ஞாபக மறதி ஸ்ட்ரோக்கின் அறிகுறியா? பக்கவாதத்தின் மாறுபட்ட முகங்கள்!
சமீபத்தில் ஒரு முக்கியமான நிகழ்வு என் கிளினிக்கில் நடந்தது:
70 வயது பாட்டி ஒருவர், தனது மகனுடன் என்னைச் சந்திக்க வந்திருந்தார். பாட்டிக்கு பல வருடங்களாக நீரிழிவு மற்றும் ரத்தக் கொதிப்பு இருந்தது. முக்கியப் பிரச்சனை என்னவென்றால், என்னைச் சந்திப்பதற்கு முந்தைய நாள் மதியத்திலிருந்து, நிகழ்பவற்றை அவ்வப்போது சரியாக ஞாபகம் வைத்துக் கொள்ளாமல் மாற்றி மாற்றிப் பேசுகிறார்; பேச்சில் உளறலும் குளறலும் வெளிப்படுகிறது என்பதே.
நான் பாட்டியிடம் சில கேள்விகள் கேட்டேன்:
- “நேற்று மதியம் என்ன சாப்பிட்டீர்கள்?”
- பாட்டி: “மதியானம் என்ன சாப்டுவாங்க.. சோறு தான் சார்” (உண்மையில் சாப்பிட்டது மீன் குழம்பு)
- “குழம்பு என்னது?”
- பாட்டி: “சாம்பார் தான்”
- “நேற்று இரவு சாப்பிட்டது என்ன?”
- பாட்டி: “இட்லி” (உண்மையில் சாப்பிட்டது தோசை)
நேற்று மதியத்திலிருந்து நினைவு சரியாக இல்லாமல் மாற்றி மாற்றிப் பேசியது, அவரது மகளுக்குச் சந்தேகம் வந்தது நல்ல விஷயம். நான் அவருக்கு மூளைப் பகுதி ஸ்கேன் எடுக்கப் பரிந்துரைத்தேன். நான் எண்ணியது போலவே, மூளையின் ரத்த நாளமொன்றில் அடைப்பு (Stroke) ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.

பக்கவாதம் (ஸ்ட்ரோக்) குறித்த விழிப்புணர்வு:
பலரும், கை, கால், முகம் ஆகியவை ஒருபக்கம் செயலற்று விழுவது மட்டுமே பக்கவாதம் என்று நினைக்கிறோம்.
ஆனால், எச்சரிக்கை!
நன்றாக இருந்தவர் திடீரென:
- பிதற்றுவது,
- நினைவு இழப்பது,
- மாறி மாறிப் பேசுவது,
- தன்னிலை இழப்பது
போன்றவையும் மூளையில் ரத்த நாள அடைப்பு (Stroke) ஏற்பட்டதற்கான முக்கிய அறிகுறியாக இருக்கலாம்.
ரத்த நாள அடைப்பு ஏற்படும்போது, மூளையின் நினைவுகளை ஒருங்கிணைக்கும் பகுதி அல்லது நினைவுகளைச் சேமிக்கும் பகுதிகளில் ரத்த ஓட்டம் குறைகிறது. இதன் காரணமாகவே நினைவு மங்குவதும், இழப்பும் ஏற்படுகின்றன. இந்த நிகழ்வில், ஸ்ட்ரோக் ஏற்பட்ட பின் நினைவு என்பது பதியப்படாமல் போவதால், ஸ்ட்ரோக் ஏற்பட்ட பிறகு சாப்பிட்டதை பாட்டி மறந்து விட்டிருக்கிறார்.
⚠️ மற்ற அசாதாரண அறிகுறிகள்:
எனக்குத் தெரிந்த மற்றொரு நிகழ்வு:
நன்றாக இருந்த 75 வயது முதியவர் ஒருவர், திடீரென சில நாட்களாகத் தனக்குப் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் தகாத உறவில் ஈடுபடுவதாக ஜன்னலைப் பார்த்துக் கூறிக்கொண்டே இருந்திருக்கிறார். சினங்கொண்டு கத்தியிருக்கிறார். அவர் மனநல மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின், அவருக்கு மூளை ஸ்கேன் செய்ததில், மூளையில் ரத்த நாள அடைப்பு (ஸ்ட்ரோக்) ஏற்பட்டிருப்பது தெரிந்திருக்கிறது.
இவ்வாறு ஸ்ட்ரோக் மூலம்:
- அதீத காம உணர்வு
- அதீத கோபம்
- சந்தேக எண்ணம் (Delusion) தூண்டப்படலாம்.
மேலும், நன்றாக இருந்தவர் திடீரென:
- கெட்ட வார்த்தைகளைப் பேசுவது,
- பொதுவெளியில் துணி இன்றி நடப்பது/ மலம் சிறுநீர் கழிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார் என்றாலும், இது மூளை ரத்த நாள அடைப்பு எனும் நோய்க்குறியாக இருக்கலாம்.
அதுவரை எல்லாம் சரியாக இருந்த தருணத்தில், திடீரென மனநலக் கோளாறு ஏற்படுவது என்பது மூளை ஸ்ட்ரோக்கின் அறிகுறியாகக் கொள்ளப்பட வேண்டும்.
⏱️ காலம் பொன் போன்றது: சரியான நேரத்தில் சிகிச்சை
இத்தகையோரைப் பார்த்துக் கொள்பவர்கள், உடனடியாக அவதானித்து மருத்துவ சிகிச்சைக்கு அவர்களை அழைத்து வர வேண்டும்.
ஸ்ட்ரோக் ஏற்பட்ட நான்கரை மணிநேரத்திற்குள் (4.5 hours) மூளை நரம்பியல் சிறப்பு மருத்துவமனைகளை அடையும் பட்சத்தில், உடனடியாக ஸ்கேன் செய்து, வந்திருப்பது மூளை ரத்த நாள அடைப்பாக இருப்பின், ரத்த நாள அடைப்புக் கட்டியைக் கரைக்கும் சிகிச்சையை செய்து, கிட்டத்தட்ட முழுமையான நிவாரணம் வழங்கும் வாய்ப்புக் கிட்டும்.
எனவே, பக்கவாதம் என்பது ஒரு பக்க கை, கால் விழுதல் என்று மட்டுமே ஏற்படுவதில்லை.
அதற்கு:
- நினைவிழத்தல் / நினைவுத் தடுமாற்றம்
- பிதற்றல்நிலை
- பேச்சுக் குளறுதல்
- அதீத சினம்
- இல்லாததை இருப்பது போன்று கூறுதல் (Delusion)
போன்ற பல அறிகுறிகளுடன் வெளிப்படலாம்.
இது குறித்து நாம் அனைவரும் விழிப்புணர்வு பெற வேண்டியது மிக அவசியம்.


