இம்ரான்கான் மீதான இஸ்லாமியத் திருமண முறைக்கு எதிராக மணக் குற்றம்!- கொஞ்சம் அலசல்!

இம்ரான்கான் மீதான இஸ்லாமியத் திருமண முறைக்கு எதிராக மணக் குற்றம்!- கொஞ்சம் அலசல்!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஊழல் வழக்குகளுக்காக ஏற்கனவே சிறையில் இருப்பது தெரிந்ததுதான். அவருக்கு நேற்று இன்னொரு தண்டனை கிடைத்திருக்கிறது. இஸ்லாமியத் திருமண முறைக்கு எதிராக மணம் புரிந்து கொண்டார், Un-Islamic Nikah, என்று அவருக்கும் அவர் மனைவி புஷ்ரா பீபி இருவருக்கும் ஏழாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாத்தில் ஒரு பெண்ணுக்கு மணமுறிவு ஏற்பட்டு விட்டாலோ அல்லது கணவனை இழந்து விட்டாலோ அந்தப் பெண் மூன்று மாதங்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடாது. இதற்கு இத்தா என்று பெயர் – அதாவது காத்திருப்பு என்று மொழிபெயர்க்கலாம். இந்தக் காலகட்டத்தில் அவள் வீட்டை விட்டும் வெளியே வரக் கூடாது. சில சமூகங்களில் இன்னும் ஒரு படி மேலே போய் அந்தப் பெண்ணை தனிமைப்படுத்தியும் பாதுகாக்கின்றனர்.

ஒருவேளை அந்த முந்தைய கணவன் மூலம் அந்தப் பெண் கர்ப்பமடைந்திருக்கலாம். அந்த மூன்று மாதங்களின் தனிமை அதற்கான பதிலைக் கொடுக்கும் என்பதுதான் இதன் முக்கிய நோக்கம் என்று குர்ஆன் சொல்கிறது. அதாவது பிறக்கும் குழந்தைக்கு அப்பா யார் என்று தெரிய வேண்டுமே? புஷ்ரா பீபி முந்தைய கணவனுடன் மணமுறிவு அடைந்ததும் இந்த இத்தா காலத்தைப் பின்பற்றவில்லை என்பதுதான் அவர்களின் குற்றமாக சொல்லப்படுகிறது. இந்த இத்தா வழிமுறை பண்டைய பழங்குடிகளுக்கு உபயோகமாக இருந்திருக்கலாம். ஆனால் நவீன உலகில் பல்வேறு கோணங்களில் மிகவும் ஆட்சேபகரமான வழக்கம் என்பதில் செக்யூலர் சிந்தனையாளர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

முதலாவது, அவள் கர்ப்பமாக இருந்தாலும், கரு எப்போது உருவானது, அது யார் மூலம் வந்த கர்ப்பம் என்பதைத் துல்லியமாகக் கண்டறிய நவீன மருத்துவ வழிமுறைகள் இன்றைக்கு இருக்கின்றன. இரண்டாவது, குர்ஆனில் இந்த இத்தா தனிமை மாதவிடாய் நின்று போன பெண்களுக்கும், மாத விடாய் துவங்காத பெண்களுக்கும் கூட பரிந்துரைக்கப்படுகிறது. அதாவது சிறுமிகளுக்கும் கூட இந்த இத்தா காத்திருப்புக் காலம் பொருந்தும். அப்படியானால் சிறுமிகளும் வயதானவர்களும் எப்படி கர்ப்பம் தரிப்பார்கள் என்பதும் புரியவில்லை. சிறுமிகள் ஏன் இத்தா இருக்க வேண்டும்? அதற்கு முன்பு கேட்க வேண்டிய கேள்வி, சிறுமிகள் ஏன் மணமுறிவு ஆக வேண்டும்? இதற்கு பதில் வராது. (குழந்தைத்திருமணத்தை இஸ்லாம் அங்கீகரிக்கிறது என்பதற்கு இந்தக் குர்ஆன் வசனங்களைத்தான் முக்கிய ஆதாரமாக இஸ்லாமிய விமர்சகர்கள் முன்வைக்கிறார்கள்.)

நவீன உலகில் இதையெல்லாம் ஒரு வாதமாக எடுக்கவே கூடாது. காரணம், பண்டைய பழங்குடிகள் எழுதி வைத்துப் போன ஒரு நூலை வைத்து நவீன உலகில் வாழ்வியலை கட்டமைக்கவே கூடாது. இன்று திருமணம் என்பது தனிமனித உரிமைகளில் அடங்கும். அடங்க வேண்டும். யார் யாரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும், எப்போது செய்து கொள்ள வேண்டும், எந்த சடங்குகளை பின்பற்ற வேண்டும், சடங்கே இல்லாமல் கையெழுத்துப் போட்டு முடித்துக் கொண்டு விடலாமா, அல்லது திருமணமே செய்து கொள்ளாமல் வாழலாமா போன்றவற்றையெல்லாம் தனி மனிதன் மற்றும் மனிதிதான் முடிவு செய்ய வேண்டும். இதுதான் நவீன காலத்து சிந்தனை. நவீன மனித உரிமைகளை நம்புபவர்கள் வைக்க வேண்டிய வாதம் இதுதான்.

எனவே, இந்த இத்தா மாதிரி விஷயங்கள் கல்வியறிவும் அறிவியல் அறிவும் இல்லாத ஏழாம் நூற்றாண்டு காலத்து பழங்குடி சமூகத்திற்கு பொருத்தமாக இருக்கலாம். ஆனால் நவீன அறிவியல் சமூகத்துக்கு தேவையில்லாத ஆணி. மதவாதத்தை பிடித்துத் தொங்கும் சமூகங்கள் இப்படிப்பட்ட தேவையில்லாத ஆணிகளைத்தான் அடித்துக் கொண்டு உழலும். அந்த ஆணியடியில் தனி மனித உரிமைகள் உடைந்து சிதறும். கூடவே, மதங்களை அரசுகளிடம் இருந்து அதிகார பீடங்களில் இருந்து ரொம்ப தூரம் தள்ளி வைக்க வேண்டும் என்பதற்கும் இது பொருத்தமான வாதம். அரசுகளும், சட்டங்களும் மத நியமங்களை அனுசரித்து நடந்து கொண்டால் என்னென்ன அவலங்கள் அரங்கேறும் என்பதற்கு இம்ரான் கான்-புஷ்ரா பீபிக்கு கிடைத்த தண்டனை ஒரு உதாரணமாக இருக்கும். இருக்க வேண்டும்.

– ஸ்ரீதர் சுப்ரமணியம்

error: Content is protected !!