ட்விட்டருக்கு போட்டியாக மெட்டாவின் ‘த்ரெட்ஸ்’ ரெடி!
எலான் மஸ்க் கைக்கு ட்விட்டர் போனதில் இருந்தே ப்ளூ டிக், கோல்டன் டிக் கட்டணச் சர்ச்சை, ஆட்குறைப்பு நடவடிக்கை, பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்கு முடக்கம், புதிய சிஇஓ பணி நியமனம் என ட்விட்டரில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்துகொண்டே இருக்கிறார் . இதன் ஒரு பகுதியாக ட்விட்டரில் ஒரு நாளில் இனிமேல் இத்தனை பதிவுகளை மட்டுமே படிக்க வேண்டும் என எலான் மஸ்க் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அனைவரும் கட்டணம் செலுத்தும் வெரிஃபைடு டிக்குகளை நோக்கி பயனர்களை வலுக்கட்டாயமாகத் தள்ளவே இந்தப் புதிய நடவடிக்கையை எலான் கொண்டு வந்துள்ளதாக விமர்சிக்கின்றனர். இந்த நிலை நீடிக்குமானால் ஏராளமான பயனர்கள் ட்விட்டரை விட்டு வெளியேறிவிடுவார்கள். ட்விட்டர் வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் என்று எச்சரித்து உள்ள நிலையில் ட்விட்டர் சமூக வலைதளத்துக்கு மாற்றாக மெட்டா நிறுவனம் ‘த்ரெட்ஸ்’ என்ற பெயரில் புதிய சமூக வலைதளத்தை வரும் 6-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இது ட்விட்டர் தளத்திற்கு மாற்றாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா உட்பட உலக அளவில் வரும் 7-ம் தேதி த்ரெட்ஸ் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என தெரிகிறது.

மெட்டா நிறுவனம் பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என மூன்று சமூக வலைதளங்களை தன்வசம் வைத்துள்ளது. இந்த மூன்று தளங்களும் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பயனர்களால் பல்வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கூடவே ட்விட்டருக்கு மாற்றாக தளங்களை உருவாக்க பலரும் முயற்சித்து வருகின்றனர். கூ, ஸ்பில், ப்ளூ ஸ்கை என பல மாற்றுகள் உள்ளன. ஆனால், முதல் முறையாக மெட்டா போன்ற பெரிய நிறுவனம் ட்விட்டருக்கு மாற்றை அறிவித்துள்ளது. மெட்டாவின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸூகர்பெர்க், த்ரெட்ஸ் முயற்சியை முன்னெடுத்தார்.
த்ரெட்ஸ்: இந்த தளம் ட்விட்டரை போலவே முற்றிலும் டெக்ஸ்ட்களை அடிப்படையாக வைத்து இயங்கும் தளம் என தெரிகிறது. பயனர்கள் தங்கள் எண்ணங்களை டெக்ஸ்ட்களாக பகிரலாம். இன்ஸ்டாவை மையமாக வைத்தும் இயங்கும் இந்த புதிய தளத்தின் முன்னோட்டம் மெட்டா ஊழியர்களின் பார்வைக்கு அண்மையில் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த தளத்தை பயனர்கள் இலவசமாக பயன்படுத்தலாம் என தெரிகிறது. வரும் 6-ம் தேதி த்ரெட்ஸ் அமெரிக்காவில் அறிமுகமாகிறது. அதையடுத்து இந்தியா உட்பட உலகம் முழுவதும் 7-ம் தேதி த்ரெட்ஸ் அறிமுகமாக உள்ளது.

இப்போதைக்கு ஆப்பிள் போன் பயனர்கள் த்ரெட்ஸ் செயலியை தங்கள் போன்களில் டவுன்லோட் செய்ய முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த சூழலில் ட்விட்டரின் முன்னாள் சிஇஓ ஜாக் டோர்சி இது குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில் ‘உங்களது த்ரெட்ஸ் எங்களுக்கு சொந்தமானது’ என சொல்லியுள்ளார். இதில் ‘ஆப் பிரைவசி’ சார்ந்த தகவலையும் ஸ்க்ரீன் ஷாட்டாக பகிர்ந்துள்ளார். அதற்கு எலான் மஸ்க் ‘ஆம்’ என பதில் கொடுத்துள்ளார்.


