இன்று சர்வ தேச புலிகள் ( ஜூலை 29) தினம்:

இன்று சர்வ தேச புலிகள் ( ஜூலை 29) தினம்:

ரு காட்டில் புலி மிகுந்த நலத்தோடு இருந்தால், அங்கே வாழும் பிற ஜீவராசிகளும் நலத்தோடு, நிறைய எண்ணிக்கையில் வாழ முடியும் .அவ்வாறு வாழ்பவைகளில் மாமிச உண்ணிகள் , தாவர உண்ணிகளும் அடங்கும்.கானகம் செழித்து இருந்தால்தான் தாவர உண்ணிகள் ஜீவித்திருக்க முடியும். இது தவிர அவற்றை அண்டி வாழும் பிற சிறிய மிருகங்கள் ,பறவைகள் , என கோடானு கோடி உயிரினங்கள் வாழ்கின்றன என்று அர்த்தம். சுருக்கமாகக் கூறுவதென்றால் ஒரு கானகத்தின் வெற்றிக் குறியீடு புலியே”.

tigers day jy 29

ஒரு காலத்தில் இவ்வுலகில் 8 வகைப் புலிகள் இருந்தன. கடந்த 50 வருடத்திற்குள் பாலி, ஜாவன், காஸ்பியன் போன்ற இனங்கள் முற்றோடு அழிந்தன.

புலிகளின் வாழ்வை உற்றுநோக்கின் ஒரு வெற்றி பெற்ற மனிதனின் வாழ்க்கையை விட மேம்பட்டதாகத் தெரிகிறது. இவை வாழ பரந்த நிலப்பரப்பு தேவைப்படுகிறது. பழைய ராமநாதபுரம் , மதுரை மாவட்டங்களை இணைத்தால் கிடைக்கும் நிலப்பரப்பில் 7 பெண் புலியும் , 2 ஆண் புலியும் வாழலாம்.

இவைகளுக்கு 8 நாட்களுக்கு ஒரு முறை குறைந்தது 1 மான் உணவாகத் தேவைப்படும் .ஒரு வருடத்திற்கு 50 .குறிப்பாக, இரவு உணவு கட்டாயம் தேவை. குறைந்தது இரவில் 27 கிலோ மாமிசம் தேவை.அதிக அலைச்சலும், பெரிய உடலும் இதன் ரத்தம் சூடாகக் காரணமாகின்றன. அதனால் நீர் நிலை அதிகம் உள்ள இடங்களில் மட்டுமே இவை வாழ்கின்றன. தண்ணீர் அதிகம் அருந்துவதைக் காட்டிலும், தன் உடலைக் குளிர்விக்க தண்ணீரில் மூழ்கி அமர்வதில் மகிழ்கிறது.

புலிகள் தங்களுக்கான உணவைத் தேடும்போது தான் மட்டுமே களத்தில் இறங்குகிறது.மற்ற புலிகளை உதவிக்கு அழைப்பதில்லை.

பிற புலிகள் தாமாக வரும்போது அவ்வப்போது அனுமதிப்பதும் உண்டு. அது ஆளுமையைப் பொறுத்த குணமாகும்.

புலிகள் இரையைப் பிடிப்பதற்காக 35–40 மைல் வேகத்தில் ஓடும் .சில உயிரினங்களைப் பிடிப்பதற்கு இவ்வேகம் போதாதலால், இது சில உத்திகளைக் கையாளுகிறது.

குறிப்பாக மான் போன்றவற்றைப் பிடிக்க , புதர்களில் மறைந்திருந்து திடீரென பாய்வதும், காட்டு எருதுகளைப் பிடிக்க ஒன்றை மட்டும் குறிவைத்து அதைத் துரத்தி கூட்டத்தில் இருந்து பிரித்து, பக்கவாட்டில் சென்று ,பாய்ந்து அதன் குரல்வளையில் கவ்விப் பிடிக்கிறது.

3,4 வயதான பிறகு பெண் புலி தன் முதல் காதல் அனுபவத்தை பெறுகிறது .

ஆனால் ஆணோ 4-5 வயதில் தான் காதல் அனுபவத்தைப் பெற முடிகிறது.

தன் எல்லையைத் தீர்மானமாக அறிந்த பிறகே, லெளகீக வாழ்விற்கு ஆண்புலி தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறது.

பிற ஆண்புலிகளுடன் சமர் புரிந்து, பெண் புலிகளைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பிறகே உறவில் ஈடுபடும்.

இதற்காக நீண்ட காலத்தையும் ,சக்தியையும் புலிகள் விரயமாக்க நேரிடுகிறது.

பெண் புலி தான் காமத்தோடு இருப்பதை ,சிறுநீர் மூலம் தெரிவிக்கும் .அதிலிருந்து வரும் வாடையை நுகர்ந்த ஆண்புலி, பெண்ணை நோக்கி வரும்.

பின்னர் தனது சிறுநீரை பெண் மேல் பீய்ச்சி அடிப்பதன் மூலம் ஒப்புதல் அளிக்கிறது.

அதே சமயம், உறுமும் முறையில் ஒலிகளை ஏற்ற இறக்கத்தோடு எழுப்பும். அப்போது பெண் ,தன் முகத்தை தரையை நோக்கியும், ஆண், வானை நோக்கியும் உறுமும்.

பெண் புலியின் சம்மதம் கிடைத்த பிறகே ஆண் உறவிற்கு முற்படும்.

அணைத்தல்,பிடரியைக் கடித்தல், முன்னங்கால்களைக் கொண்டு செல்லமாக அடித்தல், சிறிது நேர ஓய்விற்குப் பின் நடந்தவாறே உரசிக் கொண்டு கடித்தல் என நுட்பமான உத்திகளைக் காதல் களியாட்டத்தில் இவை மேற் கொள்கின்றன.

உறவுக் காலம் 3-4 முதல் 10 நாட்கள் வரை நீடிக்கிறது.

105 நாட்கள் சினைப் பருவம் முடிந்த பெண் புலி 3-4 குட்டிகள் வரை ஈனுகின்றது.

பெண் புலியின் சிறப்பு, தான் நிறைமாதமாக இருக்கும்போதும் உணவு வேட்டையில் ஈடுபடுவதுதான் .

ஓடுவதாலோ, குதிப்பதாலோ இவற்றிற்கு கருச்சிதைவு ஏற்படுவது கிடையாது.

பிறந்த புலிக் குட்டிக்கு ஆரம்பத்தில் ,கண் தெரியாது, காதும் கேட்காது. தாயின் இருத்தலை நாவினால் நக்குவதன் மூலம் அறிந்து கொள்கிறது. 12 மாதங்கள் வரை தாயின் பராமரிப்பில் இருக்கும்.

இக்காலகட்டமே இவைகளுக்கு மிக ஆபத்து வாய்ந்தவையாக அமைந்துவிடுகிறது. பொறாமை கொண்ட பிற ஆண் புலிகள், குட்டிகளைக் கொன்றுவிடுகின்றன.சில சமயங்களில் காம வயப்பட்ட ஆண் புலிகள் ,பெண்ணின் சம்மதம் கிடைக்காதபோது கோபம் கொண்டு அதைக் குட்டிகள் மீது காட்டி அவற்றைக் கொன்று விடுகின்றன.

பல சமயம் எல்லைக் கோட்டை அறியாமல், தாண்ட முற்படும் குட்டிகளைப் பிற புலிகள் கொன்று விடுகின்றன. இவற்றையெல்லாம் தாண்டி வந்து பிரந்தவற்றில் உயிர் வாழ்பவை 1-2 குட்டிகள் மட்டுமே .

ஒன்றரை வயதான பிறகே குட்டிகள் வேட்டைக்குத் தயாராகின்றன. கூர்மையான தாடைகள் ,கத்தி போன்ற பற்கள், பலம் நிறைந்த முன்னங்கால்களே வேட்டைக்கு சிறந்த உபகரணங்களாகின்றன.

நன்றாகப் பயிற்சி பெற்ற ஆண் தன்னை விட 4 மடங்கு எடை கொண்ட இரையைத் தனதாக்குகிறது. அதே சமயம் பிற உயிரினங்கள் வேட்டையாடியதை இவை ஒருபோதும் திருட முற்படுவதில்லை.

மிஞ்சிய உணவை, இலை தழை, மண் போன்றவை கொண்டு மூடிவிட்டு தேவைப்படும்போது எடுத்து உண்கிறது.

error: Content is protected !!