இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் – சோனியா காந்தியின் அறிய வேண்டிய பார்வை

இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் – சோனியா காந்தியின் அறிய வேண்டிய பார்வை

ன்றைய ஹிண்டுவில் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் குறித்து காங்கிரஸ் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தி ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அதில் ஹமஸ் முதன்மைத் தாக்குதலை கண்டித்திருப்பதோடு இஸ்ரேலின் கொடூர எதிர்வினையையும் சாடி இருக்கிறார். சொல்லப் போனால் ஹமஸ் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேல் துவங்கி இருக்கும் போர் பற்பல மடங்கு மோசமானது; அதீத அழிவினை ஏற்படுத்துவது; ஒரு சிலரின் குற்றங்களுக்கு ஒட்டு மொத்த சமூகத்துக்கு தண்டனை தருவது; இவை எல்லாவற்றையும் விட போர் சம்பந்தமான பல்வேறு பன்னாட்டு விதிமுறைகள் அனைத்துக்கும் எதிரானது என்று சுட்டிக் காட்டுகிறார்.

அதாவது ஹமஸ்சின் ராக்கெட் தாக்குதல் குற்றம் என்று நீங்கள் கருதினால், அதைக் கண்டித்தால், அதற்கு பற்பல மடங்கு அதிகமான வீரியத்துடனான கண்டனம் நமக்கு இஸ்ரேலின் எதிர்வினை மீது எழ வேண்டும் என்று வாதிடுகிறார். ஏனெனில், சட்டவிரோதமான ஒரு தாக்குதலில் சுமார் 1400 பேர் கொலையுண்டிருக்கிறார்கள்.

இன்னொரு சட்ட விரோத தாக்குதலில் 7500க்கும் மேல் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள். எதிர்வினைப் படுகொலைகள் இன்னமும் தொடருகின்றன. இன்னும் எத்தனை பேர் இறந்து போனால் நாம் ‘நிறைய பேர் செத்துப் போயிட்டாங்கப்பா!’ என்று சொல்வோம் என்று கேட்கிறார். அமெரிக்க பாடகர் பாப் டிலனின் ‘How many deaths will it take ’til we know, that too many people have died?’ எனும் வரிகள் நினைவுக்கு வருகின்றன. [Ref]

இந்தப் பின்னணியில்தான் இஸ்ரேலில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் ஐநா சபையின் தீர்மானத்துக்கு இந்தியா வாக்களிக்காததை சாடுகிறார். அதுவுமின்றி, தனது இந்த நிலைப்பாட்டை இந்தியாவின் நீண்ட கால அதிகாரபூர்வ நிலைப்பாடோடு ஒப்பிடுகிறார். இன்றைய மத்திய அரசுமே கூட போர் துவங்கிய ஓரிரு நாட்களில் இதே நிலைப்பாட்டையே உறுதி செய்திருக்கிறது என்றும் சுட்டிக் காட்டுகிறார்.

இந்தக் கட்டுரை முக்கியமானது என்று கருதுகிறேன். இந்திய அரசிடம் இருந்து தெளிவான அணுகுமுறை எதுவும் வராவிடிலும், ஒரு முக்கிய எதிர்க்கட்சித் தலைவரிடம் இருந்து வருவது இந்திய அரசியல் குறித்த நமது நம்பிக்கையை தொடர வைக்கிறது.

அனைவரும் படிக்க வேண்டியது. பத்து வருடங்களாக எந்த முக்கியப் பிரச்சினைகள் குறித்தும் வாயையே திறக்காமல் கடக்கும் ஒருவரை சிறந்த தலைவராக போற்றும் இந்துத்துவர்கள் குறிப்பாக படிக்க வேண்டியது.

– ஸ்ரீதர் சுப்ரமணியம்

Related Posts

error: Content is protected !!