வீட்டு வசதி ஒதுக்கீட்டில் முறைகேடு: ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து- ஐகோர்ட்!

வீட்டு வசதி ஒதுக்கீட்டில் முறைகேடு: ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து- ஐகோர்ட்!

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீட்டில் முறைகேடு செய்த புகாரில் சிறப்பு நீதிமன்றம் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. ஜூலை மாதத்திற்குள் வழக்கு விசாரணையை நடத்தி முடித்து அறிக்கை சமர்ப்பிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

2006 முதல் 2011 வரையிலான ஆண்டு திமுக ஆட்சியின் போது, வீட்டு வசதித்துறை அமைச்சராக ஐ.பெரியசாமி பதவி வகித்தார். அப்போது, வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலருக்கு முறைகேடாக ஒதுக்கியதாக இவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இதனை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், அமைச்சர் ஐ.பெரியசாமியை வழக்கில் இருந்து விடுவித்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய, சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார். கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர் ஐ. பெரிய சாமியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும் ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 26 ஆம் தேதிக்குள் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வழக்கு மாற்று நடவடிக்கை முடிந்த பிறகு மார்ச் 28ஆம் தேதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய்க்கான பிணையை செலுத்த வேண்டும் எனவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜராகாவிட்டால் அவர்களுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பிக்கலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.தினந்தோறும் வழக்கின் விசாரணையை நடத்த வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் வழக்கின் விசாரணையை ஜூலை மாதத்திற்குள் முடித்து ஐகோர்ட்டிற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் அமைச்சர் பொன்முடி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி ஆகியோருக்கு எதிராகவும் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக விசாரித்து வருகிறார். இதில் பா.வளர்மதி மீதான வழக்கு விசாரணைக்கு மட்டும் சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

error: Content is protected !!