திருமணச் சந்தையில் அதிரடி: ‘முதல் அடி’ எடுத்து வைக்கும் இந்தியப் பெண்கள்!

திருமணச் சந்தையில் அதிரடி: ‘முதல் அடி’ எடுத்து வைக்கும் இந்தியப் பெண்கள்!

காதலும் கல்யாணமும் காலந்தோறும் மாறிக் கொண்டே இருக்கின்றன. ஒரு காலத்தில் பெண் பார்ப்பது முதல் பேசி முடிப்பது வரை அனைத்தும் பெரியவர்கள் கையில் இருந்தது. ஆனால், 2026-ஆம் ஆண்டின் தற்போதைய ட்ரெண்ட் முற்றிலும் வேறாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான ‘ஷாதி ட்ரெண்டிங் – 2026’ (Shaadi Trending 2026) ஆய்வறிக்கை, இந்தியத் திருமணச் சந்தையில் ஏற்பட்டுள்ள வியக்கத்தக்க மாற்றங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

சிறு நகரப் பெண்களின் துணிச்சல்

இந்த ஆய்வில் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய விஷயம் எதுவென்றால், பெண்களே முன்வந்து வரன்களுக்கு ‘முதல் சிக்னல்’ கொடுப்பதுதான். அதிலும் குறிப்பாக, முதல் அடி எடுத்து வைக்கும் பெண்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் இரண்டாம் நிலை நகரங்களைச் (Tier-2 cities) சேர்ந்தவர்கள். பெருநகரப் பெண்களை விட, சிறு நகரப் பெண்கள் தங்களுக்குப் பிடித்த துணையைத் தேர்ந்தெடுப்பதில் அதிகத் தெளிவோடும் துணிச்சலோடும் இருக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது.

வருமானத்தை விட ஆரோக்கியமே முக்கியம்!

திருமணம் என்றாலே வரனின் வருமானம் என்ன, சொத்து எவ்வளவு என்ற கேள்விகள்தான் ஒரு காலத்தில் முதன்மையாக இருந்தன. ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. சுமார் 78 சதவீத பயனர்கள் வருமானத்தை விட, உணவுப் பழக்கவழக்கங்களுக்கே (Dietary preference) முன்னுரிமை அளிக்கிறார்கள். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பகிர்ந்து கொள்ளும் துணையைத் தேடுவதில் இன்றைய இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். ‘பணம் வரும் போகும், ஆனால் பழக்கவழக்கங்கள் மாறாது’ என்ற முதிர்ச்சியான சிந்தனை மேலோங்கியுள்ளது.

வயது ஒரு தடையல்ல

வயது வித்தியாசம் குறித்த பழைய பிம்பங்களும் இப்போது உடைந்து வருகின்றன. 76 சதவீத ஆண்களும், 58 சதவீத பெண்களும் இப்போது சமமான வயதுடைய (Similar age) துணைகளையே விரும்புகிறார்கள். தங்களை விட பல ஆண்டுகள் மூத்தவரையோ அல்லது இளையவரையோ தேடுவதை விட, தங்களது அலைவரிசைக்கு (Wavelength) ஏற்ப ஒரே வயதுடைய துணையுடன் வாழ்க்கையைப் பகிர்வதே புரிந்துணர்வுக்கு வழிவகுக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

முடிவாக…

2026-ஆம் ஆண்டின் இந்தத் தரவுகள் சொல்வது ஒன்றுதான்: இந்தியத் திருமணச் சந்தை இப்போது ‘பெரியவர்கள் பார்த்து வைக்கும்’ நிலையிலிருந்து, ‘பெண்கள் சுயமாகத் தேர்ந்தெடுக்கும்’ நிலையை நோக்கி வேகமாக நகர்கிறது. ஜாதி, வருமானம் என்பதையெல்லாம் தாண்டி ஆரோக்கியம் மற்றும் சமத்துவம் ஆகியவையே இன்றைய திருமணங்களின் அடித்தளமாக மாறி வருகின்றன.

Related Posts

error: Content is protected !!