போயஸ்கார்டனில் சசிகலா இன்று பால்காய்ச்சிய பங்களா பெயர் இதுவா?

போயஸ்கார்டனில் சசிகலா இன்று பால்காய்ச்சிய பங்களா பெயர் இதுவா?

சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா விடுதலைக்கு பிறகு அரசியல், ஆன்மிக பயணம் என தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்., அத்துடன் தனது ஆதரவாளர்களையும் சந்தித்து வருகிறார். மேலும், பிரிந்து கிடக்கும் அதிமுகவை இணைப்பதே தனது நோக்கம் என்றும் கூறி வரும் சசிகலா, அதற்கான அரசியல் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், போயஸ் கார்டனில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்திற்கு எதிரே தான் கட்டி வந்த வீட்டின் பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்றைய தினம் புதிய இல்லத்தில் சசிகலா பால்காய்ச்சி குடியேறி உள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின் போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் சசிகலா வசித்து வந்தார். அதன் பின் சொத்து குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து கடந்த 2020-ஆம் ஆண்டு பெங்களூரு சிறையில் இருந்து வெளிவந்த சசிகலா தியாகராய நகரில் உள்ள அவரது உறவினர் வீட்டில் வசித்து வருகிறார்.

அண்மையில் திடீரென கடந்த வாரம் கொடநாடு எஸ்டேட் பங்களாவுக்கு சென்றிருந்தார் சசிகலா.. ஜெயலலிதாவின் உருவ சிலையுடன் கூடிய நினைவிடத்துக்கு அங்கே அடிக்கல் நாட்டப்பட்டது.. அப்போது முகம்நிரப்பிய சோகத்துடனும், கண்ணீருடனும் சில விஷயங்களை பகிர்ந்திருந்தார் சசிகலா. இந்த நிலையில் போயஸ் கார்டன் வேதா இல்லம்., அதாவது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டின் எதிரே மூன்று தளம் கொண்ட பிரம்மாண்ட பங்களாவை கட்டி முடித்துள்ளார் சசிகலா. ஜெ.யின் வேதா நிலையத்தைப் போலவே கட்டிடம், ஒரு தரைதளம், 2 மேல் தளங்களுக்கு அனுமதி அப்போது வாங்கப்பட்டிருந்தது. அதாவது, கடந்த 2019 -ல் எம்பி தேர்தல் நடந்தபோதே இந்த திட்டத்திற்கு சிஎம்டிஏ அனுமதி தந்துவிட்டதாம். இன்று அதிகாலை புதிதாக கட்டப்பட்ட  அந்த பங்களாவின் புதுமனை புகுவிழா நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் என்று சொல்லப்படும் தினகரன், திவாகரன் கூட இல்லாத சுற்றத்தினர் சிலரே இந்த விழாவில் பங்கேற்றனர். இந்த புது பங்களாவுக்கு அம்மு இல்லம் என்று பெயரிட முடிவாம்..

இந்நிகழ்வு குறித்து விசாரித்தப் போது `ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை ரூ10 கோடி. அதேசமயம், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, சசிகலா தொடர்பான ரூ1,520 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி வைத்திருந்தது அமலாக்கத்துறை, அதற்கு விதித்த அபராத தொகை ரூ480 கோடியாம். அந்த ரூ480 கோடி அபராதத் தொகையை அண்மையில் கட்டிபுட்டாராம் சசிகலா. இதனையடுத்தே இதுவரை முடக்கப்பட்ட அத்தனை சொத்துகளும் விடுவிக்கப்பட்டுவிட்டனவாம். அதில் ஒன்றுதான் போயஸ்கார்டனில் ஜெயலலிதா இல்லத்துக்கு எதிரே புதிதாக கட்டிமுடிக்கப்பட்டு இன்று கிரகப்பிரவேசம் நடத்தப்பட்ட பங்களாவுமாம். `

ஒருவழியாக அத்தனை சிக்கல்களையும் தீர்த்துவிட்ட சசிகலா இனி தீவிர அரசியலில் முழு வீச்சாக இறங்குவாராம்!

நிலவளம் ரெங்கராஜன்

error: Content is protected !!