உலகத் தாய் மொழி தினம் – பிப் = 21

உலகில் பேசப்படும் மொழிகள் பொது மொழி தாய்மொழி என வகைப்படுத்தப்படுகிறது. உலக அளவில் 100 ஆண்டுகளுக்கு முன் 6,200 ஆக இருந்த மொழிகள் இன்று 3,000க்கும் குறைவாக குறைந்துள்ளதாக மொழியியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட, 22 மொழிகள் அதிகாரப்பூர்வமாக உள்ளன. இந்நிலையில் உலகில் உள்ள மொழிகளுக்குள் ஒரு தொடர்பை ஏற்படுத்தவும், ஒற்றுமையை வளர்க்கவும் ஆண்டுதோறும் பிப்., 21ம் தேதி உலக தாய்மொழி தினம் யுனெஸ்கோ அமைப்பால் கடைபிடிக்கப் படுகிறது.இன்றைய உலகில் 6 ஆயிரம் மொழிகள் உள்ளன. இதில் 1,500 மொழிகள் ஆயிரம் பேருக்கு கீழ் பேசுபவை. 3 ஆயிரம் மொழிகள் பத்தாயிரம் பேருக்கும் குறைவானோர் பேசுபவை. ஆனால் தமிழ் மொழியை 7 கோடி பேர் பேசுகின்றனர். உலகில் 94 நாடுகளில் தமிழ்பேசுபவர்கள் உள்ளனர். மாதம் ஒரு தாய்மொழி அழிகிறது. தாய்மொழி அழிவதை தடுக்கத்தான் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. –
இந்தியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின், பாகிஸ்தானில், “உருது மொழி’ அங்கீகரிக்கப்பட்ட மொழியாக இருந்தது. 1952ம் ஆண்டு அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் (தற்போது வங்கதேசம்) உருது மொழிக்குப் பதிலாக வங்க மொழியை அங்கீகரிக்க வேண்டும் என்று பெரும்பான்மை யான மக்கள் கோரிக்கை தெரிவித்தனர்.கடந்த 1952 பிப்., 21ம் தேதி பாகிஸ்தான் அரசின் ஊரடங்கு உத்தரவையும் மீறி டாகா பல்கலை மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் நான்கு மாணவர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலியான மாணவர்களின் நினைவாக யுனெஸ்கோ அமைப்பு 1999ம் ஆண்டு இத்தினத்தை உருவாக்கியது.
மேலும் தாய்மொழி, தேசிய மொழி மற்றும் தொடர்பு மொழி என பொதுவாக மூன்று விதமான மொழிகள் ஒருவருக்கு தெரிந்திருந்தால் எங்கு வேண்டுமானாலும் வாழ்வதற்கு துணையாக இருக்கும் என அறிஞர்கள் கூறுவர்.ஆனால், தொடர்புகளுக்காக உருவான மொழியின் பெயரால் இனவாதம் துவங்கியது துரதிஷ்டமானது. உலக மக்களால் பயன்படுத்தப்படும் அனைத்து மொழிகளுக்கும் பாதுகாப்பும் உரிய மரியாதையும் அளிக்க வேண்டும். எந்த மொழியையும் அழிக்கக் கூடாது.”ஒருவர் பல மொழிகளை தெரிந்து கொள்ளவும் வெளிநாட்டு மொழிகளை கற்றுக் கொள்ளவும் மொழி பெயர்ப்பு மூலம் அமைதியை உருவாக்கவும்’ இத்தினம் வலியுறுத்துகிறது.
சமீபத்தில் தனியார் நிறுவனத்தினர் எளிதாக வாசிக்கும் வகையில் 8 வரிகள் கொண்ட பத்தியை வடிவமைத்து தமிழகத்தில் உள்ள, 28 மாவட்டங்களில் பயிலும் பள்ளி மாணவர்களிடம் வாசிக்க கொடுத்தனர்.இந்த ஆய்வில் முதல் வகுப்பில் படிக்கும் 43.4 சதவீத குழந்தைகளால் மட்டுமே தமிழ் எழுத்துக்களை அடையாளம் காண முடிகிறது. 2ம் வகுப்பு படிக்கும் 43.6 சதவீத குழந்தைகளால் மட்டுமே வார்த்தைகளை வாசிக்க முடிகிறது. 5ம் வகுப்பு படிக்கும் 29.9 சதவீத குழந்தைகளால் மட்டுமே 2ம் வகுப்பு கதைகளை வாசிக்க முடிகிறது. என்ற அதிர்ச்சியான தகவல் தெரிய வந்தது.தமிழை தாய்மொழியாக கொண்ட தமிழகத்தில் தமிழ் எழுத்துக்களை கூட மாணவர்களால் வாசிக்க முடியாத நிலையில் இருக்கின்றனர் எனில் நம் தாய்மொழி பற்று குறித்த கேள்வி எழுகிறது. மொழியை அறிதல் வேறு; அறிவை வளர்த்தல் வேறு.”தாய் மொழி கண் போன்றது; பிற மொழி கண்ணாடி போன்றது’ என்பது பொன்மொழி. கண்ணாடிகளுக்காக கண்ணை இழக்காமல் வாழ்வது குறித்து வளரும் தலைமுறைக்கு வழிகாட்டுவோம்.