மிஸ்டர் பீன் ரீ எண்ட்ரி:-ஓடிடி-யில் நான்காவது சீசன் வரப் போகுது!

மிஸ்டர் பீன் ரீ எண்ட்ரி:-ஓடிடி-யில் நான்காவது சீசன் வரப் போகுது!

90களிலும் அதன் பிறகும் பிறந்தோர், குழந்தைப் பருவத்தின் தொலைக்காட்சி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் மூலம் பெரும்பாலான மக்களின் மனங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் மிஸ்டர் பீன் என்று சொன்னால் அது மிகையல்ல., இங்கிலாந்தில் பிறந்தவர். ரோவன் செபாஸ்டியன் அட்கின்சன் என்பது இவரது நிஜ பெயர். பால்யத்தில் ஏனைய குழந்தைகளைப் போல் ரோவனால் சரளமாகப் பேச இயலாது. அவருக்குப் ஏனோ பேச்சுக் குறைபாடு இருந்தது. அத்துடன் தோற்றத்தாலும் பேச்சாலும் சிறுவயதிலிருந்து பிறரின் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானார். அதனால் எதையும் துணிச்சலாகச் செய்ய அவரால் இயலவில்லை. எல்லாவற்றிலும் தயக்கம் இருந்தது. நண்பர்களும் கிடையாது. நிராகரிப்புகளும் தனிமையும் ரோவனை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளின. ஒருகட்டத்தில் தன்னை மீட்டெடுத்த ரோவன், ஆக்ஸ்ஃபோர்டு பலகலைக்கழகத்தில் முதுகலை படிப்பை முடித்தார்.

அப்போதுதான் நடிப்பின் மீது ரோவனுக்கு ஆர்வம் வந்தது.ஒரு நகைச்சுவைக் குழுவில் சேர்ந்து, நடிக்க விரும்பினார். ரோவனின் பேச்சுக் குறைபாடு அங்கும் அவருக்கு இடையூறாக இருந்தது. நிராகரிப்புகள் தொடர்ந்தாலும் ரோவன் மனம் தளரவில்லை. தானே நகைச்சுவை கதைகளை எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய கதா பாத்திரங்களில் நடித்தும் பார்த்தார். அவருக்குப் பிடித்த சில கதாபாத்திரங்களில் நடித்தபோது, பேச்சு சரளமாக வந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்தார். இனி தன் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்கிற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டது.

அதற்கு ஏற்ற மாதிரி மிஸ்டர் பீன் கதாபாத்திரம் அமைந்தது. அப்பாவியான தோற்றமும் நகைச்சுவையும் ரோவனுக்கு ஏராளமான ரசிகர்களைப் பெற்றுத் தந்தன. குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் மிஸ்டர் பீனைக் கொண்டாடித் தீர்த்தார்கள்.வானொலி, தொலைக்காட்சி, திரைப்படங்கள் என்று ரோவனின் பயணம் வளர்ந்துகொண்டே சென்றது. மிஸ்டர் பீன் காமிக் புத்தகங்களும் வெளிவந்து, விற்பனையில் சாதனை படைத்தன. 68 வயதிலும் நடிகர், நகைச்சுவையாளர், எழுத்தாளர் போன்ற பணிகளில் உத்வேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறார் ரோவன். எத்தனையோ கதாபாத்திரங்களில் நடித்துவிட்டாலும் ரோவனை இன்னும் மிஸ்டர் பீனாகவே மக்கள் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.

அதிலும் அனிமேஷனில் இவரி தொடருக்கு அடிமையானோர் எண்ணிக்கை கணக்கில் அடங்காது.,.இந்த அனிமேஷன் தொடரில் இதுவரை 3 சீஸன்கள் வெளியாகி உள்ள நிலையில் 4வது சீஸன் தற்போது தயாராகிறது. வார்னர் பிரதர்ஸ் மற்றும் சில நிறுவனங்களுடன் இணைந்து ரோவன் அட்கின்சன் வழங்கும், மிஸ்டர் பீன் நான்கவது சீஸன் மொத்தம் 182 எபிசோட்களுடன் தயாராகிறது.

இதில் எபிசோட் ஒவ்வொன்றும் 11 நிமிடங்களுக்கு நீளும் வகையில் திட்டமிட்டிருக்கிறார்கள். மிஸ்டர் பீன் தனது டெடி உடன் இணைந்து, சகல வயதினரும் ரசிக்கும்படியான குறும்புத்தனமும் சாகசமும் கலந்த லூட்டிகளை அனிமேஷன் தொடரில் படையலிட இருக்கிறார்.ஜனவரி 6 அன்று தனது 69வது பிறந்தநாளினை கொண்டாடும் ரோவன் அட்கின்சன், மிஸ்டர் பீன் தலைப்பிலான திரைப்படங்கள், தனித்துவ தொடர்கள் பலவற்றில் நேரடி பாத்திரமாக நடித்துவிட்டார்.

ஆனபோதும் அவரை அப்படியே பிரதியெடுக்கும் அனிமேஷன் தொடரையும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். 3 சீஸன்களும் மக்கள் மத்தியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிக்கப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் மிஸ்டர் பீன் நான்காவது சீஸன் அடுத்தாண்டு தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிஸ்டர் பீன் கதாபாத்திரத்துக்கு அனிமேஷன் வடிவத்தில் கிடைக்கும் சுதந்திரத்தை நான் எப்போதும் ரசிக்கிறேன். அனிமேஷன் செயல்முறை ஆக்கப்பூர்வமாகவும் கவர்ச்சிகரமானதாகவும் இருக்கிறது. நான்காவது சீஸன் வாயிலாக மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கிறேன்” என ரோவன் அட்கின்சன் உற்சாகம் தெரிவித்திருக்கிறார்.

தொலைக்காட்சிகளில் பிரபலமான மிஸ்டர் பீன் தொடர் தற்போதை ஓடிடி காலத்திலும் வரவேற்பு இழக்காது ரசிக்கப்படுகிறது. மிஸ்டர் பீன் முதல் மூன்று சீசன்கள் ஜியோ சினிமா தளத்தில் காணக்கிடைக்கின்றன.

error: Content is protected !!