கெனவே ஈரான் அரசால் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர். அவர் தற்போது பிரான்ஸ் நாட்டில் தஞ்சம் புகுந்து இரண்டு குழந்தைகளுடன் வசிக்கிறார். நர்கிஸ் தனது 16 வயது இரட்டைக் குழந்தைகளின் குரலைக் கேட்டே ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. அவர் அவருடைய மகனையும், மகளையும் ஆரத்தழுவி 8 ஆண்டுகள் ஓடிவிட்டன. நர்கிஸ் இன்று நேற்றல்ல 30 ஆண்டுகளாக ஈரான் அரசுக்கு எதிராக எழுதியிருக்கிறார். களத்தில் போராடி இருக்கிறார்.

இப்படி பல்வேறு கட்டுப்பாடுகளை , பிரச்னைகளைத் தாண்டி இந்த அமைதிக்கான பரிசு குறித்து நார்வே நோபல் கமிட்டி கூறுகையில், “நர்கீஸ் முகமதியின் துணிச்சலான போராட்டத்தால் அவர் பல்வேறு விஷயங்களை இழக்க நேர்ந்தது. ஈரானிய அரசு அவரை 13 முறை கைது செய்துள்ளது.. ஐந்து முறை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.. 31 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 154 கசையடிகள் வழங்கப்பட்டுள்ளது. முகமதி இன்னும் சிறையிலேயே இருக்கிறார்” என்று கூறப்பட்டுள்ளது.

நிலவளம் ரெங்கராஜன்

error: Content is protected !!