பெட்ரோல், டீசல் விலைகள் குறையவேயில்லையே என்பது சற்றே மனக் கசப்பை தருகிறது!

பெட்ரோல், டீசல் விலைகள் குறையவேயில்லையே என்பது சற்றே மனக் கசப்பை தருகிறது!

குறைந்த விலையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணையை வாங்குகிறோமே. ஆனாலும் பெட்ரோல், டீசல் விலைகள் குறையவேயில்லையே என்பது சற்றே மனக் கசப்பை தருகிறது.

முன்பெல்லாம் மாதாமாதம் விலையேற்றம் என்று இருந்த நிலை அறவே மாறி விட்டது! கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட நிரந்தரமாக உயர்வாகவே இருப்பது வர்த்தக உலகிற்கு மட்டுமே புரிந்த தகவலாக இருக்கலாம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100 என்று விலை ஏறிய நாளில் இருந்து கச்சா எண்ணெய் விலைகள் உலகச் சந்தையில் குறைந்தாலும் நமது நுகர்வோருக்கு ஆறுதல் தரும் வகையில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் இருப்பதைப் பார்க்கிறோம். பிரதான எதிர்க்கட்சிகள் விலைவாசி ஏற்றம் பற்றி பொது மேடைகளில் அனல் பறக்க பேசினாலும் அன்றாட உபயோக எரிபொருள் பற்றி எந்த கேள்வியும் எழுப்பப் டாமல் இருப்பதும் ஏன்? என்று பொதுமக்கள் கேட்க ஆரம்பித்துள்ளனர்.

2022 மே மாதம் முதலே பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102–ஐ ஓட்டியும் டீசல் விலை ரூ.94–ஐ ஓட்டியும் இருக்கிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் போதெல்லாம் நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்வது வாடிக்கை தான்.

ஆனால் கடந்த 17 மாதங்களில் கச்சா எண்ணெய் விலை பல நாட்களுக்கு 40% குறைந்திருந்த போதும் பெட்ரோல் விலை குறைக்கப்பட வில்லை!

2010–ம் ஆண்டு மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, முதன்முதலாக பெட்ரோல் விலையை அவற்றை சுத்திகரித்து விநியோகிக்கும் ஆயில் மார்கெட்டிங் நிறுவனங்களான (ஓஎம்சி) இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் (பிபிசிஎல்) மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் (எச்பிசிஎல்) ஆகியவையே முடிவு செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

அதன் பின் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மாற்றங்களை ஒட்டி பெட்ரோல் விலைகள் தொடர்ந்து மாற ஆரம்பித்தன.

பிறகு 2015–ம் ஆண்டு பிரதமர் மோடி பெட்ரோல் விலைகளை போலவே டீசல் விலையையும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்தார். இறக்குமதி சுத்திகரிப்பு மற்றும் விற்பனை செய்யும் ஓஎம்சி–கள் டீசல் விலையையும் முடிவு செய்ய ஆரம்பித்தன.

அவற்றின் விலையை அரசு கட்டுப்படுத்திக் கொண்டு இருந்த போது மத்திய அரசுக்கு மானியம் என்ற வகையில் செலவு அதிகரித்துக் கொண்டே போனது. அதைத் தவிர்க்க அவை ‘டி கண்ட்ரோல்’ செய்யப்பட்டன.

கச்சா எண்ணெய் விலை கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் பீப்பாயின் விலை 102 டாலராக இருந்தது. ஆனால் டிசம்பர் 2022–ல் டாலர் 71 ஆக குறைந்தது. பிறகு சற்றே அதிகரித்தாலும் 5 மாதங்களுக்கு முன்பு அதாவது மார்ச் மாதத்தில் டாலர் 66 என்ற அளவில் மட்டுமே இருந்தது.

ஆனால் ஜூலை முதலே கச்சா எண்ணெய் விலை சர்வதேச தயாரிப்புகளின் முடிவுகள் படி மீண்டும் டாலர் 78–ஐ தாண்டி உள்ளது.

இது வரை நாம் கிட்டத்தட்ட 15 டாலர் வரை குறைவாக சர்வதேச சந்தையை விட குறைந்த விலையில் ரஷ்யாவிடம் இருந்து வாங்கி வருகிறோம்.

கடந்த ஆண்டை விட தற்போது முதல் அரையாண்டில் 11% அதிகமாக கச்சா எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து வாங்கியுள்ளோம்.

இதற்கிடையில் கச்சா எண்ணெய் விலையை கட்டுக்குள் வைத்திருக்கும் அமைப்பான OPEC உற்பத்தி குறைப்பு செய்ய உத்தரவிட்டுள்ளது. உற்பத்தியை குறைத்தால் சர்வதேச சந்தையில் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலைகளை அதிகப்படியாக நிர்மாணிக்கலாம் அல்லவா?

அந்த ஒப்பந்தத்தை ரஷ்யா ஒப்புக் கொண்டு தினமும் 50 ஆயிரம் பீப்பாய்கள் மட்டுமே உற்பத்தியை செய்து விற்கிறது.

அந்த நிலையிலும் நமக்கு ரஷ்யா சர்வதேச சந்தை விலையை விட குறைவாகவே விற்கிறது.

இந்த சூழலை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பிரதமர் மோடி கிட்டத்தட்ட 11% அதிகமாக ரஷ்யாவிடம் இருந்து வாங்க உத்தரவிட்டு இருந்தார்.

மொத்தத்தில் மிகக் குறைந்த விலையில் கச்சா எண்ணையை வாங்கிட முடிந்தாலும் சாமானியனுக்கு விலை குறைப்பு இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இப்படி குறைந்த விலையில் பெட்ரோல், டீசலை வாங்கா விட்டாலும், சாமானியனுக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை.

அடுத்த சில மாதங்களில் குறிப்பாக தீபாவளி பண்டிகை காலத்தில் பெட்ரோல் விலையை கணிசமாக குறைத்தால் அது அரசியல் கட்டாயமாக இருக்கலாம். அடுத்த 10 மாதங்களில் பொதுத் தேர்தல் நடைபெற இருப்பதை அறிவோம்.

ஒரு வேளை தேர்தல் நேரத்தில் பெட்ரோல் விலைகளை குறைத்தால் அது தேர்தல் கண்ணோட்டத்தில் நல்ல முடிவாக பாரதீய ஜனதா யோசித்து இருக்கலாம்!

எது எப்படியோ, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அதிகரித்து கொண்டிருக்கும் உணவு பண வீக்கத்தை கணிசமாக கட்டுப்படுத்தும் அல்லவா?

தற்சமயம் பணவீக்கம் மிகவும் குறைந்து இருக்கும் நாடுகளில் ஜப்பானும் ஒன்றாகும், அங்கு 1%க்கும் விட குறைவாக இருக்கிறது.

நம் நாட்டிலும் ஜூலை மாதத்தில் உணவு பணவீக்கம் கணிசமாகவே குறைந்தது. காரணம் சமையல் எண்ணை மற்றும் உணவு தானியங்களின் விலைகள் குறைந்து வருவதால் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பெட்ரோல் டீசல் விலைகளை குறைத்தால் மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ள சுமை குறையும்.

உயர்ந்திருக்கும் விலைவாசியும் குறையும்.

எனவே பெட்ரோல் டீசல் விலைகளை குறைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கையை

உடனே எடுக்கவேண்டும்.

ஆர். முத்துகுமார்

error: Content is protected !!