கச்சத்தீவு ; புதிய அந்தோணியார் ஆலயம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி 23-ம் தேதி நடைபெறுகிறது.

கச்சத்தீவு ; புதிய அந்தோணியார் ஆலயம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி 23-ம் தேதி  நடைபெறுகிறது.

கச்சத்தீவில் புதிதாக கட்டப்பட்ட அந்தோணியார் ஆலயத்தை யாழ் மறைமாவட்ட ஆயரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது.

KACCAHDEV DEC 11

நமது இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு வரை, கச்சத்தீவு ராமநாதபுரம் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்தது. இதற்கு வரலாற்று ஆவணங்கள் பல உள்ளன. இந்நிலையில், 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரமடைந்த பின்னர், ஜமீன் முறை ஒழிக்கப்பட்டு, ராமநாதபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த கச்சத்தீவு இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.1974 ஆம் ஆண்டு, இந்தியா இலங்கைக்கு இடையில் உள்ள பாக் ஜலசந்தி கடல் பகுதியில் எல்லை வகுப்பதில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. இதனடிப்படையில், கச்சத்தீவு இலங்கை வசம் சென்றது.

அதற்கு முன்பு வரை, இந்திய இலங்கை மீனவர்கள், பாக் ஜலசந்தி பகுதியில் ஒன்றாக இணைந்தே மீன் பிடித்து வந்தனர். கச்சத்தீவு பகுதியை தமிழக மீனவர்கள் வலைகளை உலர்த்தவும், ஓய்வெடுக்கவும் பயன்படுத்தியுள்ளனர். 1974 ஆம் ஆண்டு இந்திய இலங்கை நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில், கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் வலைகளை உலர்த்தவும் ஓய்வடுக்கவும் பயன்படுத்தலாம் என்று உரிமைகள் வழங்கப்பட்டன. ஆனால் கால   சூழ்நில மாறி நடப்பது என்னவென்று அனைவருக்கும் தெரியும்.

இதனிடையே அங்கு இருக்கும் புனித அந்தோணியார் தேவாலயம் என்ற கத்தோலிக்க தேவாலயத்தினை 20-ம் நூற்றாண்டில் ராமநாதபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த சீனிக்குப்பன் படையாச்சி என்பவர் நிர்மாணித்தார். இந்த தேவாலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறும். இதில், இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த மக்கள் உற்சாகத்துடன் கலந்து கொள்வர். ஆனால், 1983 ஆம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டுப் போர் தொடங்கியதை அடுத்து, இந்த திருவிழா கொண்டாடப்படுவது நிறுத்தப்பட்டது. பின்னர், கடந்த 2009 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததை அடுத்து, 2010 ஆம் ஆண்டிலிருந்து மீண்டும் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா ஆண்டு தோறும் இரு நாட்டு பக்தர்களும் இணைந்து கொண்டாடும் விழாவாக இருந்து வருகிறது.

இந்தத் தேவாலயம் மிகவும் பழைமையான கட்டடத்தில் செயல்பட்டு வந்ததால், அதற்கு அருகில் புதிதாக மற்றொரு அந்தோணியார் ஆலயம் கட்டப்பட்டுள்ளது.இந்த ஆலயத்தின் திறப்பு விழா கடந்த 7-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் ஜெயலலிதா மறைவு காரணமாக ஆலய திறப்பு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இலங்கை கடற்படை நிதியுதவியுடன் கட்டப்பட்ட அந்தோணியார் ஆலயம் 23-ம் தேதி நடைபெறும் விழாவில் யாழ் மறை மாவட்ட ஆயரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த விழாவில் மத்திய அரசு அனுமதித்த சேசுராஜ், எமரால்டு, அந்தோணி, ராஜேந்திரன், ராயப்பன், சந்தியாகு சிங்கம் மற்றும் பங்குத்தந்தையர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!