கார், பைக்குகள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க மோடி அரசு முடிவு!

கார், பைக்குகள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க மோடி அரசு முடிவு!

பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில், “இந்த தீபாவளியில் மக்களுக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது; ஜிஎஸ்டி வரி விதிப்பில் அடுத்தகட்ட மாற்றங்களை இந்த தீபாவளிக்கு கொண்டு வர உள்ளோம்” என்று தெரிவித்தார். அக்டோபர் 20 தீபாவளி வருகிறது. முன்னதாக செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே இந்த கூட்டத்தில் மாற்றங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், கார் மற்றும் பைக்குகள் போன்ற வாகனங்கள் மீதான வரியைக் கணிசமாகக் குறைக்க ஒன்றிய அரசு முடிவு எனத் தகவல் வெளியாகியுள்ளது. கார்கள், SUV-க்கள், மற்றும் இருசக்கர வாகனங்களை 18% ஜி.எஸ்.டி. வரியின் கீழ் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.தற்போது கார்கள், இரு சக்கர வாகனங்கள் மீது 28% வரியும், SUV-க்கள் மீது 50% வரியும் இருப்பதால் அரசின் புதிய முடிவால் கார் மற்றும் பைக்குகளின் விலை கணிசமாகக் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய வரி விகிதங்கள்

இந்தியாவில் தற்போது ஜி.எஸ்.டி.யின் கீழ் நான்கு முக்கிய வரி அடுக்குகளான 5%, 12%, 18% மற்றும் 28% நடைமுறையில் உள்ளன. பெரும்பாலான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் 28% ஜி.எஸ்.டி. வரி அடுக்கின் கீழ் வருகின்றன.

இந்த 28% ஜி.எஸ்.டி. வரியுடன், வாகனங்களின் ரகம் (engine capacity, length) மற்றும் வகை (பெட்ரோல், டீசல், எஸ்யூவி) ஆகியவற்றைப் பொறுத்து 1% முதல் 22% வரையிலான ‘செஸ்’ (Cess) வரியும் சேர்க்கப்படுகிறது.

இதனால், ஒரு சிறிய பெட்ரோல் காருக்கு மொத்த வரி சுமார் 29% ஆகவும், ஒரு பெரிய எஸ்யூவி-க்கு மொத்த வரி 50% வரையிலும் உள்ளது.

மின்சார வாகனங்களுக்கு (EV) மட்டும் 5% என்ற குறைந்த ஜி.எஸ்.டி. வரி உள்ளது.

புதிய வரிவிதிப்பு குறித்த திட்டம்

தற்போது வந்த தகவலின்படி, மத்திய அரசு அனைத்து வாகனங்களையும் 18% ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டு வரப்போவதாக ஒரு செய்தி பரவி வருகிறது. இது ஒரு உறுதியான அறிவிப்பு அல்ல, மாறாக அரசின் உயர்மட்ட வட்டாரங்களில் விவாதிக்கப்பட்டு வரும் ஒரு திட்ட முன்மொழிவு ஆகும்.

இந்த திட்டத்தின்படி, தற்போதுள்ள 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு ஜி.எஸ்.டி. வரி அடுக்குகளை, 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளாக மாற்ற மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக, தற்போது 28% வரிவிதிப்பில் உள்ள வாகனங்கள் 18% என்ற பொதுவான வரி அடுக்கின் கீழ் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலைக் குறைப்பு மற்றும் அதன் தாக்கம்

முன்னரே சொன்னது போல் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டால், வாகனங்களின் விலை கணிசமாகக் குறையும். தற்போது 28% ஜி.எஸ்.டி. மற்றும் செஸ் வரியுடன் விற்பனையாகும் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள், 18% ஜி.எஸ்.டி.யின் கீழ் வரும்போது அவற்றின் விலை சுமார் 10% முதல் 30% வரை குறைய வாய்ப்புள்ளது. உதாரணமாக, ஒரு கார் 10 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகிறது என்றால், அதன் மீது விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. மற்றும் செஸ் வரி 3 முதல் 5 லட்சம் வரை இருக்கும். புதிய வரி விகிதம் அமலுக்கு வந்தால், இது 1.8 லட்சம் ரூபாயாகக் குறையும். குறிப்பாக, எஸ்யூவி-க்கள் மீது விதிக்கப்படும் அதிகபட்ச வரி (50% வரை) குறையும்போது, அவற்றின் விலை மிகப்பெரிய அளவில் குறையும்.இந்த வரி குறைப்பானது, சந்தையில் வாகனங்களுக்கான தேவையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் நீண்ட காலமாக இந்த வரி குறைப்பை எதிர்பார்த்து வருகின்றனர்.

Related Posts