சிகரெட் வாங்கும் வயசு 18லிருந்து 21 ஆகிறது?

சிகரெட் வாங்கும் வயசு 18லிருந்து 21 ஆகிறது?

உடலுக்கு கேடு என்று தெரிந்தாலும் புகைபிடித்தல் மற்றும் புகையிலை பொருட்கள் பயன் படுத்துதல் ஆகியவற்றால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நடத்தப்பட்டாலும், அதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புகையிலைப் பொருட்கள் குறித்த தயாரிப்பு, வர்த்தம் மற்றும் விற்பனை தொடர்பாக ஏற்கனவே பல சட்டங்கள் இருந்தாலும், சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களுக்கான 2003ம் ஆண்டு சட்டத்தில் தற்போது மத்திய அரசு முக்கிய திருத்தம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. அதன்படி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புதிய மசோதா தாக்கல் செய்ய வசதியாக முன்மொழிவை அரசுக்கு அனுப்பி உள்ளது.

இதுகுறித்து சுகாதார துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ‘சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 18 என்பதில் இருந்து 21 ஆண்டுகளாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் (வர்த்தக மற்றும் வர்த்தக, விளம்பரம் தடை மற்றும் ஒழுங்குமுறை, உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோகம்) திருத்தச் சட்டம், 2020 வரைவை மத்திய சுகாதார அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. முன்மொழியப்பட்ட திருத்தத்தின்படி, சிகரெட் அல்லது பிற புகையிலை பொருட்கள் 21 வயதுக்குட்பட்ட எவருக்கும் விற்கப்படாது.

கல்வி நிறுவனங்களின் 100 மீட்டர் சுற்றளவில் இந்த தயாரிப்புகளின் பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்படும். இந்த திருத்த மசோதாவில் சிகரெட்டு அல்லது எந்தவொரு புகையிலை பொருட்கள் பாக்கெட்டுகளில் அடைத்துதான் விற்கப்பட வேண்டும். அதாவது, சிகரெட் அல்லது புகையிலை பொருட்களை சில்லறை விற்பனையில் விற்க அனுமதிக்கப்படாது. விதிகளை மீறினால் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படலாம். இரண்டாவது முறையாக இதைச் செய்ததற்காக ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.

தடை செய்யப்பட்ட பகுதியில் புகைபிடித்ததற்காக அபராதத்தை ரூ.200 லிருந்து ரூ .2000 ஆக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு ஊடகங்களிலும், சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் தொடர்பான விளம்பரம் வந்தாலோ, அத்தகைய விளம்பரங்களில் நடித்தாலோ, அவை தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

error: Content is protected !!