ஸ்டாலின் முதல்வராகவே முடியாது- மு.க அழகிரி ஆவேசம்!

ஸ்டாலின் முதல்வராகவே முடியாது-  மு.க அழகிரி ஆவேசம்!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, தமது அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து, மதுரையில் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது தமது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அவர், மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவதற்கு, தமது ஆதரவாளர்கள் அனுமதிக்க மாட்டார்கள், என்று கூறினார். தமது அரசியல் நடவடிக்கைகள் குறித்து, விரைவில் நல்ல முடிவாக அறிவிப்பேன் என்றும், அவர் உறுதி அளித்தார்.

தம்மால் பதவி பெற்றவர்கள் நன்றியை மறந்து செயல்படுவதாகவும், மு.க.அழகிரி வேதனை தெரிவித்தார். கருணாநிதியை யாராலும் மிஞ்ச முடியாது என்று கூறிய அவர், கருணாநிதிக்கு நிகர் யாருமில்லை என்றும் கூறினார். கட்சி ஆரம்பித்தாலும் ஆரம்பிக்காவிட்டாலும் ஆதரவாளர்கள் தமக்கு ஆதரவு தரவேண்டும், என்றும் மு.க.அழகிரி, வேண்டுகோள் விடுத்தார்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தம்மை, மீண்டும் திமுகவில் சேர்த்துக் கொள்வதாக கருணாநிதி தம்மிடம் தெரிவித்ததாகவும் மு.க.அழகிரி, குறிப்பிட்டார். தாம் வெளிநாடு சென்று விட்டு திரும்பி வரும்போது, பொதுக்குழுவே வருக என போஸ்டர் அடித்து ஒட்டியதால், தமது ஆதரவாளர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் முக.அழகிரி கூறினார். தம்மை ஏன் கட்சியை விட்டு நீக்கினர்? என்றும், தாம் என்ன தவறு செய்தேன்? என்றும், மு.க.அழகிரி கேள்வி எழுப்பினார். தாம் மத்திய அமைச்சராக பதவி ஏற்றதால் சிலர் பொறாமைப்பட்டனர் என்று கூறியவர், ஸ்டாலினுக்காக கடைசி வரை பாடுபடுவேன் என தாம் அவரிடமே உறுதி அளித்ததாகவும் குறிப்பிட்டார்.

ஸ்டாலினுக்கு பொருளாளர் பதவி வாங்கித் தருமாறு தமது வீட்டுக்கு வந்தபோது தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் கேட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அதன்படியே தாம் கருணாநிதியிடம் ஸ்டாலினுக்காக பொருளாளர் பதவி வழங்கும்படி கேட்டேன் என்றும் அவர் தெரிவித்தார். திருமங்கலம், மதுரை மேற்கு, திருச்செந்தூர், நாகர்கோவில் ஆகிய தொகுதிகளில் நடைபெற்ற தேர்தல்களில் தமது உழைப்பும், தொண்டர்களின் உழைப்பும் வெற்றி தேடித்தந்த தாக மு.க.அழகிரி குறிப்பிட்டார்.

error: Content is protected !!