’டிரான்: ஏரஸ்’ திரைப்படம் சரியான நேரத்தில் வெளியாகிறது”- ஜாரெட் லெட்டோ!

டிஸ்னி நிறுவனத்தின் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளான அறிவியல் புனைகதைத் திரைப்படமான ‘டிரான்: ஏரஸ்’ (Tron: Ares) இந்த வாரம் அக்டோபர் 10, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence – AI) மையமாகக் கொண்ட இந்தக் கதைக்களம், தற்போது உலகெங்கிலும் ஏஐ குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், “சரியான நேரத்தில் வெளியாகிறது” என்று படத்தின் முன்னணி நடிகர் ஜாரெட் லெட்டோ (Jared Leto) உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார்.
பத்தாண்டுகளுக்கு முன்பு தொடங்கிய பணி, இன்றைய நிஜம்!
லண்டனில் நடந்த திரையிடலின்போது ‘டிஜிட்டல் ஸ்பை’ பத்திரிகைக்கு ஜாரெட் லெட்டோ அளித்த பேட்டியில், ஏஐ தொழில்நுட்பம் பற்றிப் படம் பேசும் இந்த வேளையில் அதன் வெளியீடு மிகவும் பொருத்தமானது என்று குறிப்பிட்டார்.
“இந்தப் படத்தில் நாங்கள் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வேலை செய்யத் தொடங்கினோம். அந்தச் சமயத்தில், நீங்கள் ஒரு ஆராய்ச்சியாளராகவோ அல்லது கல்வியாளராகவோ இல்லாதபட்சத்தில், பெரிதாக யாரும் செயற்கை நுண்ணறிவைப் பற்றிப் பேசவில்லை. இப்போது, ஏஐ தொழில்நுட்பத்தைப் பற்றித் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும், எல்லோரும் அதைப் பற்றிப் பேசுகிறார்கள். செயற்கை தொழில்நுட்பம் நம் வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்டது. இப்படியான சமயத்தில் படம் வெளியாவது பொருத்தமாக இருக்கும் என நான் நினைக்கிறேன்,” என்று ஜாரெட் லெட்டோ கூறியுள்ளார்.
கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக இந்தப் படத்தில் பயணித்த லெட்டோவும், அவரது சக நடிகரான ஜோடே டர்னர்-ஸ்மித் (Jodie Turner-Smith) அவர்களும், செயற்கை நுண்ணறிவின் நெறிமுறைகள் பற்றிய ஆய்வு சரியான நேரத்தில் நிகழ்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
தீர்க்கதரிசனத்துடன் உருவாக்கப்பட்ட கதை!
நடிகை ஜோடே டர்னர்-ஸ்மித் பேசுகையில், “நாங்கள் இந்தப் படத்தை ஒன்றரை வருடங்களுக்கு முன்புதான் படமாக்கினோம். ஆனால், இதன் கருவை அவர்கள் (உருவாக்கியவர்கள்) மிகவும் தீர்க்கதரிசனமாக உருவாக்கியுள்ளனர். படம் உருவானபோது ஏஐ பற்றிய உரையாடல் பெரிதாக இல்லை. ஆனால் தற்போது படம் வெளியாவதற்கான பொருத்தமான சூழல் உருவாகி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும், இந்தப் படம் பதில்களை அளிப்பதை விட, கேள்விகளை எழுப்புவதே முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார்.
“செயற்கை தொழில்நுட்பம் குறித்தான பல கேள்விகளுக்கு எங்களிடம் எந்தப் பதில்களும் இல்லை. ஆனால், செயற்கை தொழில்நுட்பத்தின் நெறிமுறைகள் குறித்தும், ஏஐ மனிதனை மையமாகக் கொண்டிருப்பது குறித்தும் எங்களுடன் இணைந்து கேள்வி கேட்குமாறு மக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். மனிதர்கள் ஏஐ உலகத்தை சிறப்பாக மாற்றப் பயன்படுத்தினால் அது நல்லதுதான்,” என்று ஜோடே மக்களைப் பார்த்துக் கோரிக்கை விடுத்தார்.
நெறிமுறையற்ற கைகளில் AI: கதையின் மையக்கரு!
இவான் பீட்டர்ஸ் (Evan Peters) ஏற்று நடித்திருக்கும் ஜூலியன் டிலிங்கர் (Julian Dillinger) என்ற கதாபாத்திரம், செயற்கை நுண்ணறிவு எந்தவிதமான நெறிமுறைகளும் இல்லாத ஒருவரின் கைகளில் கிடைத்தால் என்ன நடக்கும் என்பதே ‘டிரான்: ஏரஸ்’ திரைப்படத்தின் கதை என்று ஜாரெட் லெட்டோ விளக்கினார்.
சமூகத்தின் கவனம் முழுவதையும் செயற்கை நுண்ணறிவு ஈர்த்திருக்கும் இந்தத் தருணத்தில், தொழில்நுட்பத்தின் இருண்ட பக்கத்தைப் பற்றிய இந்தக் கதை திரைக்கு வருவது அதன் முக்கியத்துவத்தை மேலும் உயர்த்துகிறது.
‘டிரான்: ஏரஸ்’ திரைப்படத்தில் ஜாரெட் லெட்டோ, ஜோடே டர்னர்-ஸ்மித், கிரேட்டா லீ, இவான் பீட்டர்ஸ், ஹசன் மின்ஹாஜ் மற்றும் ஜெஃப் பிரிட்ஜஸ் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப் படம் அக்டோபர் 10, 2025 அன்று இந்தியத் திரையரங்குகளில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.