இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்கள்: வெற்றிகரமாக விண்ணில் நிறுத்தம்!
விண்வெளியில் இந்தியாவின் ஆய்வு மையத்தை அமைப்பதில் இஸ்ரோ முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக விண்கலன்களை தனித்தனியாக ஏவி அவற்றை விண்ணில் ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கு ”பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு 2035ஆம் ஆண்டு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஓர் அங்கமாக ஸ்பேடெக்ஸ் ஏ மற்றும் ஸ்பேடெக்ஸ் பி என இரண்டு செயற்கைக்கோள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.இவற்றை தனியார் நிறுவன பங்களிப்புடன் இஸ்ரோ தயாரித்துள்ளது. இவை ஒவ்வொன்றும் 220 கிலோ எடை கொண்டது. இந்த செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி சி60 என்ற ராக்கெட் தயாரானது.

அதன்படி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் நேற்று (30.12.2024) வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது குறிப்பாக ஸ்பேடெக்ஸ்- ஏ மற்றும் பி என 2 சிறிய செயற்கைக்கோள்களை இந்த ராக்கெட் சுமந்து சென்றது.இவ்வாறு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட்டின் முதல் இரண்டு அடுக்குகள் வெற்றிகரமாகப் பிரிந்தன. ராக்கெட் செயல்பாடுகள் திட்டமிட்டபடி செயல்படுவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இஸ்ரோ தலைவர் எஸ். சோமநாத் கூறும்போது, “ஸ்பேடெக்ஸ் (SpaDeX) பணிக்காக பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ராக்கெட் செயற்கைக்கோள்களைச் சரியான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது. செயற்கைக்கோள்களைச் சரியான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய பி.எஸ்.எல்.வி. திட்டத்தின் ஒட்டுமொத்த குழுவிற்கும் வாழ்த்துக்கள். மேலும், ஸ்பேடெக்ஸ் குழு இரண்டு சிறிய செயற்கைக்கோள் கட்டமைப்புகளைப் பயன்படுத்தி மிகவும் புதுமையான, செலவு குறைந்த செயல் விளக்கப் பணியில் ஈடுபட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.


