முத்தமோ முத்தம்- சர்வதேச முத்த தின ஸ்பெஷல்!
முத்தம் என்பது வெறும் பாசத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல; அது ஆரோக்கியம், உணர்ச்சி மற்றும் மனித உறவுகளின் ஆழமான தொடர்புகளை பிரதிபலிக்கும் ஒரு சக்திவாய்ந்த செயல். காமம் சார்ந்த ஒன்றாக மட்டுமே பலரால் கருதப்படும் முத்தம், உண்மையில் பல ஆரோக்கிய நன்மைகளையும், உளவியல் ரீதியான பிணைப்புகளையும் உள்ளடக்கியது. இந்த சிறப்புமிக்கச் செயலைக் கொண்டாடும் விதமாக,இன்றைய பிஸியான வாழ்கை முறையில், அன்புக்குரியவர்களுக்கு முத்தமிட பலர் மறந்துவருவதை நினைவூட்டும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 6ஆம் தேதி சர்வதேச முத்த தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த முத்தத்தில் எரிக்கப்படும் கலோரிகளின் எண்ணிக்கை ஆச்சரியமளிக்கிறது. ஒரு முத்தத்தில் குறைந்தது 12 கலோரிகள் எரிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல், முகத்திலுள்ள தசைகளுக்கும் இது சிறந்த பயிற்சியளிக்கிறது. ஒரு சிறிய முத்தத்தில் உதடுகளுக்கு அருகேயுள்ள இரண்டு தசைகள் உட்பட, முகத்திலுள்ள 12 தசைகளுக்கு வேலை கொடுக்கிறோம். சற்று ஆழமான, உணர்வுபூர்வமான முத்தத்தில் 34 முகத்தசைகள் தூண்டப்படுகின்றன. இது முகத்திற்கு ஒருவித பயிற்சியளித்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

முத்தமிடும்போது, உணர்ச்சிகள் தூண்டப்பட்டு, ரத்தநாளங்கள் விரிவடைகின்றன. இதயத் துடிப்பு 58% வரை அதிகரிக்கும். இது உடலுக்கு புத்துணர்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறது. குறிப்பாக, அன்பானவர்களிடம் இருந்து முத்தத்தைப் பெறுவது அல்லது அவர்களுக்கு முத்தமிடுவது உடல் மற்றும் மனதிற்கு உற்சாகத்தையும், நேர்மறை ஆற்றலையும் தருகிறது.முத்தம் கொடுக்கும்போது பரிமாறப்படும் உமிழ்நீரில் புரதம் : 0.7 மி.கிராம் இருக்கிறது, கொழுப்பு 0.71 மி.கிராம் இருக்கிறது, உப்பு : 0.45 மி.கிராம் இருக்கிறது, நீர் : 60. மி.கி இருக்கிறது.10 விநாடி கொடுக்கப்படும் முத்தத்தின் மூலமாக 9 மி.லி உமிழ்நீர் பரிமாற்றம் செய்யப்படுகிறது.உணர்ச்சிகளுக்குக் காரணமாகும் அட்ரினலின் ஹார்மோன்(Adrenaline Hormone) சுரப்பது அதிகமாகும். மகிழ்ச்சிக்குக் காரணமான செரோட்டோனின் ( Serotonin) சுரப்பு அதிகரிக்கும்.மன அமைதிக்கு உதவும் ஆக்ஸிடோசின் ஹார்மோன் ( Oxytocin Hormone) சுரப்பு அதிகமாகும். கோபம், உடல் பருமன், கொழுப்பு ஆகியவற்றுக்குக் காரணமாகும் கார்ட்டிசால் ஹார்மோன் (Cortisol Hormone) சுரப்பு குறையும். எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக முத்தமிடுகிறோமோ அதற்குச் சமமாக, முதுமையால் நமது முகத்தில் சுருக்கம் விழுவது குறையும்.
திரைப்படங்கள் மூலமாகவோ அல்லது தனிப்பட்ட அனுபவங்கள் மூலமாகவோ, ஒருவரை நமக்கானவர் என்று அறிவதற்கு முதல் முத்தம் ஒரு சிறந்த வழியாகக் கருதப்படுகிறது. இதனால்தான் முதல் முத்தத்தின் மீது நாம் அதிக மதிப்பு வைக்கிறோம். ஆனால், உண்மையில் முத்தமிடுதல் ஏன் அவ்வளவு சிறப்பு வாய்ந்தது?
இதற்குப் பல காரணங்கள் உள்ளன. குழந்தையாகப் பிறந்ததில் இருந்தே உதட்டின் மூலம் தொடுவது நமக்கு இயல்பாகவே பிடித்தமான ஒன்று. தாய்ப்பால் அருந்தும் காலம் முதலே நம்முடைய உதடு இத்தகைய பழக்கத்திற்கு ஊக்குவிக்கப்படுகிறது. தாயின் அரவணைப்பையும், அன்பையும் குழந்தை தன் உதடுகள் மூலம் உணர்கிறது. இந்த ஆழமான, ஆரம்பகால அனுபவமே முத்தத்தின் மீதான மனிதர்களின் இயற்கையான ஈடுபாட்டிற்கு ஒரு காரணம் எனலாம்.
உதட்டோடு உதடு வைத்து முத்தமிடும் பழக்கம் மீது மனிதர்களுக்கு இயல்பாகவே விருப்பம் ஏற்படும் வகையில், நாம் சில பரிணாம மாறுதல்களுக்கு உட்பட்டுள்ளோம் என்ற பார்வையும் உள்ளது. மனிதர்களின் பரிணாம வளர்ச்சிக்கு முந்தைய காலகட்டத்தில், குறிப்பாக தாய்ப்பால் ஊட்டும் முன்பு, தாய் முதலில் உணவைத் தன் வாயால் மென்று அதைக் குழந்தைக்குத் தன் வாயாலேயே ஊட்டுவார். இது ப்ரீமாஸ்டிகேஷன் (premastication) என அழைக்கப்படுகிறது. இது மனிதக்குரங்கு இனத்தில் நன்கு அறியப்பட்ட பழக்கமாகும். இந்தப் பழக்கத்தின் ஒரு நீட்சியாகவே உதடுகள் வழியான தொடர்பு மனிதர்களிடையே முத்தமாக வளர்ந்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
முத்தம் என்பது ஒரு கலாச்சார நிகழ்வாகவும், சமுதாயப் பிணைப்பின் அடையாளமாகவும் உலகம் முழுவதும் வெவ்வேறு வடிவங்களில் உள்ளது. இது அன்பு, பாசம், ஆறுதல், நம்பிக்கை, மன்னிப்பு மற்றும் பல உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒரு உலகளாவிய மொழியாகும்.
சர்வதேச முத்த தினம், நாம் நேசிப்பவர்களுடன் உள்ள பிணைப்பை வலுப்படுத்தவும், அன்பை வெளிப்படுத்தவும், முத்தத்தின் முக்கியத்துவத்தை நினைவுகூரவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இந்த நாளில், உங்கள் அன்பானவர்களுக்கு ஒரு முத்தம் கொடுத்து, இந்த அற்புதமான செயலின் பலன்களையும், உணர்வுபூர்வமான அர்த்தத்தையும் கொண்டாடுங்கள்.
டாக்டர் ரமாபிரபா


