June 1, 2023

ஈரான்: ஹிஜாப்பிற்கு எதிரான போராட்டத்தில் வெளிநாட்டு சதி?

ஹிஜாப்பை முறைப்படி அணியவில்லை என்று கூறி போலீசார் தாக்கியதில் மாஷா என்ற இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹிஜாப்பை கழற்றி வீசியும், தீ வைத்து எரித்தும், முடியை வெட்டியும் பெண்கள் அரசுக்கு எதிராக முழக்கமிட்டு வருகின்றனர்.

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் போராட்டக்காரர்கள் மீது போலீஸ் நடத்திய தொடர் தாக்குதல்களில் இதுவரை 75 பேர் உயிரிழந்துள்ளனர். 1500க்கும் மேற்பட்டோரை சிறப்பு காவல் படையினர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் ஈரானின் கராச் நகரில் போராட்டத்தில் பங்கேற்ற ஹதிஷ் நஜாபி என்ற 20 வயது இளம் பெண்ணை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. வயிறு, கழுத்து, மார்பு உள்ளிட்ட இடங்களில் 6 குண்டுகள் பாய்ந்ததில் நஜாபி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கு தொடர்பாக வெளியாகியிருக்கும் காணொலி, போராட்டக்காரர்களை மேலும் ஆத்திரமடைய செய்துள்ளது.

ஈரானில் நடைபெற்று வரும் ஹிஜாப்பிற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகளிலும் மக்கள் போராட்டத்தில் குதித்திருக்கும் நிலையில், போராட்டத்தில் வெளிநாட்டு சதி இருப்பதாக ஈரான் குற்றம்சாட்டி வருகிறது.