காதல் வணிகமாகி விட்டதே!

காதல் வணிகமாகி விட்டதே!

லகில் அன்பையும், அமைதியையும் விரும்பாத உயிர்கள் உண்டோ? ஞானியரும், சமயச் சான்றோரும் இதைத்தானே அறிவுறுத்தினர். “அன்பே சிவம்’ என்றும், ‘கர்ஸ்ங் ண்ள் எர்க்’ என்றும் கூறப்படுவது அனைவரும் ஏற்றுக்கொண்ட உண்மைதானே! ஆனால் அன்பு, அமைதி என்ற பெயராலும், காதல் என்ற பெயராலும் நடக்கும் அநியாய ஆரவாரங்களை அறிவுலகம் ஏற்றுக் கொள்ளாது.”காதலர் தினம்’ உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை இளைஞர்கள் வரவேற்பதை விடவும், வணிக உலகம் அதிகம் வரவேற்று ஆரவாரம் செய்கிறது. இளைஞர்களை உசுப்பி விடும் பணியில் இடைவிடாமல் ஈடுபடுகிறது. “காதலர் தினம் அதோ வந்துவிட்டது; இதோ வந்துவிட்டது’ என்று ஊடகங்களில் விளம்பரம் செய்து கொண்டேயிருக்கின்றனர்.இதுவரை அறமாகப் போற்றப்பட்ட கல்வி, மருத்துவம் ஆகியவை இப்போது வணிகமாகி விட்டதைப் போல கலை பண்பாடுகளும்கூட வணிகமாகி விட்டன. இப்படியெல்லாம் வணிகமாகிவிட்டால் மனித வாழ்க்கைக்கும், உறவுக்கும், நட்புக்கும் கூட மரியாதையில்லாமல் போய் விடாதா? எல்லாவற்றுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விட்டது.”அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்’ என்று தொன்று தொட்டு வரும் அறவுரை மதிப்பிழந்து வருகிறது. பெற்று வளர்த்த பெற்றோரையே முதியோர் இல்லத்துக்கு அனுப்பும் காலமாகி விட்டது.

அறிவியலை ஆக்கப் பணிக்கு பயன்படுத்துவதே அறிவுடைமை; ஆனால் அது அழிவுப் பணிக்கே அதிகமாக பயன்படுகிறது. திரைப்படம், தொலைக்காட்சி முதலிய காட்சி ஊடகங்களும், பத்திரிகை முதலிய கருத்தியல் ஊடகங்களும் சமுதாயத்தை முன்னோக்கி இட்டுச் செல்வதற்குப் பதிலாக பின்னோக்கி இழுத்துச் செல்லவே பயன்படுகிறது.

“தம் பிள்ளைகளை இந்த ஊடகங்களின் பிடியில் இருந்து விடுதலை செய்வது எப்படி?’ என்ற கவலை இப்போது அறிவார்ந்த பெற்றோருக்கு அதிகமாகிவிட்டது. திரைப்படங்களாவது வெளியில் சென்று காசு கொடுத்துப் பார்க்க வேண்டும்; ஆனால் இந்தத் தொலைக்காட்சிகள் நம் வீட்டு நடுக் கூடத்திற்குள் வந்து இருந்து கொண்டு நம்மையே நாட்டாண்மை செய்கின்றன.

அம்மாக்கள் “தொடர்’களுக்கு அடிமையாகி விட்டனர்; பிள்ளைகள் கேலிப் படங்களுக்கு அடிமையாகிப் போனார்கள்; இளைஞர்கள் ஆபாசக் கூத்துகளுக்கு அடிமையாகிப் போயினர். மொழியையும், கலை பண்பாடுகளையும் போட்டி போட்டுக் கொண்டு கொலை செய்கின்றனர். இவர்களே “காதல்’ என்னும் கண்ணியம் மிக்க அகப் பொருளையும் அசிங்கப்படுத்துகின்றனர்.”காதல் பண்ணுங்க’ என்று ஊடகங்கள் மூலம் பிரசாரம் செய்யப்படுகிறது. “காதல்’ என்பது செய்யப்படும் பொருளா, என்ன? அவர்கள் சேமித்து வைத்திருக்கும் பரிசுப் பொருள்கள் விற்பனையாக வேண்டும்; அதற்காக காதலர்களை கூவி அழைக்கின்றனர். வணிக நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு விளம்பரம் செய்கின்றன.

இவர்களுக்கு சமுதாய மாற்றம் பற்றிய அக்கறையும் கிடையாது; இளைஞர்களின் எதிர்காலம் பற்றிய பொறுப்பும் கிடையாது; எரியும் வீட்டில் பிடுங்கியது வரை லாபம் என்று எண்ணும் வணிக நோக்கம் மட்டுமே உண்டு. காட்சி ஊடகங்கள் தங்களின் கடமையை மறந்து நீண்ட காலமாகிவிட்டது. எப்படியாவது “பணம்’ பண்ண வேண்டும் என்ற ஒரே வெறியோடு செயல்படுகின்றன.

காதல் என்பது மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரியது. அதுவே மனித இனத்தின் வாழ்க்கை முறை. அதனால்தான், பாரதியும், “ஆதலினால் காதல் செய்வீர்’ என்று அறைகூவல் விடுத்தார். ஆனால் காதல் என்ற கண்ணியமிக்க வாழ்க்கை முறை இன்று கொச்சைப்படுத்தப்படுகிறது. குடித்து விட்டு ஆடும் கொண்டாட்டமாகிவிட்டது.

காதல் என்பது மனித மனங்களின் உணர்வோடும், உயிரோடும் கலந்தது. அது தானாக அரும்பி, மலர்ந்து மணம் வீசும் மலர் போன்றது. அதிகாலையில் பொழுது விடிவது போலவும், விதைகள் முளைத்துப் பயிராவது போலவும் கண்ணுக்குத் தெரியாமல் உணர்வுக்கு மட்டும் வெளிச்சம் தருவது. அது ஆயிரம் காலத்துப் பயிர். எல்லா உயிர்களுக்கும் அது பொதுவானது.

காலை அரும்பி பகலெல்லாம் போதாகி

மாலை மலரும் இந் நோய்

என்று குறள் கூறுவதும் இதனைத்தான். மருந்தைத் தேடும் நோய் என்றே வள்ளுவர் குறிப்பிடுகிறார். காதல் என்பது தானாக வர வேண்டும்; இயற்கையாக வர வேண்டும். கனியும், காதலும் தானாகப் பழுத்தால்தான் சுவையாகும்.

இன்று திரைப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும் காட்டப்படும் காதல் காட்சிகள் இயற்கைக்கு எதிரானவை. உடல் இச்சை என்னும் வெறித்தனத்தை வளர்ப்பவை; இல்லாத இடத்துக்குச் சொல்லாமல் அழைத்துச் செல்பவை. கதைத் தலைவனுக்கு ஒரு நண்பர் கூட்டம்; அந்தக் கூட்டம் கல்லூரிக்குச் செல்கிறதோ, இல்லையோ, நாள் முழுவதும் குடித்துக் கூத்தடிக்கிறது; மற்ற நேரங்களில் இளம் பெண்களின் பின்னாலேயே அசடு வழியச் சுற்றுகிறது. “ஐ லவ் யூ’ சொல்லச் சொல்லி அவர்களை மிரட்டுகிறது.

சமுதாயத்தில் சம பாதியாக இருக்கும் மகளிருக்கு தம் வாழ்க்கையைத் தாமாக அமைத்துக் கொள்ளும் உரிமை கிடையாதா? இப்படிப்பட்ட அடாவடிக்காரர்களிடம் அகப்பட்டு வாழ்க்கையை அழித்துக் கொள்ள வேண்டுமா? அவர்களுக்கு தற்கொலையைத் தவிர வேறு வழி என்ன? இளைஞர்களுக்கு புதிய வழியை காட்ட வேண்டிய ஊடகங்கள் பொல்லாத வழியைக் காட்டலாமா?

இருவருக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டிய அன்பின் பரிமாற்றம் தெருவெங்கும் சிரிக்கிறது. மகளிரின் சம்மதம் இல்லாமல் அவர்களது பெயர்களைத் தம் பெயரோடு பொது இடங்களில் எழுதி வைப்பது அந்த மனநோயாளிகளுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியாக இருக்கலாம்; அந்த அப்பாவிப் பெண்களின் நிலை என்ன? அவர்களின் மனங்களைக் காயப்படுத்த இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?

தமிழ்ச் சமுதாயம் காதலுக்கு எதிரானது அல்ல; அதுவே சங்க காலம் முதல் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாழ்க்கை முறை; “செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாங்கலந்தனவே’ என்றுதான் குறுந்தொகைப் பாடல் குறிப்பிடுகிறது.

“என் தாயும், உன் தாயும் எத்தகைய உறவின் முறையோ? என் தந்தையும், உன் தந்தையும் எந்த முறையில் உறவோ? இப்போது ஒன்று சேர்ந்திருக்கும் நாம் இருவரும் முன்பு எவ்வாறு அறிந்தோம்? செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் அம்மண்ணோடு கலந்து அதன் தன்மை அடைதல் போல அன்புடைய நம் நெஞ்சம் தாமாக ஒன்றுபட்டன’ என்பது அந்தக் குறுந்தொகைப் பாடலின் கருத்தாகும். இது அக்காலக் காதல் மணமுறைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

உறவு முறையில் இவர்கள் ஒன்று சேரவில்லை என்பதையும், இவர்கள் சந்தித்து மனம் ஒருமித்து மணம் முடித்த பின்பே உறவானார்கள் என்பதையும் இதன் மூலம் அறியலாம்.

ஒருநாள் தலைவன் தலைவியைச் சந்திப்பதற்காக ஒருவருக்கும் தெரியாமல் ஒரு புன்னை மரத்தடிக்கு வருகிறான். அங்கே அவனைச் சந்திப்பதை அவள் விரும்பவில்லை; காரணம் என்ன தெரியுமா?

அவள் தாய் சிறுமியாக இருந்தபோது தன் தோழிகளோடு விளையாடிவிட்டு, ஒரு புன்னைக் கொட்டையை மணலில் அழுத்தி வைத்து விட்டு மறந்து விட்டாள்; அந்தக் கொட்டை முளை விட்டு நிற்க, அதனைத் தன் குழந்தை போலக் கருதி பாலும், நெய்யும் ஊற்றி அன்பாக வளர்த்தாள்; அதுவும் மரமானது.

ஒருநாள் அவள் தாய் அந்த புன்னை மரத்தைக் காட்டி, “இது மரமல்ல, உனக்கு முன் பிறந்த என் மூத்த மகள்; உனக்கு தமக்கை’ என்றாள். எனவே தனது தமக்கைக்கு எதிராக காதலனைச் சந்திக்க நாணம் கொண்டாள் என்று நற்றிணை (172) கூறுகிறது.

“அன்னை கூறினள் புன்னையது சிறப்பே

அம்ம நாணுதும் நும்மொடு நகையே’

என்பது அப்பாடல்.

இப்படிப்பட்ட பண்பட்ட உறவு முறைகளுக்குச் சொந்தக்காரர்கள் நாம்; இயற்கை உயிர்களையும் உறவு முறையாக ஏற்றுக்கொண்ட சமுதாயம் இது. ஆனால் இங்குதான் சாதி, சமய வேறுபாடுகள். அதனால் ஓயாத சண்டை சச்சரவுகள்; பூசல், போராட்டங்கள்; இவை காலம் காலமாக இருந்து வந்த உறவுகளைப் பிரித்து வைத்து விட்டன.

இந்த வேறுபாடுகளையும், கூறுபாடுகளையும் களைவதற்கு இத்தகைய கொண்டாட்டங்கள் துணை செய்ய வேண்டும்; வேர்களைப் பிடுங்கி, வேற்றுமைகளை வளர்த்துவிடப் பயன்படுத்திடக் கூடாது. வெறுப்பை விதைத்தால் வேற்றுமைதானே விளையும்.

“அன்பை உனக்குள்ளே வைத்துக் கொண்டு வெளியில் ஏன் தேடுகிறாய்?’ என்றார் சித்தார்த்தர். இந்த அன்புதான் குழந்தைகளிடம் “பாச’மாகவும், நண்பர்களிடம் “நட்’பாகவும், எளியவர்களிடம் “கருணை’யாகவும், இறைவனிடம் “பக்தி’யாகவும், காளையர் கன்னியர் இடையே “காத’லாகவும் பெயர் மாற்றம் பெறுகிறது. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல, எல்லா உயிர்களுக்கும் இயல்பானது. இதனை ஏற்றிப் போற்றுவது நம் எல்லாரது கடமையாகிறது.காதலர் தின கொண்டாட்டத்தின் மூலம் உலகில் அன்பை விதைப்போம்; உறவையும், ஒருமைப்பாட்டையும் அறுவடை செய்வோம்.

உதயை மு. வீரையன்

Related Posts

error: Content is protected !!